நானும் ரௌடிதான்
விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள முதல் படம், தனுஷ் தயாரிக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் ஆகிய இந்த காரணங்களே 'நானும் ரௌடிதான்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
நிஜத்தில் படம் எப்படி?
போலீஸை விட ரௌடிதான் கெத்து என்ற எண்ணத்தில் போலி ரௌடியாக ரவுண்டு வருகிறார் விஜய் சேதுபதி. நயன் தாராவைப் பார்த்ததும் பிடித்துப்போய் ஃபாலோ செய்கிறார். நயன்தாராவுக்காக நிஜமான ரௌடி என்று கெத்து காட்ட நினைக்கிறார். இன்ஸ்பெக்டர் மகன் விஜய் சேதுபதி போலீஸ் ஆகிறாரா? ரௌடி ஆகிறாரா? நயன்தாரா கேட்ட உதவியை செய்தாரா? அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
விஜய் சேதுபதி அசத்தலான பாய்ச்சலுடன் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். மை நேம் இஸ் பாண்டி பாண்டி என நயனிடம் இன்ட்ரோ கொடுப்பது, கண்டுகொள்ளாமல் போனதும் ப்ப்ப்பா சொல்வது, தங்கச்சி என அம்மா கூப்பிட சொல்லும்போது தடுமாறாமல் தங்கமே என சொல்லி சமாளிப்பது, ஃபிளாஷ்பேக் கேட்க என்னாச்சு என்று கேட்பது,காதம்பரியை சுருக்கி காதுமா...காதுமா... என்று கொஞ்சுவது... பார்த்திபனை வெளுத்து வாங்குவதாக வெற்று சவடால் விடுவது, காதலில் கிறங்குவது, ரௌடியாக காட்டிக்கொள்ள பகிரங்க முயற்சிகள் எடுப்பது என ஒவ்வொரு ஃபிரேமிலும் ஃபெர்பாமன்ஸில் பிச்சு உதறுகிறார்.
நயன்தாராவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். தனிமையில் தவிப்பது, இழப்பின் வலியை அனுபவிப்பது, அழுகையில் கரைவது என உணர்வுபூர்வமான நடிப்பில் மனதில் நிறைகிறார். உடல் மொழியிலும், குரல் மொழியிலும் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். நயன்தாரா நடிப்பில் தி பெஸ்ட் படம் என்று தாராளமாக சொல்லலாம்.
ஆர்.ஜே.பாலாஜியின் ஒன் லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் அதிக லைக்ஸ் கிடைக்கிறது. கிராஸ் டாக் நிகழ்ச்சியில் பேசுவதைப் போல பேசி, காலர் ட்யூன் வைக்க நம்பரை அழுத்தவும் என சொல்லி சமாளிப்பது, கருப்பு ஹல்க் என கலாய்ப்பது, ஆம்பள ஆம்பள என்று சைடு கேப்பில் சவுண்ட் விடுவது, தெறிக்க விடலாமா என ட்ரெண்டையும் சேர்த்துக் கொள்வது என வூடு கட்டி அடித்திருக்கிறார்.
''ஒரு பொண்ணு ஒரு பையனை லவ் பண்ணா என்ன கேட்பா? ரீசார்ஜ் பண்ணிக்கொடு. ஃபேஸ்புக்ல போட்டோ போட்டா லைக் பண்ணு. ஆடித்தள்ளுபடியில ஆறு டாப் வாங்கிக் கொடுன்னு சொல்வா. நீ என்ன கேட்குற?'' என்று கலாய்க்கும் போதும் பாலாஜி கவனம் ஈர்க்கிறார்.
வில்லன் பாதி, காமெடி மீதி என கலந்து கட்டி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
ராதிகா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஜார்ஜ். சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம்.
தாமரை எழுதிய நீயும் நானும் பாடலும், விக்னேஷ் சிவன் எழுதிய தங்கமே தங்கமே, என்னை மாற்றும் காதலே பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
ஸ்ரீகர் பிரசாத்தின் கத்தரியில் படம் தொய்வில்லாமல் செல்கிறது.
காஸ்டிங் விஷயத்தில் எந்த காம்ப்ரமைஸூம் செய்துகொள்ளாமல் இருந்ததற்காக இயக்குநர் விக்னேஷ் சிவனைப் பாராட்டலாம்.
ஹீரோ, ஹீரோயின், பிரச்சினை, சுபம் என்று சுந்தர்.சி படத்துக்கான ஒரு ஃபார்மட் சினிமாவில் நடிப்பையும், காமெடியும் மிக்ஸ் பண்ணி ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். அதனாலேயே முதல் பாதியில் ரசிகர்கள் அடித்த விசில் சத்தமும், கை தட்டல்களும் இரண்டாம் பாதியில் அதிகரித்துக்கொண்டே சென்றதுதான் ஆச்சர்யமான உண்மை.
ஆனால், திரைக்கதையில் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. ரசிகர்களை சிரிக்க வைக்கும் சீக்வன்ஸ் காட்சிகள், காமெடி வசனங்கள் இருந்தால் மட்டும் போதும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் நினைத்துவிட்டார் போல.
மொத்தத்தில் என்டர்டெயின் பண்ணும் விதத்தில் 'நானும் ரௌடிதான்' ரசிக்க வேண்டிய படம்.
நன்றி-
தஹிந்து
உதிரன்
3 comments:
ஹிண்டுல வந்த விமர்சனமா? நல்லாருக்கும்போதே டவுட்டானேன்..
where is your review. Rommbaaa nala niga review panarathu illlaiye ?? why
where is your review. roombaaa nala unga review varathu illayeee? why
Post a Comment