Monday, November 16, 2015

தமிழ் மொழியை காக்க சிறுவர்கள் நடத்திய தமிழன்னை ஊர்வலம்!

தஞ்சாவூர்: தமிழை காக்கக்கோரி, திருவள்ளுவர், ஔவையார், கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் வேடம் அணிந்து தமிழன்னை சிலையுடன் சிறுவர்கள் ஊர்வலம் நடத்தினர்.
 
இதில் இயக்குநர் சந்தனகாடு கவுதமன், பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் மழையை பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். தமிழை காக்கும் வாசகங்கள் அடங்கிய பலகைகளை அனைவரும் பிடித்து சென்றதுடன் தமிழை காக்க கோஷமிட்டு சென்றனர்.



இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளர் டாக்டர்.பாரதி செல்வனிடம் பேசினோம், ''யுனஸ்கோ இன்னும் 100 ஆண்டுகளில் அழியபோகும் 25 மொழிகளை பட்டியலிட்டுள்ளது. அதில் 8-வது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. ஒரு மொழி அழிவதற்கு அந்த மொழி சொந்த மக்களால் கைவிடப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்டுதல், தாய் மொழியின் மதிப்பு குறைந்ததாக நினைத்தல், ஆதிக்க மொழியால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுதல் போன்ற காரணங்களால்தான் அழிவை நோக்கி செல்கிறது எனவும் யுனஸ்கோ அறிவித்துள்ளது. இது எல்லாம் நம் தமிழ் நாட்டுக்கு பொருத்தமாக இருப்பதுடன் அழிவை நோக்கியும் செல்கிறது தமிழ் மொழி.

தமிழை அழிவில் இருந்து காக்கவே இன்று தமிழன்னை ஊர்வலம் நடத்தபட்டது. இதில் குழந்தைகளுக்கு திருவள்ளுவர், ஔவையார், கம்பர், பாராதியார், பாரதிதாசன், நம்மாழ்வார் வேடம் இட்டு தமிழ் அன்னை சிலையுடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் மன்னார்குடியில் தேரடியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பந்தலடி வரை நடைபெற்றது.

வீட்டில் குழந்தைகளை தமிழிலேயே பேச வைக்க வேண்டும், குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும், வணிக நிறுவனங்கள் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும், தினமும் நாம் பேசும்போது ஆங்கில சொற்களின் கலப்புகள் அதிகமாக உள்ளது. இது அப்படியே தொடர்ந்தால் தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலம் என்ற புதிய மொழி உருவாகுவதுடன், நாம் தமிங்கிலர் இனம் என அழைக்கப்படுவோம், நமது குழந்தைகளுக்கு தரமான தமிழ் வழி கல்வி கொடுக்க தமிழக அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும், நமது உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட வகை செய்ய 2006-ல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க கோருவோம் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு கொடுத்தோம்.


தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் 1-ம் தேதியை  நினைவுபடுத்தும் வகையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழக திருநாள் என கொண்டாடி பொதுக்கூட்டம் நடத்தபட்டது. இருப்பதை காப்பதற்கும், இழந்ததை மீட்பதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தமிழன்னை ஊர்வலம் நடத்தபட்டது'' என்றார்.

தமிழை காப்போம்...

thanks vikatan

1 comments:

Rajasubramanian S said...

பதிவுக்கு நன்றி. ஒரு மொழி மறைவதற்கு அதன் பயன்பாடு குறைவதும், பிறமொழியை அளவுக்குமேல் பயன்படுத்துவதும் காரணம்