Saturday, November 07, 2015

தீபாவளிபடங்கள்-சிறப்புக் கண்ணோட்டம்/முன்னோட்டம்|

அவ்வப்போது முழுநீள நகைச்சுவைப் படங்களை எழுதி நடித்தாலும், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் புதிய புதிய கதைக் களங்களில் விறுவிறுப்பான டெஸ்ட் மேட்ச் ஆடுவது கமலின் தனித்துவம். தீபாவளிப் பரிசாக கமல் தனது ரசிகர்களுக்குத் தரும் ‘தூங்காவனம்' படமும் அந்த வரிசையில்தான் வருகிறது. 2011-ல் வெளியான ‘ஸ்லீப்லஸ் நைட்' என்ற பிரெஞ்சு படத்தின் மறு ஆக்கம் என்று படக் குழு வட்டாரத்தில் சொல்லப்பட்டாலும் இது அந்தப் படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கா என்பது இதுவரை தெரியவில்லை.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ‘திவாகர்’ என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மனைவியைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் வாழ்கிறார். எதிர்பாராமல் அவரிடம் சிக்குகிறது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பை ஒன்று. அதைத் தனது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று முதல் தகவல் அறிக்கையைத் தயார்செய்யத் தனது இருக்கையில் அமரும்போது ஒரு போன். போதை மருந்துப் பையைக் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லும்படி நட்சத்திர ஹோட்டலும் நைட் கிளப்பும் நடத்தும் ஊரின் மாஃபியா மனிதர் சொல்ல, போதை மருந்துப் பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
இதற்கிடையில் கமலின் டிபார்ட்மெண்டிலிருந்து அவரது நடவடிக்கையைக் கண்காணிக்கக் கிளம்புகிறது ஒரு குழு. கமல் போதை மருந்துப் பையைக் கொடுத்து மகனை மீட்டாரா, இல்லையா? தன்னை மோப்பம் பிடிக்கக் கிளம்பிய தனது துறையின் சகாக்களிடம் கையும் களவுமாகச் சிக்கினாரா ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக விரிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது படம்.
கமல் நடித்த ஆக்‌ஷன் படங்களில் இதுவரை இல்லாத வண்ணம் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், சேஸிங்குகள் ஆகியவற்றை ஹாலிவுட்டுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில் படமாக்கியிருக்கிறார்களாம். காரணம் 'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் பணியாற்றிய கில்லஸ் கோன்செய், சில்வியன் கேபட், வெர்ஜின் அர்னாட் ஆகிய சண்டை இயக்குநர்கள் ‘தூங்காவனம்' படத்திலும் பணியாற்றியிருக்கிறார்கள்.
நீண்டகாலமாகத் தன்னுடன் பணியாற்றிய தன் இணை இயக்குநர் ராஜேஷை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆக்கி அழகுபார்த்திருக்கிறார் கமல். த்ரிஷா, மதுஷாலினி, ஆரண்யகாண்டம் சோமசுந்தரம், த்ரிஷயம் ஆஷா சரத், உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் போதிய முக்கியத்துவம் கதையில் இருக்கிறதாம். வில்லன்கள் குழு படத்தின் முக்கியமான ஆச்சிரியங்களில் ஒன்று. பிரகாஷ்ராஜ், சம்பத்ராஜ், கிஷோர், யூகிசேது என்று மாஃபியா வலைப்பின்னலில் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக மிரட்டியிருக்கிறார்கள் என்கிறது படக் குழு.
வேதாளம் முருங்கை மரம் ஏறினால்!?
கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற ‘வீரம்’ படத்தின் மூலம் இணைந்த அஜித் - இயக்குநர் சிவா - தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘வேதாளம்’. முதல்முறையாக அஜித்துடன் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். மற்றொரு முன்னணிக் கதாநாயகியான லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார். அனிருத் அஜித் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்கிற பரபரப்புகளைத் தாண்டி இந்தப் படத்தின் கதை மீது ஏகப்பட்ட ஊகங்கள்.
நமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி அஜித் இந்தப் படத்தில் ஆவியாகவோ பேயாகவோ நடிக்கவில்லை. அதேபோல இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களிலும் நடிக்கவில்லை.
இது பாட்ஷா படத்தைத் தொட்டுக்கொண்டு அஜித்துக்கு ஏற்ப ஆல்டர் செய்யப்பட்ட ஒரு கதை என்று சொல்கிறார்கள். தன் தங்கை லட்சுமி மேனனுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார் அமைதியான அஜித். ஆனால் பழைய எதிரிகள் அஜித்தின் தங்கையைக் கடத்தி அவரைச் சீண்டுகிறார்கள். பொறுமை இழக்கும் அஜித் தனது பழைய முகத்தைக் காட்டுகிறார். இறுதியில் தனது எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் வேதாளம்.
இந்தப் படத்தில் தனக்குத் தங்கையாக நடித்த லட்சுமி மேனனின் நடிப்பை டப்பிங் பணியின்போது பார்த்த அஜித் வியந்துபோய் தயாரிப்பாளருக்கு போன் செய்து கூறி, கூடுதலாகச் சம்பளம் தரும்படிக் கூறினாராம்.
அஜித்தின் உயிருக்கு உயிரான நண்பராகவும் பிறகு அவரைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாகவும் மங்காத்தா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடமேற்ற அஷ்வின் இதில் நடித்திருக்கிறார். இவர்களோடு சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், லொள்ளுசபா சாமிநாதன், தாபா என்று முதல் பாதிப் படம் முழுக்க இவர்களது காமெடியில் படம் குலுங்கப்போகிறதாம்.
அனிருத் இசையில் ‘ஆளுமா டோலுமா’ குத்துப்பாடலும் ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கும் டூயட் பாடலும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்.
செரிமானத்துக்கு இஞ்சி முரப்பா!
இந்த இரண்டு படங்களையும் பார்த்து செரிமானம் ஆகாவிட்டால் எப்படி? அதற்காகவே புதுமுகங்கள் நடிப்பில் ‘இஞ்சி முரப்பா’ என்ற படமும் துணிச்சலுடன் ரிலீஸ் ஆகிறது. எஸ். ஏ. சந்திரசேகரின் உதவியாளரான எஸ். சகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி சோனி சிறிஷ்டா என்ற மற்றொரு புதுமுகம்.
தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணன், அவளது அனுமதியில்லால் காதலில் விழுந்தால் அந்தக் காதலுக்கு வரும் புது மாதிரியான சோதனையை நகைச்சுவையுடன் சித்தரிக்கும் ‘கமர்ஷியல் இஞ்சிமுரப்பா’வாம் இந்தப் படம்.
இந்த மூன்று நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் சல்மான் கான் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரேம் ரதன் தாங் பயோ’ என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ மெய் மறந்தேன் பாராயோ’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.


-தஹிந்து

0 comments: