# எழுதி புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது.
# நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு, அப்படியே, அதனாலேயே பிரபலமாகி விட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்து தான். தரம் குறைந்து விட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்து விடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள்; எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?
# கதை எங்கே தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
# நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்தான். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு. எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்கிற சமயத்தில், அப்போது காஞ்சிபுரம் பக்கத்து கிராமத்தில் ஒரு நண்பி இருந்தாள். அவளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. திடிரென்று ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. நான் கிளம்பி ஓடுகிறேன். போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. எப்படியோ, விசாரித்து, விசாரித்து அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டேன். கதவைத் திறந்து உள்ளேப் போனேன். அவள் படுத்துக் கொண்டிருந்தாள். உடம்பு வயதேறி தளர்ந்துவிட்டது. என்னைப் பார்த்த மாத்திரத்தில், ''அட ராமாமிருதம் வந்தியாப்பா, எப்ப வந்த'' என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன். இது ஞாபக சக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில இருந்து கொண்டிருக் கிறேன் என்று அர்த்தமா; அல்லது அவர்களுக்கே உரித்தான ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஒரு சம்பந்தமா? எனக்குத் தெரியவில்லை. அவள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்? ஒரு நிமிடத்தில், ''நான்தான் ராமாமிருதம்'' என்று சொல்லக்கூட வழியில்லாமல் செய்துவிட்டாளே! இந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் எனக்கு முக்கியம். இதைத்தான் நான் சௌந்தர்ய உபாசகன் என்று சொல்கிறேன்.
நன்றி: தளவாய் சுந்தரம்
லா.ச.ரா.வின் மொழிச் சிதறல்கள்
# வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.
# அவன் அசைவற்று நின்றான். ஓடும் பாம்பை நெஞ்சில் அழுத்தினாற்போல் அக்கணம் நில்லென அந்தரத்தில் நின்றது. ஒரு கணம்தான். ஸ்தம்பித்த நேரம் மறுபடியும் தான் இழந்த வேகத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டு வெள்ளமாய் இறங்கிற்று.
# அங்கு எப்பவும் சூழ்ந்த மோனாகாராம் ஒரொரு சமயம், தாய் விலங்கு தன் குட்டியைக் கவ்வுவதுபோல், அதன் அகண்ட வாயில் அதைக் கவ்வுகையில், காளையின் இதயத்தில் புரியாத சாயா ரூபங்கள் தோன்றின. தலையை உதறிக்கொண்டு, உடலை நெறித்து, ஒன்றும் புரியாத களி வெறியில் வெகு வேகமாய் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகையில் அதன் குளம்புகள் தவறற்ற தாளத்தில் பூமியில் பட்டுபட்டெழுகையில், யெளவ்வனத்தின் ஜய பேரிகை முழங்கிற்று.
# கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி. உதயத்தின் முற்பொருள் நீ. உனக்கு அழிவில்லை. நான் இன்பத்தில் வாழ்த்தியும், துன்பத்தில் தூற்றியும் நீ என்றும் பெருகுவாயாக. நீ உமிழ்ந்த மாணிக்கமாய் ஒளியைத் திரும்ப விழுங்க நீ திருவுளம் பற்றிய தருணமே. காலம், இடம், பொருள், தவம், தத்துவம் என என் ப்ரக்ஞை கட்டி யாடும் வேடங்கள் அனைத்தும் என் அந்தத்தில் குலைந்து அவிந்து உன்னில் அடங்கிவிடும். ஓம் சாந்தி.
தஹிந்து
0 comments:
Post a Comment