டாட்டூ நல்லதா?
டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்திக்கொள்ளுதல், இப்போது இளைய தலைமுறை மத்தியில் ஃபேஷன்! சில மணி நேரங்களில் விதவிதமான டிசைன்கள், பெயர்களை டாட்டூவாகக் குத்திக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாகப் பலரும் கருதுகிறார்கள்; நாகரிக மோகத்துக்காக டாட்டூஸ் குத்திக்கொள்கிறார்கள். சிலரோ, மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி, ஸ்பெஷலாகக் காட்டிக்கொள்வதற்கும், ஒரு செய்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் டாட்டூஸ் குத்திக்கொள்கின்றனர். இந்த டிசைன்கள் சருமத்தில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை; சமயத்தில் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதுதான் பிரச்னையே!
டாட்டூஸ் குத்திக்கொள்வது புதிய விஷயம் இல்லை. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்தக் காலத்தில் இருந்தே காணப்படும் ஒரு முறை. பொதுவாக, முன் கைகள், புஜம், மார்பு, பெருவிரல், புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தாங்கள் விரும்பும் தெய்வம் அல்லது விலங்குகளின் படங்களையோ அல்லது தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களையோ வரைந்துகொள்வார்கள். பச்சை குத்திக்கொள்பவர்களில் 10-ல் ஒருவருக்கு அரிப்பு, வீக்கம், நோய்த்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பச்சை குத்தும் முறைமருந்துப் பொருட்களை கூரிய ஊசி முனையில் வைத்து, தோலின் மேல்புறத்தில் தீட்டுவார்கள். இது, மருந்துப் பொருட்களுக்கு ஏற்ப நிறம் மாறும். அந்த நிறமானது மேல் தோலின் உட்பகுதியை அடைந்ததும், நிலையாக அப்படியே இருக்கும். இன்னும் சற்று ஆழத்தில் உட்தோலில் ஊசியைச் செலுத்தினால், எந்தக் காலத்திலும் அழியாமல் நிலையாக இருக்கும். டாட்டூஸ் வரைவதில் தேர்ந்த கலைஞர்களிடம் பச்சை குத்திக்கொள்வது நல்லது. அங்கு, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஊசியைக்கொண்டு பச்சை குத்தப்படுகிறதா, பச்சை குத்தும் கலைஞர் கையில் பாதுகாப்பு கையுறை அணிந்திருக்கிறாரா, ஒருமுறைக்கும் மேல் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
சிலர், உடலின் எல்லா இடங்களிலும் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். இதனால், மெல்லிய ரத்தக் குழாய்கள், நரம்புகள் மீது ஊசி படுவதால், ரத்தக்கசிவு ஏற்பட்டு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. சிவப்பு வண்ண டாட்டூவில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், சருமப் பாதிப்பு உண்டாகலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், டாட்டூ இருக்கும் இடத்தில் ஸ்கேன் தெளிவாகத் தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. மிக அரிதாகச் சிலருக்குத் தோல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.
பச்சை குத்தியதை அழித்தல்
சித்ரமூல வேரை அரைத்துப் பச்சை குத்திய இடத்தில் பற்றிட்டால், அந்த இடத்தில் புண் உண்டாகும். அந்த புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை வைத்துவந்தால் சரி செய்யலாம். குன்றிமணி விதையை அரைத்தும் தடவலாம். சிரட்டைத் தைலம் என்ற மருந்தை பஞ்சில் வைத்துப் பற்றிட்டால், அந்த இடத்தில் புண் உண்டாகும். அந்தப் புண்ணில் தேங்காய் எண்ணெய் அல்லது புங்கன் தைலம் வைத்து வந்தால், விரைவில் குணமாகும். இந்த மூலிகைகளால் தோலில் மேற்பகுதியில் பச்சை குத்திய அடையாளங்கள் மட்டுமே ஓரளவு மறைய வாய்ப்பு உள்ளது. இந்த சிகிச்சை புண்ணினை உண்டாக்கும் முறை. எனவே, சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி செய்வது பாதுகாப்பானது.
- ர.ரஞ்சிதா
பச்சை அபாயம்
ஊசியை சரியாகத் தூய்மை செய்யாமல், அதை மற்றவர்களும் பயன்படுத்துவதால் தடிப்பு, புண், கட்டி, பச்சை குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், பால்வினை நோய்கள் போன்ற பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
பச்சை குத்தப் பயன்படும் பொருட்கள்
கரித்துண்டு (கார்பன்), சைனா மை, இந்தியா மை போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை நிறத்தில் தீட்டுகிறார்கள்.
குரோமிக் ஆக்சைடு பயன்படுத்தி பச்சை நிறத்தில் தீட்டுகிறார்கள். மெர்குரி (பாதரசம்), காட்மியம், டின், அயன் ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் ஆகிய ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன
thanks vikatan
0 comments:
Post a Comment