முழுவதும் நாயகிகளை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ‘கரையோரம்’. சிம்ரன், நிகிஷா படேல், இனியா இணைந்து நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றி நிகிஷா படேலிடம் பேசியபோது..
‘கரையோரம்’ படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...
ஒரு பெண்ணின் பயணத்தைப் பற்றியதுதான் ‘கரையோரம்’. 8 கதாபாத்திரங்கள் படத்தின் பிரதான பாத்திரங்களாக இருக்கும். ‘அடுத்து என்ன நடக்கப்போகிறது’ என்ற எதிர்பார்ப்பு, படத்தின் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களுக்கு இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அனைவரையும் கவரவேண்டும் என்ற முனைப்பில் இதை உருவாக்கி இருக்கிறோம். என் திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். கதை அமைப்பு, ஒளிப்பதிவிலும் பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உடுப்பி கடற்கரையில் உள்ள வீட்டில் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சிம்ரனோடு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
சிம்ரன் கவுரவ வேடத்தில்தான் நடித்துள்ளார். ஒரு காட்சியை எப்படி உணர்ந்து நடிக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். என் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில்கூட தளத்திலேயே இருந்து, சிம்ரன் எப்படி நடிக்கிறார் என்று பார்த்தேன். பழகுவதற்கு மிகவும் மென்மையானவர்.
உங்களை தமிழ் படங்களில் அவ்வளவாக காணமுடிவதில்லையே?
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களுடன் நடிப்பதற்கு ஒரே நாளில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தமிழில் அப்படி அல்ல. இங்கு முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். இங்கு பெரிய படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்றால் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்க வேண்டும். நல்ல கதாபாத்திரங்கள், முன்னணி நடிகர்கள் அல்லது சிறந்த கூட்டணி உள்ள படத்தில் நடித்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை தமிழ் திரையுலகில் நுழைவதே மிக கடினம். இந்த சூழ்நிலையிலும், எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருவது சந்தோஷம்தான்.
லண்டனில் முன்னணி தொலைக்காட்சி நாயகியாக இருந்த உங்களுக்கு, இந்தியாவில் நாயகியாக நடிக்கும் ஆசை எப்படி வந்தது?
லண்டனில் தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்தாலும், இந்தியாவில், நம் சொந்த மண்ணில் நடிப்பதற்கு ஈடாகுமா! இந்திப் படங்கள் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எப்போதுமே வீடு திரும்பியதும், இந்தி படங்கள் பார்ப்பேன். இந்தியப் படங்களில் நடிப்பதுதான் என் கனவாக இருந்தது.
தொடர்ச்சியாக கவர்ச்சியாக நடிக்கி றீர்களே..
கவர்ச்சியாக நடிக்கும் ஆசை எனக்கும் இல்லைதான். ஆனால், ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவ்வாறு நடிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. மேலும், ஒரு படத்தின் காட்சிக்கு தேவைப்பட்டால் அவ்வாறு நடிப்பதற்கும் நான் தயங்குவதில்லை. இருந்தாலும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். அதற்கான முழு திறமையும் என்னிடம் இருக்கிறது.
தமிழில் எந்த நாயகனுடன் இணைந்து நடிக்க ஆசை?
தனுஷ் படங்கள் என்றால் ரொம்ப இஷ்டம். நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். எந்த பாத்திரம் என்றாலும் அற்புதமாக நடிக்கிறார். அவருடன் நடிக்க ஆசை. நாயகிகளில் அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும்!
thanks the hindu
0 comments:
Post a Comment