திருச்சியைச் சேர்ந்தவர் எபினேசர் ஜாய். படித்தது பனிரெண்டாம் வகுப்புதான். இன்றோ வெற்றிகரமான தொழில் முனைவர். தனது சொந்த தொழிலின் மூலம் 25 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளார். எப்படி இந்த இடத்திற்கு வந்தார். அவரது வெற்றிக்கு பின்னுள்ள அனுபவம் என்ன என்பதை குறித்து அவரிடம் கேட்டறிந்தோம்.
பனிரெண்டாவது படித்து விட்டு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் தொடர்ந்து படிக்க வசதியில்லை என்பதால் பாதியிலேயே கல்லூரி படிப்பை விட்டு விட்டேன். ஆனால் எந்த படிப்பும் இல்லையே என்ன செய்வது என்று சோர்ந்து விடவில்லை. காரணம் எனது சித்தப்பா பைகள் தயாரிக்கும் தொழிலை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அவ்வப்போது சென்று பைகள் தயாரிக்கும் தொழிலை கொஞ்சம் கற்று வைத்திருந்தேன்.
எனவே இந்த தொழிலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் இந்த தொழிலையும் தொழில் முறையில் செய்தால்தான் வருமானம் கிடைக்கும். பிழைப்புக்காக செய்தால் கடைசிவரை கரையேற முடியாது என்பது தெரிந்தது. எனவே இந்த தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டுமெனில் இந்தத் தொழிலில் உள்ள பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால்தான் சாத்தியம் என்பதை அறிந்து பம்பாய்க்கு ரயில் ஏறி விட்டேன்.
அங்கு பல தமிழ் நண்பர்களின் உதவியோடு பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து தொழிலில் பல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். ஒரு பை தயாரிக்க ஆகும் செலவு, அதற்கு எவ்வளவு விலை வைக்க வேண்டும், நஷ்டமடையாமல் தொழிலைக் கொண்டு செல்வது எப்படி என அந்த இடத்தில் இருந்து கற்றுக் கொண்டேன். தவிர மூலப் பொருட்கள் கொடுப்பவர்களின் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டேன்.
சில வருடங்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பிறகு அங்கிருந்து விலகி, சென்னை, பெங்களூரு என சில நிறுவனங்களில் வேலை செய்தேன். இப்போது இந்த நிறுவனங்களில் பைகள் தயாரிப்பது மட்டும் பார்க்காமல் மார்கெட்டிங் செய்வது குறித்தும் கற்றுக் கொண்டேன். பல ஊர்களுக்கு சாம்பிள் பைகளை எடுத்துச் சென்று ஆர்டர் பிடிக்க வேண்டும். அதுவும் பள்ளிக்கூடம் திறக்கும் சீசன்களில் தூங்குவதற்கு நேரம் இருக்காது. இரண்டு மூன்று மாதங்கள் பயணங்களிலேயே இருப்பேன்.
இப்படி இந்த தொழிலில் தயாரிப்பு வேலைகள், சந்தை, மூலப் பொருட்கள் வாங்குவது என எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு சொந்த ஊரான திருச்சிக்கே வந்து தனியாக தொழிலைத் தொடங்கினேன். கையிலிருந்து சொற்ப பணம் மற்றும் வங்கிக் கடனை முதலீடாகக் கொண்டு தொழிலை ஆரம்பித்தேன். ஆர்டர்களுக்கு ஏற்ப முன்பணம் வாங்கி விடுவதால் நஷ்டமடைய வாய்ப்பில்லை.
பள்ளி சீசன்களில் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டும். சில ஆர்டர்களுக்கு ஏற்ப கடின வேலை பார்த்தால்தான் நமது பெயர் வெளியில் நல்ல விதமாகச் செல்லும். இப்போது ஸ்கூல் பேக் தவிர, டிராலி சூட்கேஸ்கள், மீட்டிங் மற்றும் கான்பரன்ஸ் பைகள் போன்றவை தயார் செய்கிறேன். அன்று ஒற்றை ஆளாக தனித்து நின்றவன் இன்று 25 நபர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இந்த இடத்துக்கு வந்ததற்குக் காரணம் எனது கடின உழைப்புதான் என்பதை நம்புகிறேன்.
அதனால் நான் இன்னும் கூடுதலாக உழைக்கவே விரும்புகிறேன் என்றார். இன்னும் பலருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளரட்டும் இந்த தொழில் முனைவர்.
thanks the hindu
0 comments:
Post a Comment