"நான் தேசிய விருதை திருப்பித் தர மாட்டேன்; போராட்டம் செய்து கவனத்தை ஈர்க்க இன்னும் பல வழிகள் உள்ளன" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் 'தூங்காவனம்' படத்தின் தெலுங்கு பதிப்புக்கான ('சீக்கடி ராஜ்ஜியம்') பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதையொட்டி நடந்து வரும் போராட்டங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், "சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்.
சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன். நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன். கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்றமாட்டேன், அது என் உரிமை. அவ்வளவுதான்.
விருதுகளை திருப்பித்த் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன.
விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளச் செய்கையே அது. அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்.
நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். இந்த விஷயத்தில் பணத்தையும் கூட. நான் விருதுகளை திருப்பி அளிக்கலாம், ஆனால் என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம். நான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் பணம் நிறைய இருந்தாலும் நான் அதனை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
படைப்புபூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார்
படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!
"நான் குல்சார் போன்ற கவிஞர்களிடத்திலிருந்து அகத்தூண்டுதல் பெறுகிறேன். அவரைப் பற்றி நான் சிந்திக்கும் போதெல்லாம் அவரது கவிதைகளே என் நினைவுக்கு வரும். நான் அவரை சீக்கியர் என்றோ அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறியவர் என்றோ கருதுவதில்லை. இதேபோல்தான் கே.பாலச்சந்தர் பற்றியும் நான் கூற முடியும். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை."
விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களுக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து...
"எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்."
பாஜக அரசினால் சகிப்பின்மை நிலை ஏற்படுகிறதா?
"ஹே ராம், விஸ்வரூபம் படங்கள் வெளியாகும் போது ஆட்சியில் பாஜக இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். அல்லது முஸ்லிம் லீக் என்று எந்த அமைப்பாக இருந்தாலும் சம அளவில் சகிப்புத்தன்மையில்லாமல்தான் இருக்கின்றன. ஆனால் அனைவரும் நான் சகிப்புத் தன்மையுடன் இருக்கவும் எனது படங்களில் காட்சியைக் கத்தரிக்கவும் எதிர்பார்க்கின்றனர்" என்றார்.
- ககெளதம்ராஜ்.சை from India
உங்கள் மீது பெரிய மரியாதை உண்டு கமல் சார்... ஆனால் நீங்கள் பொது வெளியில் முரண்பாடுகளின் மூட்டையாகத் தான் தெரிகிறீPர்கள்... உணர்வு ரீதியான ஆளா? இல்லை அறிவு ரீதியான ஆளா என்பதை முதலில் உங்களுக்கு நீங்களேக் கேட்டுக் கொள்ளுங்கள்...450
- BBalasreenivasan from India
என்னதான் திரையில் கத்தி வீசினாலும் கத்திப் பேசினாலும் பொதுவாக நம்ம ஊர் நடிகர்கள் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவர்கள். காரணம் அவர்களிடம் மறைக்க நிறய விஷயங்கள் உள்ளன என்பதால் யாரையும் முறைத்துக் கொள்ள மாட்டார்கள்- அதுவும் குறிப்பாக ஆட்சியில் உள்ளவர்களை! என்னதான் கமல் தன்னை ஒரு இன்டலெக்சுவலாக காட்டிக் கொண்டாலும், ஆளுங்கட்சி எப்படி எல்லாம் தொந்திரவு கொடுக்கும் என்பது கமலுக்கு தெரியாதா என்ன? கேட்டால் discretion is the better part of valour என்று போடு போடுவார். அர்த்தம் தெரியாமலே அறிவுஜீவி என்றுவிடுவார்கள் நம்ம ஊர் ரசிகர்கள்!5935
- VPV Parthiban from India
நீங்கள் உங்கள் விருதை திருப்பி கொடுப்பீர்கள் என்று இங்கு யாரும் காத்துகொண்டு இருக்கவில்லை.735
- AXAnthonimuthu Xavier from India
கழுவுற மீன்ல நழுவுற மீன் போல் மதிப்பிற்குரிய கமலின் வார்த்தைகள். சகித்துக் கொள்வோம்.10770
- Sulaiman Sulaiman
உங்க வழில நீங்க கவனத்த ஈர்க்க பாருங்க அய்யா அவங்களுக்கு இது சிறந்த வழின்னு தேர்ந்தெடுத்த செய்வதை தவறு என்று நீங்கள் முடிவு செய்ய இயலாது.2040
- Aabdulkareem from Delhi
விருதுகளை திருப்பி தருவது மூலம் கவனம் கிடைக்கும் என்பதை ஒப்புக்கொண்டால்,விருதுகளை திருப்பி தர மாட்டேன் என்று சொல்வதன் மூலமும் கவனம் கிடைக்கும் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.இது பற்றி கருத்து சொல்லாமலேயே இருந்து விட்டால் கவனம் கிடைக்காது என்பது தான் சரி.கமல்ஹாசன் பெரும்பாலும் லாஜிக்காகவே பேசக்கூடியவர்.அவருடைய நடிப்பில் உள்ள திறமை அவருடைய பேச்சிலுமிருக்கும்.எனவே எனது கருத்தை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.230
- KKanan from Chennai
விஸ்வரூபம் படத்துக்கு அந்நியக் கைத்தடிகள் போலி சிறுபான்மைவாதிகள் கொடுத்த டார்ச்சருக்குப் பிறகுதான் இந்த நாட்டின் சகிப்புத்தன்மை கமலுக்குப் புரிந்திருக்கும்..விஸ்வரூபம் படத்தையே பார்க்காமல் அதனைத் தடை செய்ய வன்முறைப் போரட்டம் பண்ணுவதே சகிப்புத்தன்மை என்பது புரியாமலேயே 50 வருடமாக சினிமாவில் இருக்கிறாரே16205
- PKpradeep kumar from Mountain View
அது உங்கள் விருப்பம். தடை சொல்ல யாருமில்லை1105
- RAJAN kittappa from Bangalore
சிவாஜி போன்றவர்கள் நடிப்பில் தொடாத சிகரமில்லை.ஆனால் விருதொன்றும் பெறாமலே நீங்கா புகழ் பெற்றவர்.ஆனால் கமல் விருதுகளை நேசிப்பவர்.அது பிலிம்பேர் ஆகட்டும் ஆஸ்கார் ஆகட்டும்.பல படங்களில் டைட்டிலில் பத்மஸ்ரீ என்று போட்டு மகிழ்ந்தவர்.நாட்டில் இன்னும் மோசமாக எது நடந்தாலும் விருதை திருப்பி தர கனவிலும் விரும்ப மாட்டார்.சொந்த நாட்டால் துரத்தியடிக்கப்பட்டால் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பும் அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும் என்று விஷ்வரூபம் வெளியிட்டு தடங்கலின் போது நாட்டை விட்டே போகிறேன் என்றவரல்லவா? அவருக்கு வலித்தால் மட்டுமே அவ்வாறெல்லாம் சவால் விடுவார்.5670
-தஹிந்து
0 comments:
Post a Comment