“சினிமா என்பது ஒரு கலைதான். அதில் கலைப் படம், வர்த்தகரீதியான படம் என்ற ஒரு விஷயமே கிடையாது. 10 லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு படம் எடுத்தாலும் அந்தப் பணம் எப்படித் திரும்ப வரும் என்றுதான் பார்க்கிறார்கள்” என்று மெல்லிய தாடியை வருடிக்கொண்டு சிரிக்கிறார் 'தூங்காவனம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ராஜேஷ் எம்.செல்வா. படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்தவரிடம் பேசியதிலிருந்து…
‘தூங்காவனம்' படத்தைப் பற்றிச் சொல்லுங்கள். மிக விரைவாகப் படத்தை முடித்துவிட்டீர்களே?
இந்தப் படத்தில் கமல் சார் ஒரு சராசரி மனிதர். அவருடைய கடமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம்தான் கதை. ‘தூங்காவனம்' த்ரில்லர், குடும்பப் பின்னணி கலந்த முழுமையான ஒரு படமாக இருக்கும். கமல் சார் இந்த மாதிரியான கதைக் களத்தில் ஒரு படம் பண்ணி நீண்ட நாட்கள் ஆகின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே ஒருபுறம் எடிட்டிங் நடக்கும். படப்பிடிப்பு முடிவடையும்போது, எடிட்டிங்கும் முடிந்து படம் தயாராக இருக்கும். படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாள் டப்பிங்குக்கு வந்துவிட்டோம். எடிட்டிங்குக்காக மட்டும் தனியாக 2 மாதம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.
ஏழு வருடங்களாக கமலிடம் பணியாற்றிவருகிறீர்கள். அவரிடம் வியந்து பார்க்கும் விஷயம் என்றால் எதைச் சொல்லுவீர்கள்?
பெரிதாக ஒரு விஷயத்தை நாம் சொல்லி விட்டோம் என்று நினைத்தோம் என்றால் அதைவிடப் பெரிய விஷயத்தை உடனடியாகச் சொல்லுவார் கமல் சார். இப்போது அடுத்த கட்ட தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது தயாரிப்பாளரிலிருந்து படக் குழுவினர்வரை ஐ-பாட் மாதிரியான ஒரு பொருள் கையில் இருக்கும். படப்பிடிப்பின்போது கட் என்று சொன்ன அடுத்த நொடி அவர்களுடைய ஐ-பாடில் எடுத்த காட்சியைப் பார்க்கலாம். மொத்தப் படக் குழுவினரும் அந்தக் காட்சியில் திருத்தங்கள் ஏதாவது இருந்தால் சொல்லலாம்.
தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருந்தாலும், அங்கும் பார்க்கலாம். படப்பிடிப்பு தாமதமானது என்றால், “என்னப்பா… இன்னும் முதல் ஷாட் எனக்கு வரவில்லை” என்று தயாரிப்பாளர் கேட்கலாம். இந்த விஷயத்தை கமல் சார் பண்ணியிருக்கிறார். இந்த மாதிரியான விஷயங்களை எங்கிருந்து எடுக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடம் நானே கேட்டிருக்கிறேன். இதைப் போல நான் வியக்கிற விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
கமல் தனது கதைகளை எந்தக் களத்திலிருந்து எடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கமல் சாரின் வேகத்துக்கு இன்னும் நம்முடைய தொழில்நுட்பம் தயாராகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேரம், பணம், தொழில்நுட்பம் இந்த மூன்றும் இருந்தால் போதும். அவரிடம் நிறைய ஐடியாக்கள் இருக்கின்றன.
‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’(Planet of the Apes) என்று ஹாலிவுட்டில் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன அல்லவா, அந்த மாதிரியான ஒரு கதையை கமல் சார் 20 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டார். அதை நான்தான் அவருக்கு டிஜிட்டலாக மாற்றிக்கொடுத்தேன். அந்தக் கதையைப் படிக்கும்போது எனக்குக் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. அதற்குத் தலைப்புகூட வைத்துவிட்டார். ஆனால், அதை நான் சொல்ல முடியாது. ‘மர்மயோகி' கதையைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் குளிர் ஜுரத்தில் படுத்துவிட்டேன். ஏனென்றால் உதவி இயக்குநராக அப்படத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம்.
ஒவ்வொரு காட்சியிலும் 2,000 முதல் 3,000 துணை நடிகர்கள் இருப்பார்கள். கமல் சார் எப்போதுமே அதிகமான உதவி இயக்குநர்கள் வைத்துக்கொள்ள மாட்டார். ‘மர்மயோகி' பெரிய படம் என்பதால் மொத்தமாக 6 உதவி இயக்குநர்கள்தான். நான் சொல்லும்போது அதன் பிரம்மாண்டம் தெரியாது. படமாகப் பார்க்கும்போதோ, கதையாகப் படிக்கும்போதோதான் தெரியும்.
‘தூங்காவனம்' இயக்குநர் நீங்கள்தான் என்று கமல் கூறியபோதும், கமலை முதல் நாள் இயக்கியபோதும் ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லுங்கள்...
அவர் வாய்ப்பு கொடுத்த தினத்தை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஒரு நாள் ரொம்ப கோபமாக அலுவலகம் வந்தார். அனைவரையும் திட்டிவிட்டு மேலே உள்ள அவருடைய அறைக்குச் சென்றுவிட்டு என்னை அழைத்தார். யாருக்கோ அல்லது எனக்கோ வேலை போகப் போகிறது என்றுதான் நினைத்தேன். “நான் முடிவு பண்ணிவிட்டேன், நீதான் இந்தப் படத்தை இயக்க வேண்டும்” என்றார். அப்படியா சார் என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டுக் கீழே வந்துவிட்டேன். மாலையில்தான் நாம் கமல் சாரை இயக்கப்போகிறோம் என்ற உணர்வே எனக்கு முழுதாக உறைத்தது.
அதேபோல படப்பிடிப்புத் தளத்தில் அவர் இயக்கும்போது ஆக் ஷன் என்று அவர் சொல்ல மாட்டார், மூன்று வருடங்களாக நான்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். மானிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘கட்' மட்டும் அவர் சொல்வார். இந்தப் படத்தில் ‘கட்'டும் நான் சொல்ல வேண்டியதிருந்தது. அவ்வளவுதான்.
தொழில்நுட்பரீதியாக கமல் படப்பிடிப்புத் தளங்களில் எப்படி?
நாளை இதைப் பண்ணப் போகிறோம் என்று இரவு சொல்லிவிடுவார். எப்படி என்று எல்லாரும் யோசிப்போம், இறுதியில் எப்படியும் முடியாது என்று நினைத்து விட்டுவிடுவோம். காலையில் படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போதும், எப்படியும் முடியாது என்ற மனநிலையில்தான் இருப்போம். மாலையில் அந்தக் காட்சியை நினைத்ததை விட மிகவும் அற்புதமாக முடித்திருப்போம். அதுதான் கமல் சார். எப்படி என்று சொல்ல முடியாது, ஏனென்றால் எல்லாமே கமல் சாரின் ஐடியாக்கள்.
‘உத்தம வில்லன்' படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
‘உத்தம வில்லன்' தோல்வி என்று நான் நினைக்கவே இல்லையே. அப்படம் தோல்வி என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். சரியான நேரத்தில் திட்டமிட்டபடி வெளியாகியிருக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் வசூல் என்பதுதான் ஒவ்வொரு படத்துக்கும் பெரியது. அந்தப் படம் முதலில் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. வியாபாரத்தில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
- ராஜேஷ் எம். செல்வா
நன்றி-தஹிந்து
0 comments:
Post a Comment