முண்டாசுக் கூட்டணி
ஒளிப்படம் எடுத்துக்கொண்டால் ஆயுள் குறைவு என்று தீவிரமாக நம்பும் ஒரு கிராமத்தின் கதையை வயிறுவலிக்கச் சொன்ன படம் ‘முண்டாசுப்பட்டி’. விஷ்ணு நந்திதா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பரிவட்டம் கட்டிக்கொண்ட இந்தப் படத்தை சீ.வி. குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ராம் இயக்கியிருந்தார். தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் சீ.வி குமாருடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் ராம்.
அஜித் எடுக்கும் அவதாரம்?
அஜித் அதிகம் விரும்பும் இயக்குநர்களின் பட்டியலில் விஷ்ணுவர்த்தனுக்கு எப்போதும் ஒரு இடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது அஜித்தை ஒரு நிஜமான வரலாற்றுக் கதையில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கியிருக்கிறாராம் இவர். இதற்காக பாலகுமாரன் எழுதிய ‘உடையார்’ நாவலைத் திரைக்கதையாக்கும் முயற்சியில் பாலகுமரானுடன் இணைந்து வேலை செய்து வருவதாக இயக்குநர் வட்டாரத்திலிருந்தே தகவல் கிடைக்கிறது. உலக அதிசயங்களில் சேர்க்கப்படாவிட்டாலும் சோழர்களின் கட்டிடக் கலை நுட்பத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் அதிசமான தஞ்சை பிரகதீஸுவரர் கோவிலைக் கட்ட ராஜராஜ சோழன் பட்ட பாடுகள்தான் உடையார் நாவலின் கதைக் களம். அஜித்தை ராஜராஜ சோழன் ஆக்குவார்களா என்பதை அடுத்தடுத்துக் கிடைக்கும் தகவல்களை வைத்துத்தான் சொல்ல முடியும்.
அதிர வைத்த கதிர்!
‘சிகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் யாருப்பா இந்த புது ஹீரோயின் என்று ஆர்வம் கூட்டினார்கள் கோலிவுட்டில். கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது; நவீன ஹேர் ஸ்டைலில் மார்டன் பெண்ணின் தோற்றத்தில் இருக்கும் இருக்கும் அவர் ஒரு பெண்ணல்ல நடிகர் கதிர் என்று. ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’ படங்களில் இயல்பான நடிப்பை வழங்கி கவனிக்க வைத்த கதிர் ‘சிகை’ படத்தில் பெண்ணாக நடிக்கிறாராம். ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் உதவியாளரான ஜெகதீசன் சுபு இயக்கும் படம் இது. பல தோற்றங்களில் கதிர் இந்தப் படத்தில் நடிக்கிறாராம் அதில் ஒன்றுதான் இந்தக் கதாபாத்திரம் என்கிறார்கள்.
மறுபடியும் புயல்!
எங்களுக்குப் பழைய வைகைப் புயல் திரும்பி வரணும் என்றார்கள் ரசிகர்கள். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் - விஷால் அணியுடன் இணைந்து பணியாற்றிய வடிவேலுக்கு விஷால் தனது படத்திலேயே முழு நீள நகைச்சுவைக் கதாபாத்திரம் தர இருக்கிறாராம். டிராக் காமெடி இல்லாமல் கதையுடன் இணைந்து கலக்கப்போகிறாராம் வடிவேலு!
பேய் ஜோடி!
ஜி.வி. பிரகாஷ் அறிமுகமான ‘டார்லிங்’ படத்தில் பேயாக வந்து ரசிகர்களை மிரட்டினார் நிக்கி கல்ராணி. அவர் தற்போது பேய்ப் படங்களின் நாயகன் ராகவா லாரன்ஸுடன் புதிய படமொன்றில் ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பட்டாஸ்’ படத்தின் தமிழ் மறுஆக்கத்தில்தான் இந்த பேய்ப் பட ஜோடி இணைகிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் சாய் ரமணி இயக்குகிறார். தற்போது கோ 2, எழில் இயக்கும் தலைப்பு சூட்டப்படாத படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். எழிலின் படத்தின் நாயகன் விஷ்ணு. இந்தப் படத்தில் ரவுடிகளைப் புரட்டியெடுக்கும் அர்ச்சனா என்ற பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறேன் என்கிறார் நிக்கி.
காரைக்குடியில் 'சிங்கம் 3 '
கதையும், திரைக்கதையும் கச்சிதமாக அமைந்துவிட்டால் நச்சென்ற வெற்றியை ருசித்துவிடலாம் என்பது இயக்குநர் ஹரியின் பாணி. ‘சிங்கம்-3’ படத்துக்கு 9 மாதங்கள் செலவிட்டுத் திரைக்கதை அமைத்திருக்கும் ஹரி, காரைக்குடியிலிருந்து படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறாராம். இதற்காக காரைக்குடியில் சூர்யாவும் அனுஷ்காவும் 20 நாட்கள் முகாமிட இருப்பதாகத் தெரிகிறது. ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் அறிமுகமான ஸ்ருதி ஹாசன் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார். மேலும் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் வருகிறாராம். ஸ்ருதி இந்தப் படத்தில் ஒரு சர்பிரைஸாக இருக்கப்போகிறார் என்கிறது படக் குழு. அதேபோல் சூர்யா படத்துக்கு அனிருத் இசையமைப்பதும் இதுவே முதல் முறை.
யாரென்று தெரிகிறாதா?
விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பியை எகிரவைத்த தொடர்களில் ஒன்று ஆபிஸ். அதில் மணி என்ற தாடிக்கார கலகல இளைஞாக வலம் வந்து தன் நடிப்பால் கவர்ந்தவர் விஷ்ணு. இவரும் தற்போது பெரிய திரையில் வலது காலை வைத்துவிட்டார். “சினிமாவிலும் நமக்கு ஹ்யூமர்தான் சேஃப்டி” என்று சொல்லும் விஷ்ணு அறிமுகமாகும் படத்தை இயக்குபவர் சுசீந்திரனின் உதவியாளரான சுரேஷ். ‘இவன் யாரென்று தெரிகிறாதா?’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு வர்ஷா, இஷாரா என்று இரண்டு கதாநாயகிகள்.
தஹிந்து
0 comments:
Post a Comment