Sunday, December 13, 2015

சேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண்மைகள்! - மருதன்

சென்னை பெருமழைக்கு அதிகபட்ச பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பவை சென்னை சேரிகள்தான். பேரிடர் தருணங்களில் மட்டுமல்ல, அன்றாட பொழுதுகளிலும் சேரிகள் என்றால் பாதிப்புகளுக்கு ஆளானவையே! மழை, வெள்ளம், நிவாரணம், நிர்வாகக் கோளாறுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம், சென்னையில் பெருகியுள்ள சேரி பகுதிகளை எப்படிக் கையாள்வது என்பதுதான்.
சட்டத்துக்கு விரோதமாக அமைந்துள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்கிறார்கள் சிலர். ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஆனால் சேரி  மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியமர்த்தவேண்டும் என்கிறார்கள் வேறு சிலர். எது சரியான தீர்வு? இந்தக் கேள்விக்கு விடை தெரியவேண்டுமானால் சேரிகள் பற்றிய சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

 1.    சேரி என்றால் என்ன?

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிராத பகுதியே சேரி. முறையாகக் கட்டப்பட்ட வீடு, சாலை, குடிநீர், கழிப்பறை, வெளிச்சம், காற்றோட்டம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத, பல சமயங்களில் மின்சாரமும் இல்லாத சுகாதாரமற்ற ஓர் இருண்ட பகுதி இது. 

 2. சேரியில் யார் வசிக்கிறார்கள்?

வர்க்கரீதியில் பார்த்தால் வறுமையில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். சாதி அடிப்படையில் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித் பிரிவினர். பெரும்பாலும் கல்லாதவர்கள். பெரும்பாலும் உடலுழைப்பே அவர்களுடைய ஒரே வாழ்வாதாரம். பெரும்திரளானவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்வதால் உடலாலும் உள்ளத்தாலும் சேரி மக்கள் பல வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

 3.  சேரி எப்படி உருவாகிறது?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் கிராமப்புறங்களைவிட நகரங்களில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் 217 மில்லியனில் இருந்து 377 மில்லியனாக மக்கள் தொகை நகரங்களில் அதிகரித்திருக்கிறது. 2031-ல் இந்த எண்ணிக்கை 600 மில்லியனாக உயரும் என்று சொல்லப்படுகிறது. 

கிராமங்களைவிட நகரங்கள் துரிதவேகத்தில் வளர்வதற்குக் காரணம் அரசு அமைப்புகள் அங்கே மையம் கொண்டிருப்பது. அதைவிட முக்கியம், தொழில்மயமாக்கல் அளிக்கும் பொருளாதார சாத்தியங்கள். ஆலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள் என்று பலவும் நகரங்களில் இயங்கிவருவதால் கிராமப்புற மக்கள் நகரங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 1901-க்கும் 2001-க்கும் இடையில் நகர்புற மக்கள் தொகை பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இப்படி நகரங்கள் வளரும்போது நகரத்து மக்கள் வசிப்பதற்கான இருப்பிடங்களும் அதிகரிக்கின்றன. நகரத்தையும் நகரத்து மக்களையும் நம்பி அவர்களைச் சார்ந்து தங்கள் வாழ்வைக் கட்டமைத்துள்ள பெரும் திரளான உழைக்கும் பிரிவினரால் நகரங்களில் வாழ முடிவதில்லை. இவர்களுடைய வருமானத்துக்கு ஏற்ற வீட்டு வாடகை கிடைப்பதில்லை. எனவே, தங்ளுடைய பணியிடங்களுக்கு முடிந்த வரை அருகில் உள்ள பகுதிகளில் இவர்கள் குவியல் குவியலாகக் குடியமர்கிறார்கள். தங்களுடைய வருமானத்தை நகர வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் உயர்த்திக்கொள்ளும் திராணி அவர்களுக்கு இல்லை என்பதால் தங்கள் வாழ்க்கை தரத்தைத் தாழ்த்திக்கொள்ள முடிவுசெய்து சேரிப் பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி என்று இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் உள்ள சேரிகளின் பொதுவான இலக்கணம் இதுதான். 

 4.    இந்தியாவில் மட்டும்தான் சேரிகள் உள்ளனவா?

நகரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சேரிகளும் இருக்கின்றன. ஒப்பீட்டளவில் வளர்ந்த நாடுகளில் உள்ள சேரிகள் இங்குள்ள சேரிகளைவிட அதிக வசதிகளைக் கொண்டிருக்கும். இந்தியாவில் சேரிகளில் வசிப்பவர்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதிகம் பேர் என்றால் அமெரிக்க சேரிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கறுப்பின மக்களும் மற்ற சிறுபான்மையினரும் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி வந்து சேர்ந்த தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.

ஓர் ஆய்வின்படி, அமெரிக்காவில் 30% அமெரிக்கக் குடும்பங்கள் சராசரி வாழ்க்கைத் தரத்தைவிட குறைந்த தரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் சேரிகளில் வசிப்பவர்கள். ஸ்வீடனில் உடைந்த தகரங்களையும் அட்டைப் பெட்டிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீடுகளில் ஏழை மக்கள் வசித்து வருகிறார்கள். ஹாங்காங்கில் வானைத் தொடும் பளபளப்பான கட்டடங்களுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான குடிசைகளையும் சேரிப் பகுதிகளையும் காணமுடியும். சிங்கப்பூரில் லட்சக்கணக்கானவர்கள் பரிதாபகரமான வாழ்விடங்களில் வசித்து வருகிறார்கள்.

உலக மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால் அதில் பாதிப்பேர் நகரவாசிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சேரிகளில் வசிக்கிறார்கள். மூன்று வகையான சேரிகள் உலகில் இருக்கின்றன. 

 ·    தொடக்கத்தில் இருந்தே வளர்ச்சியடையாத, பின்தங்கிய, பாழடைந்த கட்டடங்களைக் கொண்டிருக்கும் பகுதிகள். மெக்ஸிகோவில் இத்தகைய சேரிகள் உள்ளன.

 ·    ஒரு பகுதியில் இருந்து நடுத்தர, உயர் வர்க்க மக்கள் பல்வேறு காரணங்ளால் வெளியேறிய பிறகு அங்கே எஞ்சியுள்ள குடியிருப்புகள் தேக்கமடைந்து சேரிகளாகச் சுருங்கிப்போகின்றன. அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியில் இத்தகைய சேரிகளைக் காணலாம். 

 ·    ஒரு வர்த்தகப் பகுதி திடீரென்று வீழ்ச்சியடையும்போது அந்த வர்த்தகத்தை மையப்படுத்தி சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளும் வீழ்ச்சியடைகின்றன. இந்த வீழ்ச்சி அந்தப் பகுதிகளைச் சேரிகளாக உருமாற்றுகின்றன. அதன் விளைவாக, சமூக விரோதிகள், குடிகாரர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் ஆகியோர் இங்கு பெருகுகிறார்கள். இத்தகைய பகுதிகள் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ளன.
 
 5.    இந்தியாவில் சேரிகளின் நிலை என்ன?

இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேரிகள் அமைந்துள்ளன. சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வும் சமமற்ற வளர்ச்சியும் சேரிகளை வலுப்படுத்துகின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டன் இந்தியாவை ஒரு காலனி நாடாக உருமாற்றத் தொடங்கியபோதே சேரிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன. நகரங்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அப்போதைய வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்க, கிராமத்து மக்கள் பெரும் திரளாக நகரங்களை நோக்கி வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்து உழைப்பை உறிஞ்சிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்திய காலனிய அரசு தங்குமிடம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர்களுக்கு அளிக்காமல் புறக்கணித்தது.

19-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகளில் ஆலைகள் தொடங்கப்பட்டபோது அவற்றில் பணியாற்றுபவர்களுக்காக அருகில் சில தாற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பெரும் திரளான தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தங்கியிருந்த இந்தக் குடியிருப்புகள் குறுகலாகவும் சுகாதாரமற்றவையாகவும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதவையாகவும் இருந்தன. மும்பை, டெல்லி, சென்னை என்று பிற இடங்களிலும் இத்தகைய மோசமான தங்குமிடங்களைக் கொண்ட சேரிகள் உருவாகத் தொடங்கின. நகரங்கள் நான்கு கால் பாய்ச்சலில் வளர்ந்தபோதும் இந்தச் சேரிகளின் நிலைமை மாறவேயில்லை. வளமும் வறுமையும் எப்படி ஒரே இடத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகத் திகழும் மும்பை.

உலகில் உள்ள மோசமான சேரிகள் என்று கணக்கிட்டால் அவற்றில் பல இந்தியாவில் அமைந்துள்ளதைக் காணலாம். சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி என்று தொடங்கி இந்தியா முழுவதும் பரவியுள்ள சேரிகளின் சில பொதுத்தன்மைகளைக் கீழே காணலாம்.

 ·    சேரிகளில் குடியிருப்பவர்கள்தாம் அவற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. பல பகுதிகளில் மக்கள் வாடகை செலுத்தி வசிக்கிறார்கள்.

 ·    கல் கட்டங்களைக் கொண்டிருக்கும் குடியிருப்புகள் தொடங்கி குடிசைகள், அட்டைப் பெட்டிகளையும் தார்பாலின் ஷீட்டுகளையும் தகரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் வரை பலவிதமான கட்டுமானங்களை சேரிகள் கொண்டிருக்கின்றன.

 ·    மும்பையில் கோலிவாடா என்னும் பகுதியில் மீனவர்கள் கட்டிய நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் சேரிகள் உள்ளன. பல மண் குடிசைகளில் முனிசிபல் கார்ப்பரேஷன் பணியாளர்கள் தொடங்கி பல தரப்பட்டவர்கள் தங்கியிருக்கிறார்கள்.

 ·    பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த பல குடும்பங்கள் பழைய டெல்லியில் வசித்து வருகின்றனர். 

 ·    சென்னை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்கள் வளர்ச்சியடைந்தபோது அங்குள்ள சேரிகளின் எண்ணிக்கையும் வளர்ந்தன. புதிதாக உருவான சண்டிகரில்கூட சேரிகள் உருவாகியுள்ளன.

 ·    சேரிகளில் வசிக்கும் பெண்களின் நிலையும் குழந்தைகளின் நிலையும் மிகவும் பரிதாபத்துக்குரியவை. விவரிப்புக்கு அப்பாற்பட்ட கொடுமையான சூழலில் அவர்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். 

 6.    சென்னையில் சேரிகளின் நிலை என்ன?

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் என்று தொடங்கி சென்னையின் பல இடங்களில் சேரிகள் அமைந்துள்ளன. 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் முக்கியப் பணி சேரிகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதுதான். இந்த வாரியம் உடனடியாக 1202 சேரிகள் இருப்பதாக அறிவித்தது. 1985 வாக்கில் மேலும் 17 சேரிகளை இது கூடுதலாகக் கண்டறிந்தது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு புதிதாக எந்த சேரியும் கண்டறியப்பட்டு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே சென்னையில் மொத்தம் எத்தனை சேரிகள் உள்ளன என்னும் கேள்விக்கு அதிகாரபூர்வமாக மேலே உள்ள எண்ணிக்கையை மட்டுமே அளிக்கமுடியும். 1985க்குப் பிறகு சென்னையில் உருவான எந்தவொரு சேரியும் கணக்கில் கொள்ளப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட சேரிகளின் நிலைமையே மோசமாக இருக்கும்போது, அரசின் கவனத்துக்கே வராத சேரிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை என்னாகும்?
 7.    யார் காரணம்?
ஒரு நாட்டின் அரசியல், சமூகப் பொருளாதாரக் கொள்கைகளே நகரங்கள் உருவாவதற்கும் அதன் நீட்சியாக சேரிகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பிரிக்கமுடியாதபடி இந்த இரண்டும் சேர்ந்தே இருப்பதையே நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அதனால் நகரங்களின் பாதிப்புகள் அனைத்தையும் சேரிகள் பகிர்ந்துகொள்கின்றன. அதே சமயம் சேரிகளின் பிரச்னைகள் அனைத்தையும் நகரங்கள் எதிர்கொள்கின்றன என்று சொல்லமுடியாது. 

தற்போது நடைபெறும் நகர்புற வளர்ச்சி என்பது திட்டமிடப்படாதது. நகரங்களின் விளிம்புகள் தொடங்கி அவற்றின் மையப் பகுதிகள் வரை பரவலாக அனைத்து இடங்களிலும் காற்றும் நிலமும் நீரும் மாசடைந்திருக்கின்றன. சட்டம், நகர்புரத்துக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விதிகள் என்று அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறியே நகரங்களில் பெரும்பாலான கட்டடமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. நீர் நிலைகள், விவசாய நிலங்கள் என்று தொடங்கி சுற்றுச்சூழல் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இந்த அழிவின் விளைவுகளையும் அனுபவித்துவருகிறோம். 

பிழையான நகரமயமாக்கல் கொள்கைகளே சேரிகளை உருவாக்குகின்றன. இந்தக் கொள்கைகளுக்கு முதலில் பலியாகிறவர்கள் சேரி மக்கள்தாம். நகரங்களின் அழுத்தம் சேரிகளைப் பாதிப்பதைப் போலவே சேரிகளின் அழுத்தம் நகரங்களைப் பாதிக்கின்றன. நகரமயமாக்கலுக்கு நாம் கொடுக்கும் தவிர்க்கவியலாத விலை இது. 

 8.   என்ன சொல்கிறார்கள்?

இடதுசாரிகள் மட்டுமல்ல வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் பலரும்கூட சேரி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டிய தேவையை அங்கீகரிக்கிறார்கள். மருத்துவ சுகாதார தேவைகளுக்காக அரசு செலவழிக்கும் தொகையை வெகுவாகக் குறைக்கவேண்டுமானால் சேரி மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்தாகவேண்டும் என்பதே அவர்களுடைய வாதம்.

முன்னதாக, மில்லினியம் திட்டம் என்றொன்றை ஐ.நா மிகுந்த ஆரவாரத்துடன் முன்வைத்தது. 2015-ம் ஆண்டுக்குள் சேரிப்பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும், 2020க்குள் குறைந்தது 100 மில்லியன் சேரி மக்களின் வாழ்நிலை கணிசமாக முன்னேற்றப்படும் ஆகியவை அந்த லட்சியங்களில் இடம்பெற்றன. ஆனால் இவை எதுவும் நிறைவேறவில்லை.
 9. சேரிகளால் பிரச்னைகளா?

சேரிகள் நகரங்களைச் சார்ந்திருப்பதைப் போலவே நகரங்களும் சேரிகளைச் சார்ந்திருக்கின்றன. குறைந்த ஊதியத்தில் சேவைகளை அளிப்பவர்கள் ஒவ்வொரு நகரத்துக்கும் தேவைப்படுகிறார்கள். வீட்டு வேலை, கட்டுமானப் பணிகள், துப்புரவுப் பணிகள் என்று தொடங்கி பல்வேறு சேவைகளுக்கு சேரி மக்களையே நகரங்கள் சார்ந்திருக்கின்றன.  2013-ம் ஆண்டு 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது. எங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் வேலைக்கும் நாங்கள் சேரிப் பகுதிகளில் உள்ள மக்களையே சார்ந்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பில் கலந்துகொண்ட மூவரில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

 10.  என்ன செய்யவேண்டும்?

சேரி என்பது நகரத்தின் பிரச்னை அல்ல. நகரம் தன்னுடைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கி வைத்துள்ள ஒரு தீர்வுதான் சேரி. சேரியைச் சரிசெய்யாமல், சேரியின் சவால்களை எதிர்கொள்ளாமல் நகரம் மட்டும் தனியே முன்னேறிவிடுவது சாத்தியமில்லை. நாட்டில் ஒரு பகுதி மக்கள் ஏழையாக இருக்கும்போது, ஒரு பிரிவினர் பசியோடு இருக்கும்போது, பெரும் திரளான மக்கள் சுகாதாரமற்ற சூழலில் வாழும்போது மற்றொரு பிரிவினர் மட்டும் வளர்ச்சியைப் பெற்றுவிடமுடியாது. சமூகம் என்பது அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியது. அனைத்துப் பிரிவினரும் ஒருசேர முன்னேறினால்தான் அது ஆரோக்கியமான வளர்ச்சி. 

அடுத்த முறை சேரிப் பகுதி ஒன்றைக் கடக்க நேரும்போது உங்கள் காதுகளையும், கண்களையும், மனதையும் முழுக்கத் திறந்து வைத்திருங்கள். இந்த உண்மை புரியும்!


விகடன்

0 comments: