சக்கணையனுக்கு பறிமாறிக் கொண்டிருந்த ரெங்கநாயகிப் பாட்டிக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அவனைப் பார்த்துக் கேட்டாள்: ‘‘ஏம்பா சக்கணைங்கிறது எந்த சாமி பேரு?’’
‘‘அது சாமி பேரு இல்லேம்மா… ‘சக்கணை’ங்கிறது எங்க ஊரோட பேரு. ஆனா, அந்த ஊரு அழிஞ்சிப் போயிட்டும்மா’’ என்றான் சக்கணையன்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துரசாபுரம் தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.
ஊரின் பெயரைக் கொண்டு அந்த ஊர்க்காரர்களைக் கூப்பிடுவது கம்பர் காலத்திலிருந்தே இருந்து வருவதுதான்.
அந்த ஊரு அழிந்துபோனது எதனால்? தாத்தாவுக்குத் தெரிய வேண்டும் இப்பொ.
கரையான்களின் கடுந்தொல்லையால அங்கே வீடுகட்டி இருக்க முடியாமல் போனது.
ராத்திரி பாய் விரித்துப் படுத்தால் பாயைக் கரையான் அரித்துத் தின்றிருக்கும்.
பாயே வேண்டாம்டா... என்று துணிவிரித்துப் படுத்தால் துணி காணாமல் போயிருக்கும்.
வீடுகளின் கூரையை எல்லாம் கரையான்கள் அரித்துத் தின்ன ஆரம்பித்துவிட்டது. கதவு, சன்னல் என்று ஒன்றைக்கூட பாக்கி வைக்கவில்லையாம்.
அந்த ஊர்க்காரர்கள் எல்லாம் ஒண்ணுகூடி யோசித்தார்களாம்.
கரையான் சாமிக்கு ஒரு கோயில் கட்டி கும்பிட்டால் என்னவென்று ஒருவர் யோசனை சொன்னார்.
‘‘ஆமாம்! அதுதான் முறை. ஏதோ ஒரு தேவதைதான் கரையான் ரூபத்தில் வந்து நம்மைப் பழி வாங்குகிறது. எதை மறந்தாலும் சாமியை மறக்கலாமா…’’ என்று ஆளுக்கு ஆள் சொன்னார்கள்.
ஊர் கூடி கரையான் சாமிக்கு ஊருக்குள்ளேயே கோயில் கட்டினார்கள்.
இதில் என்ன வேடிக்கையென்றால் கரையான் சாமிக்காக ஊர்க்காரர்கள் ஒன்றுகூடி கட்டி முடித்த அந்தக் கோயிலையும் கரையான்கள் விட்டுவைக்கவில்லை என்பதுதான்!
‘‘ஊருக்கு முதமுதல்லெ முளைப் பிடிச்ச நேரம் சரியில்லப்பா…’’ என்றார் ஒரு வயசாளி.
அந்தக் காலத்திலெ விட்டில்கள் படையெடுத்து வந்து, ஊருக்குள்ள ஒரு பச்சைக் கூட இல்லாம வள்ளிசா மேஞ்சி தின்னுவிட்டதாகவும், அதன் காரணமாக மொத்த ஊருக்கும் பஞ்சம் ஏற்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கோம்.
‘‘இது என்னப்பா கொடுமெ. ஊரையே மேஞ்சி தின்ன கரையான்களப் பத்திக் கேள்விப்பட்டதே இல்லீயப்பா’’ என்று துரசாபுரம் தாத்தா ரொம்பவும் வருத்தப்பட்டார். அவரோட வருத்தம் கண்ணுல நல்லாவே தெரிந்தது.
‘துண்டக் காணோம்… துணியெக் காணோம்’னு ஓடுறதுங்கிறது இதுதாம் போலிருக்கு என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் தாத்தா.
அவரது காலத்தில் நடந்த இன்னொரு மிகப் பெரிய செயல் ஊருக்கு உள்ளேயும் ஊரைச் சுத்தியும் ஏகப்பட்ட வகை வகையான மரங்கள் வைத்து உண்டாக்கியதுதான்.
‘‘ஊருக்கு வடக்கேயும், தெற்கேயும் உள்ள ரெண்டு கம்மாய்க் கரைகளைச் சுற்றிலும் ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒரு மரம் வெச்சு வளர்க்கணும். அப்படி வளர்க்கிற மரம் அவங்களோட பிள்ளைங்க தலைமுறையும் பேசும்படியா இருக்கணும்’’ என்று எல்லார்கிட்டேயும் சொல்லிச் சொல்லியே மரங்கள் வைத்து வளர்க்க வைத்தார் தாத்தா.
ஏற்கெனவே இவர்களுடைய கல்யாணங்களில் ஒரு பால் மரத்தின் கிளை ஒன்றினை மணமகன் நட… மணமகள் நீர் ஊற்றுவார். இந்த சடங்கு சம்பிரதாயம் நடந்து முடிந்த பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது நடக்கும்.
மரங்களைத் தள்ளி வைக்க முடியாது மக்களின் வாழ்க்கையில்.
மரவையில் சாதம் போட்டுச் சாப்பிடுவது, மரத்தினால் ஆன அஞ்சறைப் பெட்டி, உட்காரும் மனைப் பலகை, படுக்கக் கட்டில், அந்தப் பலகையும்கூட கடம்பை மரத்தில் ஆனதாக இருக்கும். அவிழ்த்துவிட்ட குதிரை மணலில் படுத்துப் புரண்டு எழுந்திருப்பது போல கடம்பைப் பலகையில் இந்த மனுசக் கட்டையைப் போட்டு புரட்டிப் புரட்டி எழுந்தால் உடம்பு சொடுக்குப் போட்டதுபோல இருக்குமாம். இதை குறிப்பாக உணர்த்தவே சொல்லப்பட்டதுதான் ‘உடம்பை முறித்து கடம்பையில் கிடத்து’ என்கிற சொலவடை.
‘‘யோவ்… என்னமாச் சொகம் கண்டிருக்காம் இந்த மனுசப் பய பிள்ளெ!’’ என்று கண்கள் விரிய வியந்து சொல்லுவார் சுந்தரம் பிள்ளை வாத்தியார்.
மரங்களை என்னென்ன விதமா உபயோகித்திருக்கிறான் அப்போ இருந்த மனுசன்! உப்புப் போட்டு வைக்கறத்துக்கென்றே உப்பு மரவை அப்பல்லாம் இருந்தது. வாய் வைத்து ஊதுகிற சங்கு கனத்தில் நீட்டு அளவு கொண்ட மரவை ஒன்றை திருவனந்தபுரத்துவாழ் தமிழர்கள் வீட்டில் பார்க்க நேர்ந்தது. சாப்பிட உட்கார்ந்திருக்கும்போது சாப்பாட்டில் எதிலாவது உப்பு குறைவாக இருந்தால், அப்போது அந்த கை மரவையை எடுத்துக் கொஞ்சம் சாய்த்தால், அதன் மூக்கு நுனி வழியாக உப்பின் நீ சொட்டும்.
உப்பாக எடுத்துப் போட்டுக்கொண்டால் கூடும் அல்லது குறையும். அந்த மாதிரி மூக்குள்ள கை மரவை நமக்கு சொட்டு நீராக உப்பைத் தருவதால் சரியான அளவாக பொருத்தமாக அமைந்துவிடும். எப்படி பாருங்கள் இந்த ஏற்பாட்டை. வாழ்ந்து அனுபவித்தவர்களின் செய்கை அது!
ரொம்ப பேருக்கு வடிநீர்ப் பலகை, வடிமார் என்பதெல்லாம் என்னவென்றே மறந்துபோயிருக்கும். தொந்நூறு வயசுக்கும் மேற்பட்ட கிராமத்துத் தாத்தா பாட்டிகளிடம் கேட்டால் சொல்லுவார்கள்; இவை இரண்டும் எப்படி பயன்பட்டன என்று.
வடிநீர்ப் பலகை, வடிமார்… இரண்டுமே தாவரங்கள் கொடுத்த கொடைதான்!
thanks the hindu
0 comments:
Post a Comment