Saturday, November 28, 2015

ஆண்களுக்கும் இது அரிய வாய்ப்பு!- ‘ரா ஒன்’ /‘இஞ்சி இடுப்பழகி’. கதாசிரியர் கன்னிகா திலோன் பேட்டி

  • கன்னிகா
    கன்னிகா
ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்தின் ட்ரைலரில், உடல் பருமன் கொண்ட பெண்ணாகக் காட்சியளித்து அதிர்ச்சி தருகிறார் அனுஷ்கா. “உடல் எடை கூடுதலாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வைச் சுற்றி நடக்கும் கதை இது.


அவள் எதிர்கொள்ளும் வாழ்க்கை யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்ததாகத் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறேன். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வித்தை இதில் இருக்கிறது என்று கூறலாம்” என்கிறார் இந்தப் படத்தின் 29 வயது கதாசிரியரான கன்னிகா திலோன். இவர் லேசுபட்ட ஆளில்லை. எந்திரனுக்குப் போட்டியாக ஷாருக் கான் நடித்துத் தயாரித்த ‘ரா ஒன்’ படத்தின் திரைக்கதையில் பணியாற்றியவர். அவரிடம் உரையாடியதிலிருந்து...


திரைக்கதை எழுத்தாளராக உங்கள் பயணம் எப்படித் தொடங்கியது?



இந்திய சினிமாவில், பெண் திரைக்கதை எழுத்தாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். நான் பல புத்தகங்கள் வாசிப்பேன். சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நிறைய படிப்பதால், நிறைய எழுதுவேன். இரண்டு நாவல்கள் எழுதி வெளியிட்ட பின்னர், பாலிவுட்டில் ஷாருக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்துக்கு இயக்குநர் ஃபரா கான் உதவியாளராகப் பணியாற்றினேன். பின்னர் ‘ரா-ஒன்’ திரைப்படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறையைப் பற்றிய புரிதலும் ஆர்வமும் இருந்ததால் அங்கு தொடங்கிய பயணம் டோலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் தொடர்ந்தது. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளேன்.



இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தை உருவாக்க உங்களைத் தூண்டியது எது?



ஸ்வீட்டி (அனுஷ்கா) கதாபாத்திரம் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஏன் நம் வீட்டிலேயே நம்மோடு வாழ்கிற கதாபாத்திரம்தான். நான் சந்தித்த பெண்கள், தோழிகள், குடும்பப் பெண்கள் எனப் பலரும் தங்கள் உடல் எடை கூடுதலாக இருப்பதால் உணவுப் பழக்க வழக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அவர்களால் நினைப்பதை ருசிக்க முடிவதில்லை. தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா எனப் பல வழிகளில் உடல் எடை குறைக்க நேரம் செலவிடுகின்றனர். சுற்றி இருப்போரின் நகைச்சுவைக்கு இலக்காக மாறிவிடுகின்றனர்.



நான் பார்த்த, கவனித்த நிகழ்ச்சிகள் அவர்களைத் தாண்டி ஒரு சக பெண்ணாக என்னையும் பாதித்தன. ஒரு பெண் தன்னுடைய தோற்றத்தின் காரணமாக சமுகத்தால் எப்படிக் கையாளப்படுகிறாள் என்பது எனக்குப் புரிந்தது. அதை வைத்தே ஸ்வீட்டி கதாபாத்திரத்தைச் சித்தரித்தேன். மிக யதார்த்தமாகவும், க்யூட்டாகவும், தன் வாழ்க்கை அனுபவங்களை மிக உற்சாகமாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக அதை அமைத்தேன்.



இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் காணும் பெண் பார்வையாளர்கள் மனதில் தாழ்வுணர்ச்சி ஏற்படுமா?


உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்கள் படம் பார்க்கும்போது, கண்டிப்பாக அவர்களை இது நெகட்டிவாக பாதிக்காது, புண்படுத்தாது. ஏனெனில், படம் முழுவதும் ஜாலியாகவும் துருதுருப்பாகவும் ஸ்வீட்டி வருவாள். இன்னும் சொல்லப் போனால், படத்தில் உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்ணின் பாசிட்டிவ் சித்தரிப்பாக இந்தக் கதாபாத்திரம் இருக்கும்.



படம் பார்த்த பிறகு மிக உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எடை கூடிய ஒவ்வொரு பெண்ணும் தன்னை மேலும் நேசிக்கத் தொடங்குவாள். அப்படியானால் இது எடை கூடிய பெண்களுக்கான படம் மட்டும்தானோ என்று எண்ணிவிடாதீர்கள். இது நம் சமூகத்துக்குத் தேவையான படம். சிரித்துக்கொண்டே கொஞ்சம் சீரியஸாகக் கற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் தோள் மீது கைபோட்டுச் சொல்லித்தரும் படம்.


அனுஷ்கா கதாபாத்திரத்தைத் திரையில் காண்பிக்க ஸ்பெஷல் மேக் அப் தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவா?


ஹிரோயின் என்றால் ஸ்லிம்மாகவும் மாடர்ன் ஆகவும் சித்தரிக்கப்படும் இந்தக் காலத்தில், இக்கதையைத் தேர்வுசெய்து நடித்த அனுஷ்கா பாராட்டுக்களை அள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைக்கதை எழுத்தாளராக நான் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாகவே அனுஷ்கா இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தி அருமையாக நடித்துள்ளார். அனுஷ்கா இந்தப் படத்தில் தன்னுடைய முழு உழைப்பைத் தந்துள்ளார்.
ஸ்பெஷல் மேக்-அப் ட்ரிக்ஸ் ஒருசில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், முகத்தில் எல்லாம் ஸ்பெஷல் மேக் அப் போட்டு சதைப்பிடிப்பான தோற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதால் ‘வர்க் அவுட்’ செய்து உடல் எடையை ஏற்றியுள்ளார். நான் கதாபாத்திரத்தைச் சித்தரித்த விதத்தை இயக்குநர் பிரகாஷ் முழுமையாக ஏற்று அதற்கேற்ப படம் இயக்கியுள்ளார்.



படம் பார்த்த பிறகு ஸ்வீட்டி அனுஷ்கா மனதில் நிற்கும் கதாபாத்திரமாக இருப்பார். எடை கூடிய பெண்கள் எவ்வளவு அழகு என்பதைப் புரிந்துகொள்ள ஆண்களுக்கும் இந்தப் படம் ஒரு மயிலிறகு வருடலாக இருக்கும்.

-தஹிந்து

0 comments: