Wednesday, October 07, 2015

குற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் பார்வை:

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. புதுப்பேட்டை, பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், நான் கடவுள் தொடங்கி மூடர் கூடம், சூது கவ்வும், ஜிகர்தண்டா என்றெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படங்கள் பெரும்பாலும் குவெண்டின் டாரண்டினோவின் படங்கள், அமெரோஸ் பெர்ரோஸ், சிட்டி ஆஃப் காட் போன்ற படங்களின் தன்மையில் வருகின்றன. உலகெங்கும் உள்ள பெரும்போக்கு இது.
உலக சினிமாவில் இன்னொரு போக்கும் இருக்கிறது. அதுதான் ஈரானிய சினிமா. தமிழில் உலக சினிமாவைப் பற்றிய பேச்சு, விவாதங்கள் மிகப் பரந்த அளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது 2000-க்குப் பிறகுதான். அப்போது எங்கே பார்த்தாலும் ஈரானிய சினிமாவைப் பற்றிய பேச்சுதான். எனினும், அதைப் பின்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் ஏதும் எடுக்கவில்லை. அந்தக் குறையை ஓரளவுக்குப் போக்கும் வகையில் சமீபத்தில் வந்த படங்கள்தான் ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’ ஆகியவை.
ஈரானிய சினிமாக்களில் அதிக அளவில் குழந்தைகளின் உலகம் வரும். அடுத்ததாகப் பெண்களின் உலகம். இவை தவிர போர் பற்றிய படங்கள், வாழ்வின் அழகுகள், அர்த்தங்கள் போன்றவற்றைத் தேடும் படங்கள் என்று ஈரானிய சினிமாவை வகைப்படுத்தலாம். இவை எல்லாமே மறைந்திருந்து அச்சுறுத்தும் பெரிய உலகத்தின் பின்னணியில் சின்னஞ்சிறு உலகத்தை, சின்னஞ்சிறு சந்தோஷங்களை, அன்பை மிகவும் எளிமையாகச் சொல்பவை. எளிமையான காட்சி அமைப்பின் உள்ளே வாழ்க்கையின் சிக்கல்களை மறைத்துச் சொல்வதுதான் ஈரானிய சினிமா.
தமிழில் ஈரானிய சினிமாவுக்குச் சிறிய அளவில் முன்னோடியாக மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, பாலு மகேந்திராவின் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ போன்ற படங்களைச் சொல்லலாம். “பிரம்மாண்டமாகப் படம் எடுப்பதற்குப் பதிலாக அன்பைப் பிரம்மாண்டமாகக் காட்டுங்கள்” என்று மகேந்திரன் சொல்வார். அது காக்கா முட்டை, குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களால் சாத்தியப்பட்டிருக்கிறது.
எளிமையான ஒரு கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதை வளர்த்தெடுத்துக்கொண்டு போய் ஒரு உச்சத்தில் முடிப்பது நல்ல சிறுகதையொன்றின் இயல்பு. இந்த அளவுகோலை வைத்துப் பார்க்கும்போது ‘குற்றம் கடிதல்’ படத்தை நல்ல திரைப்படம் என்று சொல்வதைவிட நல்ல சிறுகதை என்றே சொல்லத் தோன்றுகிறது.
எளிமையாகத் தொடங்கும் காட்சிகள் ஆசிரியை மெர்லின் ஒரு சிறுவனை அறைந்த பிறகு வேகம் கொள்கின்றன.
பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுத்த சிறுமிக்கு முத்தம் கொடுத்த சிறுவனைக் கண்டிக்கும் ஆசிரியையிடம், ‘உங்களுக்கு பர்த்டேன்னாலும் உங்களுக்கு முத்தம் குடுப்பேன் டீச்சர்’ என்கிறான். கோபமுற்ற ஆசிரியை அந்தச் சிறுவனை அறைந்துவிடுகிறார். கீழே விழும் சிறுவன் பேச்சு மூச்சற்றுப் போய்விடுகிறான்.
ஆசிரியை அவ்வளவு வேகமாக அறையவில்லை என்றாலும் அப்படி ஆகிவிடுகிறது. நமக்கு அந்தப் பையன் மீதும் கோபம் ஏற்படுகிறது. சின்ன வயதில் என்ன மாதிரியான புத்தி என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால், முத்தத்துக்குப் பெரியவர்கள் வைத்திருக்கும் அர்த்தமும் குழந்தைகள் வைத்திருக்கும் அர்த்தமும் வேறு வேறு என்பதை ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற வரி உணர்த்திவிடுகிறது. அந்த வரியின்போது அந்தச் சிறுவன் தன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கிறான். அடுத்ததாக, ஆசிரியைக்கு அந்தச் சிறுவன் முத்தம் கொடுக்கிறான். அது ஆசிரியையின் பிரமை. ஆனால், அந்தச் சிறுவனின் முத்தத்தில் உள்ள பரிசுத்த அன்பை, குழந்தைமையை ஆசிரியைக்கும் நமக்கும் அந்தக் காட்சி உணர்த்திவிடுகிறது. ஒரு பாடலின் இடையே வரும் சிறு காட்சித் துணுக்கு படத்தை எங்கோ உயர்த்திவிடுகிறது.
தெரியாமல் செய்த ஒரு விஷயம் ஒரு குற்றம்போல மாறிய பிறகு அந்த ஆசிரியைக்கு ஏற்படும் மன உளைச்சல், விசித்திரப் போக்கு தமிழ்த் திரைக்கு மிகவும் புதிது. எந்த ஒரு நிலையிலும் தான் தப்பிக்க வேண்டும் என்றே அவள் நினைக்கவில்லை. தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அந்தப் பையனுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று உணர்வே மேலிடுகிறது. குற்றவுணர்வை இவ்வளவு நுட்பமாகத் தமிழில் சித்தரித்த படங்கள் மிகவும் குறைவு.
எல்லாத் தரப்புகளின் பின்னணியிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும், பதற்றம் இருக்கும், மனஉளைச்சல் இருக்கும் என்ற விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆசிரியர் மாணவரை அடித்துவிட்டார் என்றால் இயல்பாக நமது பொதுப்புத்தி ஆசிரியரைக் குற்றவாளியாக்கித் தண்டனையும் வழங்கிவிடும். குற்றத்தையோ தவறையோ நாமே செய்யும்போதுதான் நாம் படும் கஷ்டம் நமக்குத் தெரியும். அந்த நிலையை ஆசிரியை அவ்வளவு நுணுக்கமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். மறு தரப்பின் நிதர்சனத்தையும் காட்டிவிடுகிறார். பணக்காரர் X ஏழை என்பதுபோல் கருப்பு வெள்ளையாகக் காட்டிவிடாமல் இரண்டு தரப்பின் மீதும் நமக்குப் பரிவை ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர்.
பழிவாங்கும் இயல்பு மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. மன்னிக்கும் உணர்வும் அப்படியே. கோமாவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிறுவனின் தாய் மாமன் ஆசிரியையைக் கொலைவெறியுடன் தேடிக்கொண்டிருக்கிறார். ஆசிரியையும் அவரது கணவரும் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். திக்பிரமை பிடித்து அமர்ந்திருக்கும் அந்தத் தாயின் காலடியில் தஞ்சம் புகுந்து ஒரு அழுகை அழுவாரே, தமிழ் சினிமாவில் அப்படியொரு அழுகையை யாரும் அழுததில்லை! அடிவயிற்றால் அழுதிருப்பார். தாயின் கைகளைப் பிடித்து மாறி மாறித் தன் கன்னத்தில் அடித்துக்கொள்ளும் அவரைச் சட்டென்று ஒரு கணம் நிறுத்தி அந்தத் தாய் பார்க்கும் கனிவான பார்வை திரைப்படத்தின் மகத்தான தருணம். அந்த முகத்தில் அப்படியொரு மினுங்கல், அப்படியொரு கனிவு. அந்தக் கணத்தில் அந்த ஆசிரியைக்கும் தாயாகிறார். ஆசிரியையை அணைத்துக்கொண்டு ‘எனக்கு என் பிள்ளை பிழைக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்’ என்கிறாள். அது மன்னிப்பு என்றுகூடச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அந்தத் தாயின் மனதில் பழிவாங்கல், வெறி ஏதும் இல்லை. குற்றத்தை யார் செய்தது என்ற உணர்வோ நினைவோகூட இல்லை. தாய்க்கு முதலும் கடைசியும் பிள்ளையின் நினைவுதான். இந்த ஒரு காட்சி போதும், ஒட்டுமொத்தத் திரைப்படத்தையும் வேறு ஒரு உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு. அதன் பிறகு வருபவையெல்லாம் அநாவசியமான காட்சிகளே!
மனிதர்களின் ஆதார உணர்ச்சி ஒன்றைப் பற்றி மிகவும் எளிமையாகப் படமெடுத்திருக்கும் பிரம்மா நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறார். படம் பார்க்கும்போது ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஏதோ குறைகிறதே’ என்று ஏற்படும் உணர்வை ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரிக்கு வரும் காட்சியும், ஆசிரியையும் மன உளைச்சல் வெளிப்பாடுகளும் ஒரு தாயின் உச்சபட்சக் கனிவும் மாற்றிவிடுகின்றன. டாரண்டினோ வகைத் திரைப்படங்களைவிட இதுபோன்ற திரைப்படங்கள்தான் தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் நமது சமூகத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. வாழ்த்துக்கள் பிரம்மா!

நன்றி-தஹிந்து

  • Parthi  
    அண்மையில் வெளிவந்த ஒரு புலி என்ற பூனை படத்தை பற்றி விமர்சனம் எழுதி இருந்த போது அந்த நடிகரின் ரசிகர்கள் தி ஹிந்து இக்கு விமர்சனம் எழுதவே தெரியாதது போல் பதிவிட்டுள்ளனர் .அவர்களுக்கு சவுக்கடி இந்த விமர்சனம் .நல்ல படங்களை தி ஹிந்து வரவேற்கு என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு
    Points
    3630
    2 days ago
     (0) ·  (0)
     
    • SSridaran  
      நல்ல திரை படம்.அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு. வாழ்த்துக்கள்
      2 days ago
       (0) ·  (0)
       
      • JJo  
        இது நிச்சயம் ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம். ஆசிரியர்கள் மட்டும் அல்ல அனைவரும் தான். தெரியாமல் கூட பிழை செய்யல் ஆசிரியருக்கு ஆகாது என்பது திண்ணமாக சொல்லப்படுகிறது. அவர்களது பொறுப்பு அப்படிபட்டது. கணினியிலோ அல்லது வேறு இயந்திரதிலோ பனி செய்வோர் தவறு செய்தால் பின்பு திருதிகொள்ளலாம். ஆனால் பிஞ்சு மனங்களை கையாளும் ஆசிரியரின் பணி அவ்வளவு சுலபமானதல்ல என்பதை பொட்டில் அடித்து சொல்லும் படம் இது. இந்த படத்தை கருவாக்கிய இயக்குனருக்கும் உருவாக்கிய தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள் ....
        3 days ago
         (0) ·  (0)
         
        • RRathinavelu  
          இயக்குனரின் வேலை நடிகரகளை நடிக்க வைப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நடித்து விடாமல் பார்த்துக்கொள்ளுவதும் அவர் வேலை என்று சொல்கிறது இந்த, கலை அளவில், பிரும்மாண்டமான படைப்பு.எதைச்சொல்ல? நடிப்பைக் கண்டார் நடிப்பே கண்டார்... To be(at) or not to --- may be closer .. என்று நுணுக்கம் கண்டார் அவையே கண்டார் தாம்பரத்தில் 'விடிந்து' விடுகிறது! ' முழுசா' என்பதில் 'சா' உச்சரிப்பில் எத்தனை சொல்லப்பட்டு விடுகின்றன? அந்த அம்மையாரின் நடிப்பு, தோரணை ... கம்பன் வீட்டுக் கட்டுத்தறி போல் காலில் சிக்கியதும் கவி பாடி விட்டது
          3 days ago
           (0) ·  (0)
           
          • JJey  
            படம் இன்னும் பார்க்கல , அனால் விமர்சனமே படத்தின் தன்மையை அழகாக சொல்லியிருக்கிறது.. வாழ்த்துக்கள் திரு பிரம்மா அவர்களே.
            Points
            575
            3 days ago
             (0) ·  (0)
             
            • PKPradeep Kumar  
              இதுபோன்ற தமிழ் சினிமாக்களின் வரவு உண்மையிலேயே பெருமிதம் கொள்ள வைக்கிறது
              Points
              470
              3 days ago
               (1) ·  (0)
               
              rathinavelu Up Voted
              • AAthiyaman  
                படம் பார்த்தேன். இந்த படத்தின் தயாரிப்பாளர், இதில் இடம் பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒரு கருத்தை பின் புலமாக சொல்கிறது. அது வலிய திணிக்க பட்ட கிறிஸ்துவ மதம் சார்ந்த போதனைகள், கிறிஸ்துவ மதத்தில் இருந்து வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்டால் மிக பெரிய சோதனைகளை சந்திக்க வேண்டிவரும் என்பதுபோல் இந்த படத்தில் மிரட்டுகிறார்கள். கோபத்தில் சிறுவனை அடித்து விடுகிறாள், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறாள், அப்போது சர்ச்சு செல்கிறாள், பிரசங்கம் நடக்கிறது, சிலுவையை பார்க்கிறாள், பொட்டை அழித்து கொள்கிறாள் மேலும் அதிலிருந்து குற்ற உணர்ச்சியால் பேதலித்து போகிறாள். குற்ற உணர்ச்சி ஏசுவின் பாதையில் இருந்து மாறியதாலா? அல்லது சிறுவனை அடித்தாலா? என்று நமக்கு புரியவில்லை. இதில் ஒரே ஒரு சந்தோசம் அந்த இந்து பையன் கடைவரையில் நல்லவனாகவே கட்ட படுகிறான். இது குறித்து டிவி விவாதம் காட்சி வருகிறது, அதில் ஒரு மதபோதகரே தோன்றுகிறார். பின் புலமாக வரும் கிருஷ்துவ மதத்தின் பிரச்சாரம் குரூரமாக உள்ளது.
                Points
                395
                4 days ago
                 (1) ·  (4)
                 
                ram Up Voted
                sridharan · rathinavelu · srini · sridaran Down Voted
                • Ttajen  
                  தீவிர கிறித்துவ நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணின் மனப்போக்கை சித்தரிக்க கூட இங்கு உரிமையில்லையா? குரூரம் யாரிடம் வெளிப்படுகிறது??
                  3 days ago
                   (0) ·  (0)
                   
                  • Sureshkumar Muthiah  
                    நீங்கள் அதை மத பிரசாரமாகவே பார்க்றீர்கள் உங்கள் கண்ணோட்டம் தவறாக உள்ளது. நாயகி தன் காதல் மணவாழ்க்கையை தன் படிப்பறிவால் ஏற்படுத்திகொல்கிறார் ஆனால் மதம் மாறி திருமணம் செய்தால் சமூகம் அவர்களின் வாழ்க்கை நல்லபடியாக இருக்குமா என்ற சந்தேகத்தை விதைத்துக்கொண்டே இருக்கிறது அதனால் தனக்கு ஒரு பிரச்னை வரும் பொழுது தான் தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் எழுவதாக இயக்குனர் சித்தரித்திருக்கிறார். மேலும் நாயகி கிருத்துவர் என்பதால் சிறுவயது முதல் எங்கு சென்றாரோ அங்கு சென்று தன் மன அமைதியை தேடுவதாக சித்தரிக்கபடுவது சரியே. பிரசங்கம் போல் உள்ளதாக சொல்லப்படும் பைபிள் வாக்கியங்கள் பாவங்கள் செய்தால் எப்படி வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று குறிப்பது போல் இருப்பதை கவனியுங்கள்
                    3 days ago
                     (0) ·  (0)
                     
                    • Ttajen  
                      தவறாக மாற்றி down vote அழுத்திவிட்டேன் சுரேஷ்.
                      2 days ago
                       (0) ·  (0)
                       
                    • SSamuthram  
                      எப்படி சார் .. உங்களால மட்டும் எந்த ரூபத்துல வந்தாலும் ஏசுவையும் அல்லாவையும் கண்டுபிடிக்க முடியுது ??? திரைப்படத்தை பார்த்து அதில் சொல்லப்பட்ட நல்ல விஷயத்தை பேச திட்டமிட்டு மறுப்பவர்கள் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் அழுக்கு கருத்துகளை உதற மறுப்பவர்கள். தயவு செய்து மதம் இனம் தாண்டி மனிதம் பேணுங்கள் அன்பு நண்பரே ...
                      3 days ago
                       (1) ·  (0)
                       
                      tajen Up Voted
                    • SKsenthil kumar  
                      குற்றம் கடிதல்’ படத்தை நல்ல திரைப்படம் என்று சொல்வதைவிட நல்ல சிறுகதை என்றே சொல்லத் தோன்றுகிறது.வாழ்த்துக்கள் பிரம்மா!

                    0 comments: