‘விசாரணை’, ‘பண்டிகை’, ‘சாட்டை’ எம்.அன்பழகன் இயக்கத்தில் புதிய படம் என்று தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக இருக்கிறார் நடிகை ஆனந்தி. ‘தி இந்து’வுக்காக அவரை சந்தித்தோம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘விசாரணை’ திரைப்படம் வெனீஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளதே?
‘விசாரணை’ படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரம்தான். அதனால் என் அம்மாகூட ஆரம்பத்தில் அதில் நடிக்க வேண்டாம் என்று தடுத்தார். எனக்கு வெற்றிமாறன் சாரின் படங்கள் மீது தனி பிரியம் உண்டு. என்னை தமிழில் அறிமுகப்படுத்திய பிரபுசாலமன் சாரிடம் இந்தப் படத்தில் நடிக்கலாமா? என்று கேட்டேன். அவர்தான், ’சின்ன ரோல் என்றாலும் பரவாயில்லை. மிஸ் பண்ணாமல் நடி’ என்று அறிவுரை கூறினார். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் ‘விசாரணை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் மூலம் வெற்றிமாறன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
‘விசாரணை’ படத்தில் தெலுங்கு பெண்ணாக நடித்ததால் தாய்மொழியான தெலுங்கிலேயே டப்பிங் பேசியுள்ளேன். தமிழ் படத்தில் என் சொந்தக் குரலில் டப்பிங் பேசியது இதுதான் முதல்முறை. அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரஜினி சார் படத்தை பாராட்டியதாக சொன்னார்கள். அப்படி பாராட்டப்பட்ட ஒரு படத்தில் என் பங்களிப்பு இருப்பது பெருமையாக இருக்கிறது. பிரபுசாலமன், வெற்றிமாறன், சற்குணம் போன்ற இயக்குநர்கள்தான் என் ஆசிரியர்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன்.
பிரபுசாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில், ‘கயல்’ நாயகன் சந்திரனுடன் ஜோடி சேர்ந்து நீங்கள் நடிக்கும் படம் எந்த அளவில் உள்ளது?
படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அது த்ரில்லர் படம். இயக்கு நர் அன்பழகன் மிகவும் இனிமை யானவர். படப்பிடிப்பில் திட் டவே மாட்டார். இதில் சின்னி ஜெயந்த் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இட்லி கடை நடத்தும், எளிமை யான வாழ்க்கையை பிரதி பலிக்கும் கதாபாத்திரம் எனக்கு. ஹீரோ சந்திரன், சின்னி ஜெயந்த், கிஷோர், ஹரீஸ், நான் என்று எங்கள் 5 பேரை சுற் றித்தான் கதை நகரும். பிரபு சாலமன் தயா ரிப்பு என்பதால் அவரது படங்களின் தனித்துவம் இதிலும் இருக் கும். என் கேரக்டர் தனித்து தெரியும். அதேபோல கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்துவரும் ‘பண்டிகை’ படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்து வருகிறேன். என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்ற கதாபாத்திரத்தை இதில் செய்திருக்கிறேன்.
படிப்பு முடிந்ததா?
எதற்காகவும் படிப்பை விட்டுக்கொடுக்க மாட்டேன். பிசினஸ் மேனேஜ்மென்ட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். படிப்பு பிடிக்கும் என்பதற்காக ‘ஷூட்டிங் நேரத்தில்கூட படிப்பீர்களா’ என்று கேட்கக்கூடாது. தேர்வு நேரத்தில் வீட்டில் படித்தாலே நிறைய மதிப்பெண்களை அள்ளலாம்.
சென்னை மழை எல்லோரையும் கலங்கடித்து விட்டதே?
சென்னையை இவ்வளவு சோகமாக பார்க்க பிடிக்கவில்லை. சீக்கிரமே எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்ப கடவுளிடம் பிரார்த்திப்போம். மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்ததை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.
‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் கதாபாத்திரத்தை விரும்பித்தான் ஏற்று நடித்தீர்களா?
இயக்குநர் அந்தப் படத்தின் கதையை சொல்லும் போது துணிச்சலான பெண் கதாபாத்திரம் என்று தான் விளக்கம் கொடுத்தார். ஆனால், படத்தில் இப்படி இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதை எல்லாம் சொல்லவில்லை. நல்லவேளையாக படம் பாசிடிவாக சென்றதால் நான் தப்பித்து விட்டேன். இனிமேல் மிகவும் ஆராய்ந்து கதை கேட்க வேண்டும் என்று எனக்கு உணர்த்திய படம் அது. இனி அதுபோன்ற கதைகளில் நடிக்க மாட்டேன்.
கோலிவுட்டில் உங்களுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும்தான் போட்டி என்று சொல்கிறார்களே?
போட்டிகள் இருக்கத்தானே வேண்டும். அது தவறான விஷயங்களுக்காக இருந்துவிடக்கூடாது. நானும், திவ்யாவும் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறோம். அவர் எனக்கு நல்ல தோழி. இப்போது தமிழில் கார்த்தி உள்ளிட்ட முக்கியமான ஹீரோக்களோடு அவர் நடித்து வருகிறார். எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி உருவானால் அதை ஏற்றுக்கொள்ளவே செய்வேன்.
தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தெலுங்கில் நடிப்பதை நிறுத்திக்கொண்டீர்களா?
தமிழ்ப் படங்கள் அளவுக்கு இயல்பான, நேர்த்தியான கதாபாத்திரங்கள் தெலுங்கில் அமைவதில்லை. எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரங்கள் தமிழில்தான் அமைகிறது. அதையே தொடர்ந்து செய்வோம் என்பதற்காகவே இங்கே கதைகளை கேட்டு நடித்துவருகிறேன். இதுபோன்ற கதாபாத்திரங்கள் அங்கு அமைந்தால் நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம்
thanks the hindu
0 comments:
Post a Comment