Saturday, November 07, 2015

“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்” -லா.ச.ராமாமிர்தத்தின் ‘புத்ர’, ‘சௌந்தர்ய’ ஆகிய இரண்டு நாவல்

எப்போதுமே நமக்கு பிடிக்காத எழுத்துகளை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவருடைய எழுத்து பிடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதன் வழியாகத்தான் நம் ரசனை தீர்மானமகிறது. மனுஷ்யபுத்திரன் நவீன கவிதைகளை பற்றிய ஒரு கட்டுரையில், “ஒரு கவிதை நமக்குப் புரியாமல் போவது முக்கியமல்ல, வேறொரு கவிதை ஏன் புரிகிறது என்பதுதான் முக்கியம்” என்று எழுதியிருந்தார். அதுவே தனிப்பட்ட ரசனைக்கான அளவுகோல்.
லா.ச.ராமாமிர்தத்தின் ‘புத்ர’, ‘சௌந்தர்ய’ ஆகிய இரண்டு நாவல்களுமே படிக்க சுவாரஸ்யமானவை. ‘அபிதா’ போன்ற இயல்புவாதக் கதைக்கு இப்படி முழுக்க முழுக்க அகவயமான ஒரு மொழி சரியான தேர்வா அல்லது தேவையா என்ற சந்தேகம் இருந்தது. இந்தச் சந்தேகம் அந்நாவலை தொடர்ந்து வாசிக்கவிடாமல் தடுத்தது. ஆனால் ‘புத்ர’வில் அது போல் எந்த உறுத்தலும் இல்லை. ஆர்ப்பாட்டமான மொழிதான். எனினும் அதன் சரளம் அபாரமானது. இருட்டில் வலுத்துப் பெய்யும் மழைபோல் அது நுரைத்துத் தளும்பிக்கொண்டே இருக்கிறது. பழகிய பிறகு தங்கு தடையே கிடையாது.
இரண்டு நாவல்களிலுமே அதிக நிலக் காட்சிகள் கிடையாது. ‘சௌந்தர்ய’வில் ஐயன்பேட்டையைப் பற்றிய விவரிப்புகள்கூடக் காட்சிபூர்வமாக இல்லை. அது சுயசரிதை சாயல் கொண்ட நாவல் என்பதால் லா.ச.ரா. கதை சொல்லிக் கேட்பது போல் தானிருக்கிறது. லா.ச.ரா.வின் அகவோட்டத்தை இணைக்கும் கண்ணியைப் பொங்கிப் புரளும் மொழியில் கண்டுகொள்வதே அவரை வாசிப்பதற்கான அடிப்படை எனச் சொல்லலாம்.
அவரது மொழியைக் கவித்துவம் என்று சொல்வதைவிட இசை என்று சொல்லலாம். சப்தங்களாகக் கேட்கும்போதே அதில் ஒரு அழகு தென்படுகிறது. வார்த்தைகளின் ஸ்வர வரிசை.
இரண்டு நாவல்களுமே பிராமணக் குடும்பங்களைப் பற்றியவை. கொஞ்சம் வசதியான குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்ணின் கதையை ‘புத்ர’ பேசுகிறது. ‘சௌந்தர்ய’ கடைசிவரை ஏழைக் குடும்பத்திலேயே காலத்தைக் கழிக்கும் பிரமாணப் பெண்ணின் கதையைச் சொல்கிறது. இரு நாவல்களுமே கதை சொல்வதில் வித்தியாசமான முறையைக் கொண்டுள்ளன; உணர்ச்சிகளை அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன.
லா.ச.ரா.வின் முத்திரை வாசகமான “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்” என்பதற்கான விளக்க உரைபோல் ‘சௌந்தர்ய’வின் ஆரம்பப் பகுதி இருக்கும். லா.ச.ரா. வாழ்க்கை நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னிருக்கும் ஒழுங்கில் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் நேசங்களில் என ஒவ்வொன்றிலும் அவர் சௌந்தர்யத்தைக் காண்கிறார். அது மட்டுமில்லாமல் மனிதர்களின் துயரங்களையும் சௌந்தர்யம் என்றே குறிப்பிடுகிறார். இதில் நிறைய முரண்பாடுகள் எழலாம். ஒரு ஏழைப் பெண்ணின் தியாகங்களை சௌந்தர்யம் என்று சொல்வதைப் பிற்போக்குத்தனம் என்று எளிதில் ஒதுக்கிவிட முடியும். ஆனால் இலக்கியம் சிக்கலான விதிகளால் இயங்குவது. குடும்பத்திற்காகத் தன் சௌகரியங்களைப் பலி கொடுத்துப் பெரிய சந்தோஷங்கள் எதையும் அறிந்துகொள்ளாமலயே இறந்து போகும் பெண்களைப் பார்த்தும், ஏழை பூசாரிகளைப் பார்த்தும் லா.ச.ரா. போராடுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக அவர்களுடைய தியாகங்களை கண்டு அவர் வியக்கிறார். அதில் எங்கேயோ ஒரு மாண்பிருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு வாழ்க்கையின் மீதிருக்கும் பிடிப்பே உயிரின் மேன்மை என்றபடி “சௌந்தர்யம்..! சௌந்தர்யம்…!” என விடாமல் கத்துகிறார். இங்கு அவர் காணும் சௌந்தர்யம் என்பது மானுடத்தின் மீதான பேரன்பும் பெருங்கருணையுமே.
இவற்றுக்கப்பால் ஒட்டுமொத்தமாகச் சுய இருப்பையே சௌந்தர்யம் என்று வகுக்கும் ஆன்மிகப் பார்வையும் லா.ச.ரா.வின் எழுத்தில் இருக்கிறது. ‘புத்ர’ நாவலில் கிழவி இருட்டறையில் எரியும் ஒற்றைத் திரி விளக்கைப் பார்த்துத் தன்னுருக்கத்தில் நெகிழ்வதும், ‘சௌந்தர்ய’வில் “என்னவோ பிதற்றுகிறேன். ஆனால் மனம் துள்ளுகிறது” என்று அவர் சொல்வதும் இவ்வகையில் சேர்பவைதாம்.
லா.ச.ரா.வின் மொழி, நுட்பங்களைவிடவும் அலங்காரத்திலேயே லயித்துத் தோய்கிறது. அதைக் குறை என்று சொல்ல முடியாது. பூவின் நுணுக்கமான அமைப்பும் மலை அருவியின் பேருருவமும் இயற்கையின் வெவ்வேறு நிலைகள்தானே.
கட்டுரையாளர், இளம் எழுத்தாளர், 
தொடர்புக்கு: [email protected]

-தஹிந்து

0 comments: