காட்பாடி அருகே மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரியை எளிதில் மறந்திருக்க முடியாது.
சவுதிக்கு வீட்டு வேலைக்கு சென்று, மொழியறியாத தேசத்தில் பல மாதம் கஷ்டங்களை அனுபவித்ததோடு, தன் ஒரு கையையும் பறிகொடுத்து, குற்றுயிரும் குலையுமாக நாடு திரும்பியவர். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து, தன் சொந்த ஊருக்கு வந்திருந்த அவரை சந்தித்தோம்.
வலது காலும் முறிந்துள்ளது. முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அனுபவங்கள் அவர் மனதிலிருந்து இன்னும் முழுவதுமாக விலகவில்லை என்பதை அவரது முகம் காட்டுகிறது.
எழுந்து நடக்கவே சிரமப்பட்டவரிடம், "என்ன நடந்தது?" என்றோம்.
"எனக்கு மூணு பொண்ணுங்க, ஒரு பையன். வீட்டுக்காரர் ஒழுங்கா வேலைக்கு போகலை. பையன் கட்டட வேலைக்கு போய் குடும்பம் நடத்தவேண்டியதா இருந்துச்சு. ஒருநாள் வேலைசெய்றபோது தடுமாறி விழுந்து அவனுக்கு கால் உடைஞ்சு, தொடர்ந்து வேலைக்கு போக முடியாம ஆகிவிட்டது.
குடும்பத்துக்கு வருமானமே இல்லாம போச்சு. கடன் வாங்கி பொண்ணுங்களை கட்டிக்கொடுத்திட்டு அந்த கடனையும் திருப்பி கட்ட முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமையிலதான் பையனுக்கு தெரிஞ்ச ஒருத்தர், 'வெளிநாட்டுல வீட்டு வேலைக்கு நல்ல சம்பளம் தராங்க'னு சொல்ல, சரின்னு அங்க போறதுக்கு முடிவு செய்தேன்.
புருஷனும் வேலைக்கு போறதில்லை. பையனுக்கும் அடிபட்டுப்போச்சு. நாமதான் இனி குடும்பத்தை கரைசேர்க்கணும்னு வெளிநாட்டு வேலைக்கு போனேன். நல்ல சம்பளம் தருவாங்க. நம்ம வாழ்க்கை வறுமையும் போயிடும்னு நம்பிப்போனேன். ஆனா கையை இழந்து, காலும் செயல்படாமபோய், இப்போ என்னோட வேலைகளையே என்னால செஞ்சுக்க முடியலை."- கதறி அழுகிறார் கஸ்துாரி.
மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்தியவரிடம் "அங்கு வேலைச் சூழல் எப்படி இருந்தது?" என்றோம்.
" ரியாத்ல எனக்கு வேலை. அரபிக்காரங்க ஒருத்தங்களோட 65 வயசு அம்மாவ பாத்துக்கணும். அவங்க வீட்டு வேலையை எல்லாம் செய்யணும். துணி துவைக்கறது, வீட்டை சுத்தம் பண்றது, அவங்களுக்கு தேவையானதை செய்து தரணும். காலைல எந்திரிக்கறதுல இருந்து ராத்திரி தூங்குற வரை வேலை இருக்கும். ஒருநிமிடம் கூட ஓய்வு கிடைக்காது. ஜூலை மாசம் போனேன். போன நாள்ல இருந்து ஒரு நாள் கூட நல்ல சாப்பாடே எனக்கு போட்டதில்லை.
மூணு நாளுக்கு முன்னாடி செஞ்ச கெட்டுப்போன சாப்பாட்டைதான் கொடுத்தாங்க. சரி சம்பளத்துக்குன்னு இவ்ளோ தூரம் வந்துட்டோம். சகிச்சுகிட்டு இருப்போம்னு இருந்தேன். மாசம் 300 டாலர் சம்பளம்னு சொல்லியனுப்பினாங்க. அங்க 900 ரியால் கொடுத்தாங்க. முதல் மாசம் சம்பளம் கொடுத்திட்டு என் பையனுக்கு போன் போட்டு கொடுத்தாங்க.
அவன்கிட்ட 'சம்பளம் வாங்கிட்டேன்பா என்று சொல்லிவிட்டு, 'சரியான சாப்பாடு போடறதில்லைன்னு' மனக்குறையாக சொன்னேன். அவ்வளவுதான், மறுநாள் எனக்கு கொடுத்த காசையும் புடுங்கிட்டாங்க. என் செல்லையும் வாங்கிகிடுச்சு அந்த வீட்டம்மா.
சாப்பாடு போடலைன்னாலும் சம்பளமாவது தந்தா போதும்னு இருந்தேன். கொடுத்த சம்பளத்தையும் புடிங்கிகிட்டதால பயம் வந்துவிட்டது. வீட்டுக்கும் பேச முடியாது. அவங்க பேசுறதும் எனக்கு புரியாது. அந்தம்மா கூட சைகையில்தான் பேசுவேன். 'எனக்கு இங்க இருக்க புடிக்கலை... ஊருக்கே அனுப்பி வச்சிடுங்கமா' ன்னு ஒருமுறை அழுதுட்டே சைகையால கெஞ்சினேன்.
கோபமான அந்தம்மா, 'கழுத்தை அறுத்திடுவேன்' னு சைகை காட்டினாங்க. எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. இங்க இனி இருந்தா நம்மளை எதாவது பண்ணிடுவாங்கன்னு, அவங்க பையன் வீட்ல வேலை செய்த நெய்வேலிக்காரர் ஒருத்தர்ட்ட நடந்த விஷயத்தை சொல்லி, 'என்னை போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுருப்பா நான் அவங்க மூலமா ஊருக்கு போய்டுறேன்' னு அழுதேன்.
ஆனா அந்த பையன் நான் சொன்னதை அப்படியே அந்த வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டான். அப்புறம் சித்ரவதை ஆரம்பிச்சிட்டது. என்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயந்து, ஒருநாள் அந்த வீட்டின் மாடியில் இருந்து சேலையை கட்டி இறங்கப் பார்த்தேன். அப்போ அங்க இருந்த ஜெனரேட்டர்ல கை சிக்கிக்கிடுச்சு. ரத்தம் வெளியேறினதால் நான் மயங்கி கீழ விழுந்துட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. கை ரொம்ப நசுங்கினதால வெட்டி எடுத்துட்டதா சொன்னாங்க." என்று பறிகொடுத்த கையின் தோள்பட்டையை தடவிப்பார்த்து கண்ணீர் சிந்தினார்.
"குடும்ப வறுமைக்கு ஒரே தீர்வாக வெளிநாட்டு வேலை அமையும்னு நம்பிதான் அங்க போனேன். இந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு தெரியாது. இனி அப்படி யாரும் போகக்கூடாது. அதுக்கு நானே நேரடி உதாரணம். குறைவான சம்பளத்துக்கு ஒரு ஆட்களை அனுப்ப இத்தனை லட்சம், இத்தனை ஆயிரம்னு ஏஜெண்டுங்க கமிஷன் வாங்கிக்கறாங்க.
வீட்டுக்காரங்க அவ்ளோ செலவு செய்வதால், நமக்கு வேலை புடிக்கலைன்னாலும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குறது நடக்குது. வீட்டை விட்டு எங்கயும் அனுப்பாததால், மற்ற இடங்கள்ல இருக்க நம்ம பொம்பளைங்க நிலை தெரியலை. ஆனால் அவங்களும் இப்படிதான் கொடுமை அனுபவிக்கறாங்கன்னு நினைக்கிறேன்." என்றார் கம்மிய குரலில்.
கஸ்துாரிக்கு தமிழக அரசு சார்பில் பத்து லட்சம் நிவாரணத் தொகையாக வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மாதம் ரூ. 8000 வட்டிப்பணமாக வருவதாக சொல்கிறார். ஆனால் தற்போதைய நிலையில் அவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்வதற்கே அந்த தொகை சரியாகி விடுகிறது என்கிறார்.
மத்திய அரசு மற்றும் சவுதி அரசிடமிருந்து நஷ்ட ஈடு கேட்டு கோரிக்கை மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார்.
வெளிநாட்டு வேலையில் விருப்பம் இருப்பது தவறில்லை. சரியான தகுதிகளோடு, அனுபவம் வாய்ந்த, முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் செல்வதே சரியாக இருக்கும். எதையும் ஆராயாமல் அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை நம்பிபோனால் துயரங்களை சந்திக்கவேண்டிதான் இருக்கும்.
கஸ்துாரியின் வாழ்க்கை சொல்லும் படிப்பினை இதுதான்!
- அ. அச்சணந்தி
படங்கள்: ச.வெங்கடேசன்
thanks vikatan
0 comments:
Post a Comment