ஒரு ஞானியிடம் “நீங்கள்தான் ஒன்றுமே வாங்க மாட்டீர்களே, பின் ஏன் கடைகளுக்குப் போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“என்னென்ன பொருட்கள் இல்லாமல் என்னால் நிம்மதியாக வாழ முடியும் என்று தெரிந்துகொள்ளவே போகிறேன்!” என்று அவர் பதில் அளித்தார்.
கடைகள் வீதியில் இருந்தால் அது கடைவீதி. கடைவீதியே ஒரு கட்டிடத்துள் இருந்தால் அதன் பெயர் மால். அப்படியொரு பெருங்கடையுள் காலை 11.30-க்கு குடும்பத்துடன் நுழைகிறேன். கையில் 5,100 ரூபாய்.
அந்த ஞானியின் ஞானத்தன்மையை என்னுடைய குடும்பத்துக்கும் ஊட்டியிருந்தேன். ஆனால், ஒரு ஹேண்ட்பேக் என் மனைவியின் ஞானத்தன்மையை சவாலுக்கு இழுத்துவிட்டது. “ஏற்கெனவே இருக்கிறதே!” என்று நான் முணுமுணுத்தேன்.
அப்போது அவள் ‘என் கனவை, அடையாளத்தைத் தொலைத்துவிட்டு, உன்னிடம் நிற்க வேண்டியிருக்கிறதே’ என்று ஜோதிகா, மஞ்சு வாரியர் பாணியிலான பார்வைகளைப் பார்த்தாள். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 1,200 ரூபாயை இழந்தேன்.
தொடர்ந்து ஸ்வீட்கார்ன், சிடி, ஐஸ்க்ரீம், ஆடைகள், செருப்பு, கரண்டி, முகப்பூச்சுக்கள்...என ஞானத்தன்மை பங்கப்பட்டுக் கொண்டே வந்து மதியம் 2.30-க்கு என்னிடம் மிஞ்சியது வெறும் 100 ரூபாய்கள் மட்டுமே. அப்படியானால், நான் இழந்தது ?
5,000 ரூபாய் என்று பதில் சொல்வதற்கு விசேஷமான அறிவு எதுவும் தேவையில்லை.
ஆனால், நான் எனது உடலின் எரிபொருளை கலோரிக் கணக்கிலும் வேடிக்கை பார்த்தல், அதிருப்தியடைதல், வாதம் புரிதல் போன்றவற்றால் மனதின் எரிபொருளையும் இழந்திருக்கிறேன். 3 மணி நேரத்தை இழந்திருக்கிறேன். எனது ஆற்றலையும் காலத்தையும் செலவிட்டுள்ளேன்.
ஆனால், என்ன செலவானது என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்கள் பண மதிப்பையே சொல்லியிருப்பார்கள். பணப் பார்வை கொண்டு இந்த விஷயத்தை அணுகி யிருக்கிறோம் என்பது இதன் பொருள்.
இது மட்டுமல்ல. அன்றாடம் வெகு சாதாரணமாக நாம் பணக் கண்கள் கொண்டு பார்க்கும் பல காட்சிகள் இருக்கின்றன.
“நல்லா இரு” என்று ஒருவர் ஆசி வழங்கினார் என்றால் நிறையப் பேருக்கு அதன் அர்த்தம் “கை நிறையப் பணத்துடன் வசதியாக இரு” என்பதுதான்.
“நல்ல தினமாக அமையட்டும்” என்றால் முதலில் தோன்றுவது ஏதோ புதையலின் சாவி கிடைப்பது போலவும், வராத கடன்கள் வசூலாகப் போவது போலவும், எதிர்பாராத அதிர்ஷ்டம் அமையப்போவது போன்ற காட்சிகள்தான்.
பெண் வீட்டுக்காரர்கள் பார்வையில் “நல்ல” என்பதன் பொருளே வேறு. “நல்ல இடம்” என்றால் கண்டிப்பாகப் பையன் கனமான பர்ஸைக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தமே அநியாயத்துக்குப் புழக்கத்தில் இருக்கிறது.
‘‘நன்றாக இரு’’ என்றால் நோயில்லாமல் இருத்தல், மகிழ்வாக இருத்தல் என்று எவ்வளவோ சொல்லலாம்.
“ நல்ல தினம்” என்றால் நீங்கள் எவ்வித விபத்துமில்லாமல், மோசமான சம்பவங்கள் இல்லாமல் திரும்பினாலேயே அது நல்ல தினமில்லையா...? நல்ல உழைப்பு, நல்ல பசி, நல்ல தூக்கம் என்று அமைந்த தினங்கள் நல்ல தினம் இல்லையா...? அப்படியொரு தினத்தை நாம் நல்ல தினம் என்று ஏற்றுக்கொள்வதே இல்லை. “பெரிசா வாழ்த்தினான் “நல்ல தினமா அமையட்டும்னு” விசேஷமா ஒண்ணும் நடக்கலியே...வழக்கமான தினமாத்தான இருக்குது. போனோம்; வந்துசேந்தோம்.” என்றே பலரும் நினைக்கிறோம்.
“ நல்ல இடம்” என்றால் பண்பட்ட குடும்பம், பையன் எவ்விதக் கெட்ட பழக்கமுமில்லாதவன், நற்குணங்களைக் கொண்டவன் என்று எத்தனை பேர் நினைக்கிறோம்? பெண் “ நல்ல இடம்” என்றால், எழுகிற எண்ணம் பெண்வீட்டார் பணம் காய்க்கும் மரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.
“தப்பா நினைக்காதீங்க...ஒரு சின்ன ஹெல்ப்”என்று துவங்கினால் நிறையப் பேருக்கு முதலில் வருகிற நினைப்பு அவர் பணம் ஏதாவது கேட்கிறாரோ என்பதுதான். பணம் சாராத உதவிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைக் கேட்கவும்கூட அவர் நினைத்திருக்கலாம். சக மனிதருக்குச் செய்யும் உதவிக்குக்கூடப் பணத்தை முன் நிறுத்துகிறோம்.
நாம் சந்நியாசிகள் இல்லை என்பதால் பணம் சார்ந்து பார்ப்பது அப்படி ஒன்றும் பாவகாரியமோ, மட்டகரமான செயலோ இல்லைதான். பார்ப்பவர்களும் மோசமானவர்கள் இல்லைதான்.
ஆனால், எல்லாவற்றையும் நாம் கரன்ஸிக் கண் கொண்டு பார்க்கும்போது, பணத்தால் தர முடியாத, பல நல்ல விஷயங்களை- வாழ்வின் அற்புதங்களைப் பார்க்கத் தவறிவிடுவோம்.
தவிர, பணம் சார்ந்த பார்வைகள், பணம் சார்ந்த பிரச்சினைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகளையே தரும். உங்களின் அக உலகில் கரன்ஸி இயந்திரங்கள் இயங்கிக்கொண்டே இருந்தால், அது நீங்கள் சுவாசிக்கும் காற்றிலும் கரன்ஸியின் மணத்தைக் கலந்து விடும்.
தவிர்க்கவே முடியாது என்பதற்காக எல்லாவற்றையும் பணம் சார்ந்தே பார்க்க வேண்டியதில்லை. சரியாகச் சொன்னால், நீங்கள், உங்களின் உள் அமைதி தேடி, உங்களுக்கான சந்தோஷம் தேடும் முயற்சிகளிலிலெல்லாம், பணம் இரண்டாம் இடத்தையே பிடித்திருக்கும்.
குழந்தையுடன் விளையாடுகிறீர்கள்.
நெருங்கிய நண்பனை, தோழியை வெகு காலத்திற்குப் பின் சந்திக்கிறீர்கள்.
பிரார்த்தனை செய்கிறீர்கள்.
வானில் நட்சத்திரங்களை ரசிக்கிறீர்கள்.
பணம் சந்தோஷம் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பணம் சாராத சந்தோஷங்களையும் அனுபவிக்கக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை முழுமை அடையும்.
“ நல்லாயிருக்கியா?” இதற்குப் பணம் சார்ந்து பதில் சொல்கிறவர்கள் “ஏதோ இருக்கேன்” என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் பணம் தேவைகளைச் சார்ந்தது. இன்று ஒரு லட்ச ரூபாய் உங்களிடம் இருந்தாலும் ஒரு லட்சத்து ஒரு ரூபாய்க்கான தேவையை உருவாக்கிக்கொள்ள முடியும். இது தவிர, இன்னொரு பிரச்சினையும் வந்துவிடும். அடுத்தவரிடம் இரண்டு லட்சம் இருந்தால் நீங்கள் மனதளவில் ஏழையாகிவிடுவீர்கள்!
இதில் “நன்றாயிருக்கிறேன்” என்று சொன்னால், கண் பட்டுவிடும். நாம் நன்றாயிருப்பது அடுத்தவருக்கு ஏன் தெரிய வேண்டும்? அது வேறுமாதிரியான பிரச்சினைகளைக் கொண்டுவரும். இவ்வளவு கணக்குகளையும் போட்டு “என்னத்தை சொல்ல” “ ஏதோ வண்டி ஓடுது” என்றுதான் பதில் வரும். பணம் சாராத பதில் என்றால் உங்களின் பதில் “சூப்பரா இருக்கேன்” என்றுதான் வரும்.
எப்படி, நீங்கள் “ஏதோ” இருக்கிறீர்களா...? இல்லை “அற்புதமாக” இருக்கிறீர்களா...?
thanks the hindu
0 comments:
Post a Comment