‘தல பெரிய ஆளா, தளபதி பெரிய ஆளா?’ என்ற ‘நெட்’டடிப் பஞ்சாயத்தெல்லாம் பழசாகிவிட்டது. பாகுபலியின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்ட விருந்து ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகத் தற்போது கிராஃபிக்ஸில் எந்தப் படம் பெரிது என்று வறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இணைய ரசிகர்கள்.
'புலி’ படத்தின் டீசரைப் பார்த்ததுமே பலரும் அதை ‘பாகுபலி’ படத்துடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘பாகுபலி’ படத்துடன் ‘புலி’ படத்தை இப்படி ஒப்பிட நினைப்பது சரியாக இருக்காது. அதேபோல ஒரு படத்தின் மொத்த ஷாட்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்யப்பட்ட ஷாட்கள் எத்தனை? அவை எத்தனை நிறுவனங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டு கிராஃபிக்ஸ் வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது, எத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள் அதில் பணியாற்றினார்கள் போன்ற அளவுகோல்கள் முக்கியமானவை.
‘பாகுபலி’ முழுவதும் சரித்திரப் பின்னணியில் வெளியான படம். ‘புலி’ ஒரு ஃபேன்டஸி சரித்திரக் கதை. புலி படமும் 95% விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸ் காட்சிகளை நம்பியே தயாராகியிருக்கிறது என்கிறார்கள். ‘பாகுபலி’ படத்துக்கு நிவாசமோகன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணியைச் செய்துவருகிறார். ‘புலி’ படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன். இவர்கள் இருவரும் இயக்குநர் ஷங்கரின் பல படங்களில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்தான். ஆனால், புலி படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு ரசிகர்கள் நம்பும்படியாக ரியல் லுக்குடன் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ அதைப் பொறுத்தே அதன் தரத்தை முடிவு செய்ய முடியும்.
ஆனால், இந்தியப் படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் பாகுபலிக்கு முன் பாகுபலிக்குப் பின் என்று கோடு கிழித்துவிட்டதற்கு, அந்தப் படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் காட்சிக் கற்பனைத் திறனும், அதை அப்படியே விஷுவலில் கொண்டுவர எல்லா சாத்தியங்களையும் உருவாக்கிக்கொண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரின் நம்பிக்கையும் உழைப்பும்தான் முக்கியக் காரணங்கள்.
இனி, பாகுபலியில் வியக்கவைத்த விஷுவல் எஃபெக்ட் காட்சிகள் எப்படி உருவாயின என்று பார்க்கலாம். பாகுபலியில் இந்தியா, மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 விஷுவல் எஃபெக்ட் ஸ்டுடியோக்களுக்கு வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த 600 வரைகலை ஓவியர்கள் இரவு பகலாகப் படம் தயாரான ஹைதராபாத்திலேயே பணியாற்றினார்கள்.
சரித்திரப் பின்னணியில் எடுக்கப்படும் ஒரு படத்துக்கு அரண்மனையின் 360 டிகிரி தோற்றம், அரண்மனைக்கு முன்பிருக்கும் நுழைவுப் பகுதி, அரண்மனை அமைந்திருக்கும் கோட்டைக் கொத்தளம், அதற்குள் அமைந்திருக்கும் சிறைச்சாலை, அரண்மனை லாயம், அரண்மனையின் தர்பார் ஹால், அரண்மனையில் மன்னன் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகள், போர்க்களம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிகள் இடம்பெறலாம்.
விஷுவல் எஃபெக்ட் துறை வளர்ச்சியடைவதற்கு முன்புவரை பாகுபலி போன்ற ஒரு சரித்திரப் படமென்றால், தற்போது சுற்றுலா தலங்களாக மாறிவிட்ட அரண்மனைகளில் படப்பிடிப்பு நடத்தப்படும். போர்க்களக் காட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் வரவழைக்கப்படுவார்கள். அனைவருக்கும் டம்மி ஆயுதங்கள் செய்ய வேண்டியிருக்கும். நூற்றுக்கணக்கான குதிரைகள் நேரடியாகப் பயன்படுத்தப்படும். அரண்மனையில் பல்வேறு உள்ளரங்கக் காட்சிகளுக்கு செட் போடப்பட்டு எடுக்கப்படும்.
ஆனால், இன்று நிலைமையே வேறு. இயக்குநரின் கற்பனைக்கு ஏற்ப, காலத்தால் அழிந்துபோன பிரம்மாண்டமான அரண்மனைகளைக் கூட ‘போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட் (Photo realistic effects in vfx) என்ற 3டி கிராபிக்ஸ் மூலம் மீண்டும் உருவாக்கிக் காட்டிவிடலாம். ‘போட்டோ ரியலிஸ்டிக்’ என்ற இரண்டு வார்த்தைகளின் அர்த்தமே இது எப்படிப்பட்ட கிராஃபிக்ஸ் உத்தி என்பதை உங்களுக்குச் சொல்லிவிடும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட உயிர்களும், கடல், காடு, மலை, அருவி உள்ளிட்ட இயற்கையும், மனிதனால் உருவாக்கப்பட்ட ஜடப்பொருட்களும் யதார்த்தத்தில் இருப்பதைக் கண்ணாடிபோல உள்ளது உள்ளபடி காட்டக்கூடியவை ஒளிப்படங்கள். வீடியோ வந்துவிட்டாலும் போட்டோக்களை நாம் பொக்கிஷமாக மதிப்பதற்குக் காரணம் அதில் இருக்கும் ரியாலிட்டி.
சினிமாவில் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையைப் பொறுத்தவரை இன்று ‘போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட்’ என்பது அதிகம் புழங்கும் பதமாகிவிட்டது. இயக்குநர்கள் அனைவரும் “எனது படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் போட்டோ ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த அட்டகாசமான தொழில்நுட்பம்தான்.
பாகுபலி படத்தில் இதற்கு முன் எந்த இந்தியப் படங்களிலும் இல்லாத அளவுக்கு போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட்ஸ் உத்தி முழுமையாகவும் அதன் சாத்தியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. ‘பாகுபலி முதல் பாகத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்த ‘மகிழ்மதி’ தேசத்தின் அரண்மனையும் அதன் மற்ற பகுதிகளும் முதலில் பென்சில் டிராயிங் முறையில் வரையப்பட்டு, பின் அந்த ஓவியங்கள் கணிப்பொறியில் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி டிராயிங் படங்களாக மாற்றப்பட்டன. இப்படி மாற்றப்பட்ட அரண்மனையில் ஊறுகாய் மாதிரி தேவைப்படும் இடங்களில் கொஞ்சம் செட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்படி அரைகுறையாகப் போடப்பட்ட செட்டுகளின் பின்னணியில் பச்சை நிறத் திரைச்சீலைகள் வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் நடிகர்களின் ‘லைவ் ஆக்ஷன்’ நடிப்பு படமாக்கப்பட்டது. பிறகு எது செட், எது போட்டோ ரியலிஸ்டிக் இமேஜ் என்று தெரியாத வண்ணம், ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டு அவை எவ்வாறு போட்டோ ரியலிஸ்டிக் தன்மைக்கு வாய் பிளக்க வைக்கும் பிராமாண்ட காட்சிகளாக மாற்றப்பட்டன என்பதன் படிநிலைகளை அடுத்துப் பார்க்கலாம்.
நன்றி-த இந்து
0 comments:
Post a Comment