(சுரதாவின் பிரதான மாணவர்களில் ஒருவராகப் பயணித்த நினைவுகளிலிருந்து சில தருணங்கள் இங்கே...)
''அய்யா, காலையில புலமை அண்ணன் வீட்டுக்கு வருவீங்களா ?'' என்று அய்யா சுரதாவிடம் கேட்டேன்.
''போலாமே... புலமைதாசன் வீட்டுக்குப் போனா நாலு புத்தகத்தைப் படிக்கலாம். அவரு வீட்டம்மா வாய்க்கு ருசியா ரெண்டு தோசை சுட்டுப் போடுவாங்க. போகலாம்... ஆமா, பஸ்சுக்கு கைல சில்லறை வைச்சிருக்கதானே!’’ -இதுதான் சுரதா.
எவ்வளவுக்கு எவ்வளவு கம்பீரமானவரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எளிமையானவர்!
1995-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் ராஜராஜன் விருதை கவிஞருக்கு வழங்கினார். விருதோடு ஒரு லட்ச ரூபாய் பணமுடிப்பும் அளித்தனர். கவிஞருக்கு வாழ்த்து சொன்னேன்.
''வாழ்த்துறது இருக்கட்டும். திருவாரூர்காரர் (கருணாநிதி) வீட்டுக்கு வரச் சொல்லி கூப்பிட்டிருக்கார். போய்ப் பார்த்துட்டு வந்திடலாம். கொஞ்சம் பேரு கூட வர்றாங்க. நீயும் வா. அப்படி ஒரு தோரணையா போய் நிக்கணும். கவிஞன்னா சும்மாவா!” என்றார்.
கருணாநிதியுடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் அய்யா இப்படிச் சொன்னார், ''என்னமோ அந்தம்மா கைல விருது வாங்குனதே தப்புங்ற மாதிரி பொடி வைச்சுப் பேசுறார் என் ஊர்க்காரர். 'நீ ரெண்டு லட்ச ரூபாயும், இதே மாதிரி இன்னொரு தாமிர பட்டயமும் கூடுதலா கொடு. இதைக் கொண்டு போய் அந்தம்மா வீட்ல கொடுத்துட்டு வந்துடுறேன்’னு சொன்னேன். பேச்சையே காணோம். சரி விடு... வா... போயி ஒரு நல்ல டீ குடிக்கலாம்!” -இதுதான் சுரதா.
'இயற்பெயர் ராச கோபாலன். அது என்ன பெயர் சுரதா?’ என்று கேட்டதற்கு அவரே சொன்ன பதில் இது... ''அஞ்சல் அட்டைல எல்லாம் எழுதிட்டு கடைசில 'சுப்புரத்தினதாசன்’னு (சுப்புரத்தினம்- பாரதிதாசனின் இயற்பெயர்) கையெழுத்து போடுவேன். நம்ம பேரை போடலேன்னா சன்மானம் வேற முகவரிக்குப் போயிடுமில்லையா... அதான்.
ஒரு கட்டத்துல அவ்வளவு நீளமா எழுதுறது குறைஞ்சு, 'சு 'புள்ளி, 'ர' புள்ளி, 'தா' புள்ளினு போட்டேன். அப்புறம் அந்த ஆணிகளையும் (புள்ளி) புடுங்கிட்டேன். 'சுரதா’னு ஆகிருச்சு. இதுவும் நல்லாத்தானே இருக்கு!’’
thanks vikatan
0 comments:
Post a Comment