கமலஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
* தனது சரக்கை திருடிய போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தும் போதைப்பொருள் கும்பலின் தலைவன். சரக்கை திரும்பத் தருமாறு மிரட்டுகிறான். தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற போலீஸ் தந்தை போடும் திட்டமே படம் 'தூங்காவனம்'.
* கமல், த்ரிஷா, கிஷோர் மூவரும் போலீஸ் அதிகாரியாகவும், பிரகாஷ்ராஜ் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாகவும் நடித்திருக்கிறார்கள். த்ரிஷா நடிப்பில் வெளியாக இருக்கும் 50-வது படம் இது.
* 60 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு படப்பிடிப்புகளையும் முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்குச் சொல்லும் முன்பு படக்குழுவினர் அனைவருக்குமே நடிப்புப் பயிற்சியில் பங்கேற்றதால் தான் விரைவில் முடிக்க முடிந்தது என்கிறது படக்குழு
* தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தில் வரும் காரின் நம்பர் ப்ளேட், போலீஸ் உடை என அனைத்தையுமே மாற்றி தெலுங்கு படத்துக்கான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
* முரட்டுத்தனமாகாவும் அதே வேளையில் ஸ்டைலாகவும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். அப்போது, தமிழ் மக்களுக்காக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் இதே போன்றதொரு தோற்றத்தில் இருந்திருக்கிறார். கமலிடம் "உங்களது தோற்றம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று அந்த போராட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார். இயக்குநர் சொன்னதும், கமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.
* படப்பிடிப்பு நடைபெறும்போது எடிட்டிங்கும் அங்கேயே நடைபெற்று இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் முதல் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டார்கள். எடிட்டிங்கிற்கு என்று தனியாக எந்த ஒரு நாளையும் படக்குழு செலவிடவில்லை.
* ஒரு நாள் விபத்துக் காட்சிக்கு ஒப்பனை செய்ய ஒப்பனைக் கலைஞரை படக்குழுவினர் அழைக்கவில்லை. ஆனால் அந்த கலை கமலுக்குத் தெரியும் என்பதால், அவரே அன்று ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி இருக்கிறார்.
* இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மதுஷாலினி. இப்பாத்திரத்துக்கு மதுஷாலினி இருந்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
* படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கதைப்படி கிடையாது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமலே பாடியிருக்கிறார்.
* ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படத்துக்காக ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் பெரிய பார் செட்டப் போடப்பட்டு, அதனுள் பிரத்யேக காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
* இப்படத்தில் த்ரிஷாவின் வேடத்துக்கு பல்வேறு மேக்கப் செய்து பார்த்தார்கள். போலீஸ் வேடம் என்பதால் இறுதியில் எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் நடித்திருக்கிறார். கண்ணுக்குக் கூட மேக்கப் போடப்படவில்லை.
* 'ஸ்லீப்லஸ் நைட்' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்'. ப்ரெஞ்ச் படத்தில் பணியாற்றிய சண்டைக் கலைஞர்கள் அனைவருமே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள்.
* பாரில் உள்ள சமையல் செய்யும் இடத்தில் கமல் - த்ரிஷா - கிஷோர் மோதும் ஒரு சண்டைக்காட்சி இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
* படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான விளக்குகள் எல்லாம் போடாமால், படப்பிடிப்பு தளமே முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த வெளிச்சத்தில் மொத்த படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்.
* வேறு ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் போது, இயக்கத்தில் தலையிடுவார் கமல் என்பார்கள். அது குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்டால், "கமல் சாரிடம் இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது பாருங்கள் என்று கேட்டால், படத்தின் இயக்குநர் நீங்கள் தான், அதைப் பார்க்கத் தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன்" என்று கமல் சொன்னதாக தெரிவித்தார்.
* இப்படத்துக்கான ஒலிவடிவமைப்பை லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் செய்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை படக்குழு செய்திருக்கிறது.
* படத்தில் பார் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருப்பதால் சென்சார் அதிகாரிகள் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
* இதுவரை கமலின் தெலுங்கு படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் டப்பிங் பேசியிருக்கிறார். கமல் முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய படம் இது தான்.
* தெலுங்கில் நாகார்ஜுன் மகன் அகிலின் படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதால், 'தூங்காவனம்' தெலுங்கு பதிப்பு நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. அதுவரை ஆந்திராவில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு பதிப்புகளின் வெளியீடுமே இல்லை என்கிறது படக்குழு.
* 13 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் கமல் - அஜித் படம் வெளியாகிறது. 'தூங்காவனம்' - 'வேதாளம்' படங்களுக்கு முன்பாக ஒரே நாளில் வெளியான கமல் - அஜித் படம் 'பம்மல் கே.சம்பந்தம்' - 'ரெட்'.
-thanx- the hindu
0 comments:
Post a Comment