Sunday, November 29, 2015

12 ராசிகளில் ராஜயோக ராசிகள் எவை? - ஒரு அலசல்

குரு வக்கிரம்...ராம்திலக்
க்கிரம் என்றால் ஒரு கிரகம் பின்னோக்கி நகர்வதைக் குறிக்கும். கிரகங்கள் முன்னோக்கி நகர்வதை நேர்கதி என்றும், பின்னோக்கிச் செல்வதை வக்கிர கதி என்றும் சொல்வார்கள்.
முன்னோக்கிச் செல்வது சிறப்பாகும். பின்னோக்கிச் செல்வது சிறப்பாகாது. பின்னோக்கிச் செல்லும் கிரகம், சில நேரங்களில் ஏற்கெனவே அது கடந்து வந்த ராசிக்கும்கூடச் சென்றுவிடும். அதாவது மேஷத்தில் இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்று மேஷ ராசியிலிருந்து விலகி, மீன ராசிக்கும் செல்லக்கூடும்.
சில நேரங்களில் ஒரு கிரகம் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள். அதாவது மீன ராசியில் உலவிக் கொண்டிருக்கும் கிரகம் மேஷ ராசிக்கு விரைவாகச் சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குறிப்பாக குருவானவர் மீன ராசியில் ஏறத்தாழ ஓராண்டு காலம் உலவ வேண்டும். ஆனால் அவர் மீனத்தில் ஆறு மாத காலமே உலவி விட்டு, வேகமாக மேஷ ராசிக்குச் செல்வது அதிசாரமாகும்.
வக்கிர கதியில் உள்ள கிரகம் தன் ஆதிபத்தியத்துக்கு நேர்மாறான பலன்களைத் தரும் என்பது முன்னோர்களின் கூற்று.
ஒரு கிரகம் நேர்கதியில் செல்லும்போதுதான் தனது ஆதிபத்தியத் துக்கு ஏற்ற முழுமையான சுப பலன்களைத் தரும். பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களின் ஊடே செல்லும் கிரகங்கள், ஒரு நாளுக்கு இவ்வளவு டிகிரிதான் நகர வேண்டும் என்று கணக்கு இருக்கிறது. நட்சத்திரங்கள் வான்வெளியில் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட ராசியில் நிலையாக இருக்கும். கிரகங்கள் மட்டுமே நகர்ந்து, குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு இடம் மாறும். இப்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு ராசியைக் கடந்து, அடுத்த ராசிக்கு இடம் மாறும். ஒவ்வொரு கிரகத்துக்கும் குறிப்பிட்ட வேகம் இருக்கிறது. அந்த வேகத்தின் அடிப்படையில் இடமாற்றம் நிகழும்.

வான் வெளி முழுவதும் 360 டிகிரியாக கணக்கிடப்பட்டுள்ளது. மேஷ ராசியின் ஆரம்பம் 00.00 டிகிரியாகும். 30 டிகிரி வரை மேஷ ராசி வியாபித்திருக்கும். ஒரு ராசிக்கு 30 டிகிரி;  12 ராசிகளுக்கு 360 டிகிரி.
டிகிரி என்பது பாகை.  மினிட்ஸ் என்பது கலை. குறிப்பாக சூரியன் ஒரு நாளில் ஒரு டிகிரி நகர்வார். அதாவது 360 நாட்களுக்கு அவரது நகர்தல் 360 டிகிரியாக இருக்கும். ஆக, சூரியன் 12 ராசிகளைச் சுற்றிவருவதற்கு ஒரு வருட காலம் பிடிக்கும். மற்ற கிரகங்களின் நகர்வு....
சந்திரன் : 13 முதல் 15 டிகிரி
செவ்வாய் : 30 முதல் 45 மினிட்ஸ்
புதன் : 65 முதல் 100 மினிட்ஸ்
குரு : 5 முதல் 15 மினிட்ஸ்
சுக்கிரன் : 62 முதல் 82 மினிட்ஸ்
சனி : 2 மினிட்ஸ்
ராகு-கேது : 3 மினிட்ஸ்
சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார். சந்திரன் இரண்டேகால் நாளும், செவ்வாய் 45 நாட்களும் சஞ்சரிப்பார்கள்.  புதனும் சுக்கிரனும் ஒரு மாத காலமும், குரு பகவான் ஒரு வருடமும், சனி இரண்டரை வருடங்களும், ராகு-கேது ஒன்றரை வருட காலத்துக்கும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார்கள்.
இவை பொதுவானவை. கிரகங்களின் வக்கிர கதி, அதிசாரம் போன்றவற்றால் இவை (கால வித்தியாசம்) மாறுபடும். என்றாலும் சூரியன், சந்திரன், ராகு, கேதுக்களுக்கு இந்த மாற்றம் ஏற்படாது. காரணம் சூரியனும் சந்திரனும் வக்கிரகதி அடைவதில்லை.  ராகுவும் கேதுவும் எப்போதுமே வக்கிர கதியில் (பின்னோக்கி நகரும் நிழல் கிரகங்கள்) இருப்பார்கள்.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கே வக்கிர கதி உண்டாகும். ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரமாக உள்ளது என்பதை 'வ’ என்று அந்தக் கிரகத்தின் அருகில் குறித்திருப்பார்கள். ஆங்கில ஜாதகத்தில் 'R’ என்று குறிக்கப்பட்டிருக்கும். 'வ' என்றால் வக்கிரம், R என்றால் Retrograde  பின்னோக்கி நகர்தல்- வக்கிரம்.
வக்கிரம் பெற்ற கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களில் வக்கிரமானால் நற்பலன் களைத் தருவார்கள். சுப ஸ்தானங்களில் வக்கிரமானால் கெடுபலன்களைத் தருவார்கள். ஜாதகத்தில் 6, 8, 12-ஆம் இடங்கள் அசுப ஸ்தானங்கள் ஆகும். இந்த அசுப ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் சுப பலன்களைத் தருவார்கள். 1, 4, 7, 10, 5, 9 ஆகிய இடங்கள் சுப ஸ்தானங்கள் ஆகும். இந்த சுப ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் கெடு பலன்களைத் தருவார்கள்.
அதேபோன்று பலம் குறைந்த நீச ராசியில் இருக்கும் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் உச்ச பலனைத் தருவார்கள். அதாவது மேஷம் சனிக்கு நீச வீடு. அவர் மேஷத்தில் வக்கிரமாக இருந்தால் சுப பலனைத் தருவார்.
உச்ச ராசியில் இருக்கும் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் நீச பலனைத் தருவார்கள். குரு கடகத்தில் உச்சம் பெறுவார். குருவானவர் கடகத்தில் வக்கிரமாக இருந்தால் குறிப்பிட்ட அமைப்பில் பிறந்த ஜாதகர் உச்ச பலனைப் பெறமுடியாமல் சங்கடங்களை அனுபவிக்க வேண்டிவரும்.
குருவுக்கு இரு வீட்டு ஆதிபத்தியம் (தனுசு, மீனம்) இருப்பதால், அவர் எந்தெந்த வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெறுவாரோ அந்தந்த வீடுகளுக்கு உரிய முழுமையான சுப பலன்களைப் பெறமுடியாமல் போகும்.
மேலும் குரு பகவான் பொருளாதாரம், குழந்தைகள், வாழ்க்கைத்தரம், உண்மை, தெய்வ பக்தி, உள்ளுணர்வு, நல்ல நட்பு, சுபகாரியங்கள், மகப்பேறு, மதாபிமானம், விஞ்ஞானம், பேரன், பேத்தி, தந்தையின் தந்தை, தங்கம், வங்கி, புஷ்பராகம், கருவூலம், வேத விற்பன்னர், பிராமணர், ஆலோசகர், மதபோதகர், குருக்கள், பொன் நிறப்பொருட்கள் ஆகியவற்றைக் குறிப்பவர் ஆவார். அவர் வக்கிரமாக உள்ளபோது, அவரது ஆதிபத்திய பலன்கள் கிடைக்காமல் போகும். மாறாக கெடுபலன்கள் உண்டாகும். சுப பலன்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும்.
தற்போது கோசாரப்படி குரு வக்கிர கதியில் உலவுகிறார். குருவின் வக்கிர கதி சஞ்சாரத்தால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.
அதாவது மேஷத்துக்கு 3-ல் உலவும் குரு கெடுபலன்களைத் தருவார். அவர் வக்கிரமாகி 2-ம் இடத்தை நோக்கி நகர்வதால் 2-ம் இடத்துப் பலன்களைத் தருவார். இதேபோல் கடகத்துக்கு 12-ல் உள்ள குரு 11-ம் இடத்துப் பலனையும், கன்னிக்கு 10-ல் உள்ள குரு 9-ம் இடத்துப் பலனையும், விருச்சிகத்துக்கு 8-ல் உள்ள குரு 7-ம் இடத்துப் பலனையும், மகரத்துக்கு 6-ல் உள்ள குரு 5-ஆம் இடத்துப் பலனையும் தருவார். இதனால் இதுவரையிலும் குரு பலம் இல்லாத ராசிக்காரர்களுக்கு விளைந்து வந்த கெடுபலன்கள் விலகி, நற்பலன்கள் உண்டாகும்.
குரு பலம் உள்ள அதாவது ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு சுப பலன்கள் குறையும்.
ஜாதகத்தில் சுப யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானாலும், ஜனன கால ஜாதகத்தில் குரு ஆட்சி, உச்ச, மூலத்திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும், (அதாவது தனுசு, மீனம், கடகம் ஆகிய ராசிகளில் பலம் பெற்று நேர்கதியில் இருந்தால்) கோசார பலவீனம் ஜாதகரைப் பாதிக்காமல் இருக்கும்.
வக்கிர குருவால் பாதிக்கப்படாமல் இருக்க, வியாழக்கிழமைகளில் குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது. குருவுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்வதன் மூலம் நலம் உண்டாகும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி, அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலமும் குரு அருள் கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் நலம் கூடப் பெறலாம்

thanks vikatan

0 comments: