Monday, September 21, 2015

எனக்காக ஒரு கொலை செய்வாயா?''-பட்டுக்கோட்டை பிரபாகர்

பல குற்ற வழக்குகளில் குற்ற வாளியைக் கண்டுபிடிக்க காவல் துறை பல வருடங்கள் பல விதமாக போராடும். கடைசியில் ஒரு சின்ன தடயம் குற்றவாளியை நோக்கி விரல் நீட்டும்.
அதே போல தடயவியல் துறை வளர்ச்சி அடையாத அல்லது அப்படி ஒரு துறையே தொடங்கப்படாத காலங் களில் நிகழ்ந்த பல குற்றங்கள் கடைசி வரை கண்டுபிடிக்கப்படாமல், அதன் கோப்புகளை பரணில் போட்டுவிடுவார் கள். இப்படிப்பட்ட வழக்குகளை ‘கோல்ட் கேசஸ்’ (cold cases) என்பார்கள்.
அப்படி கிடப்பில் போடப்பட்ட பல பழைய வழக்குகள் தடயவியல் துறை நவீனமடைந்த பிறகு, தூசி தட்டப்பட்டு பல பத்தாண்டுகள் கழித்தும் குற்றாவாளி களைத் தேடிப் பிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.
லண்டனில் ஃப்ரெட் - சார்கலாட்டி கிராப் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதி. முதலில் மண வாழ்க்கை மேகம் ஒன்பதில்தான் மிதந்து கொண்டிருந்தது. போகப் போக சர்க்கரை போடாத காபியாக கசக்கத் தொடங்கியது. அடிக்கடி வாக்குவாதம். சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்கள் தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
விவகாரம் விவாகரத்து வரை சென்றது. பிரிந்த பிறகு இரண்டு பேருக்கும் மனசாட்சியின் உறுத்தல். ‘‘காதலித்தோமே.. அந்தக் காதலுக்கு என்ன அர்த்தம்?’’ என்று தனித்தனி யாகப் புழுங்கினார்கள். மீண்டும் சந்தித் தார்கள். மனம்விட்டுப் பேசினார்கள். விவாகரத்தை ரத்து செய்துவிட்டு மீண் டும் திருமணம் செய்துகொண்டார்கள். இது சிறுகதையாக இருந்தால் இத் துடன் சுபம்.
ஆனால், கதை முடியவில்லை. கொஞ்ச நாட்கள் போனதும் மீண்டும் அவர்களுக்குள் தகராறு. சென்ற முறை யார் விட்டுக் கொடுப்பது என்கிற ஈகோ பிரச்சினை. இந்த முறை, பிரச்சினைக்குக் காரணம் இன்னொரு பெண். விவாக ரத்து ஆகி பிரிந்து இருந்தபோது ஃப்ரெட்டுக்கு முளைத்த ஒரு காதல் ரகசியமாக தொடர்வதை ஒரு மனைவி எப்படி அனுமதிப்பாள்?
ஒரு நல்ல காலைவேளையில் சார் கலாட்டி வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் வீட்டை விட்டுச் சென்றதை, தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி அவளை சமாதானப்படுத்தச் சொன்னான் ஃப்ரெட்.
ஆனால், யாராலும் அவளைத் தொடர்புகொள்ள முடிய வில்லை. அவள், தான் இருக் குமிடத்தை யாரிடமும் சொல் லாமல் எங்கோ சென்றுவிட் டாள். புதிய காதலியுடனும் ஒன்றமுடியாமல், மனைவியை யும் மறக்க முடியாமல் தினம் புழுக்கத்துடனேயே ஃப்ரெட் வாழ்ந்து வருகிறான் என்று இங்கேகூட கதையை முடிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், உண்மைக் கதை இன் னும் முடியவே இல்லை. எங்கோ சென்றுவிட்ட மனைவியை அவளது தோழியான கார்லி ரோஸ்லின் விடாமல் தேடிக் கண்டுபிடிக்க முயன்றாள். ஃப்ரெட்டை சந்தித்து பல முறை விசாரித்தாள். ‘அதெப்படி ஒரு சின்ன தகவல்கூட இல்லாமல் ஒரு பெண் தொலைந்து போக முடியும்?’ என்று அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தோழி ஃப்ரெட்டின் புதிய காதலியான விண்ட்லா மேரியை தனிமையில் சந்தித் தாள். ‘‘எனக்கு ஃப்ரெட் மேல் சந்தேக மாக இருக்கிறது. அவன்தான் அவளை ஏதாவது செய்திருக்க வேண்டும்’’ என்று சொன்னாள்.
‘‘ஒருவேளை உன் புதிய காதலுக் காக தன் காதல் மனைவியை அவன் கொலை செய்திருந்தால், நாளைக்கு இன் னொரு பெண்ணுக்காக உன்னையும் அவன் கொலை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம்?’’ என்று கார்லி ரோஸ் லின் கேட்ட கேள்வி விண்ட்லா மேரியை சிந்திக்க வைத்தது. அவளுக்குள் உயிர் பயத்தை விதைத்தது. இருவரும் உண்மையைக் கண்டுபிடிக்கத் தீர் மானித்து ஒரு திட்டம் வகுத்தார்கள்.
ஃப்ரெட்டை ஒரு விடுமுறைக்கு ஒரு படகு வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் மேரி. அவனுக்கு நிறைய மது ஊற்றிக் கொடுத்தாள். தன்னுடன் சரசமாட அனு மதித்தாள். அவன் இரண்டு விதமான மயக்கத்தில் இருந்தபோது மெதுவாக ஆரம்பித்தாள்.
‘‘நீ எனக்காக எது வேண்டுமானாலும் செய்வாயா?''
’’நிச்சயமாக செய்வேன்!''
‘‘எனக்காக ஒரு கொலை கூட செய்வாயா?''
‘‘ஏற்கெனவே உனக் காக ஒரு கொலை செய்து விட்டேன் கண்ணே…'' என்று அவன் உளறி விட்டான்.
அவள் அதிர்ச்சியில் உறைந்துபோனாள். தன் அதிர்ச்சியை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, அவன் செய்கைக்கு மகிழ்ந்தவள்போல காட்டிய படியே ‘‘எப்படிக் கொலைசெய்து, பிணத்தை எப்படி அப்புறப்படுத்தினாய்?’’ என்று கேட்டாள்.
‘‘ஊருக்கு வெளியே இருந்த ஒரு காட்டுப் பகுதிக்கு பிக்னிக் அழைத் துச் சென்று, தனிமையான ஓர் இடத் தில் அவள் கழுத்தை நெரித்துக் கொன்றேன். பிறகு, தயாராக வாங்கிச் சென்ற பெட்ரோலை அவள் சடலத்தின் மீது ஊற்றி எரித்தேன். பொறுமையாகக் காத்திருந்து ஒரு எலும்புத் துண்டைக்கூட விட்டுவைக்காமல் பொறுக்கி எடுத்து, ஆற்றில் வீசிவிட்டேன். அதன் பின்னர் மனைவி கோபித்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டதாக எல்லோரிடமும் சொன் னேன்’’ என்று நடந்ததை சொன்னான் ஃப்ரெட்.
மேரியும், ரோஸ்லினும் காவல் துறைக்குச் சென்று ஓர் போலீஸ் அதி காரியை அணுகி எல்லாவற்றையும் சொன்னார்கள். அவனே ஒப்புக்கொண்டி ருந்தாலும் ஆதாரம் தேவைப்பட்டது. கொலை நடந்த காட்டுப் பகுதிக்குச் சென்றுத் தேடினார்கள்.
கொலை நடந்த வருடம் 1981. உண்மை வெளிப்பட்ட வருடம் 1990. ஒன்பது ஆண்டுகள் ஆனதால் எந்தத் தடயமும் போலீஸுக்குக் கிடைக்கவில்லை. அதே போல எலும்புத் துண்டுகள் வீசப்பட்ட ஆற்றிலும் தேடினார்கள். எதுவுமே கிடைக்கவில்லை.
கைது செய்து அதிரடியாக விசாரிக்க முடிவுசெய்து, ஃப்ரெட்டைக் கைது செய்தார்கள். ‘‘மேரியிடம் அப்படி நான் எதுவும் சொல்லவே இல்லை. தற்போது மேரிக்கும் எனக்கும் சில பிரச்சினைகள். அதனால் என்னைப் பழிவாங்க இப்படிப் பொய் சொல்கிறாள்’’ என்று சாதித்தான்.
அவன் சொல்வதுதான் பொய் என்பது புரிந்தாலும் அதை நிரூபிக்க முடியாமல் போலீஸார் தவித்தார்கள். அந்தக் காவல் அதிகாரி கொலை நடந்த காட்டுப் பகுதியில் மீண்டும் மீண்டும் சுற்றி வந்தார். ஒரு விஷயம் மட்டும் அவரை ஈர்த்தது.
கொலை நடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு மரம் மட்டும் வளர்ச்சி குறை வாக இருப்பதைப் பார்த்தார். தடயவியல் துறை, விவசாய விஞ்ஞானிகளுடன் களமிறங்கியது. வளர்ச்சி குன்றிய மரத்தை சோதனை செய்தார்கள். பெட்ரோலியப் புகை படிந்ததால் குறிப் பிட்ட அந்த ஒரு மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த ஆராய்ச்சி முடிவு மற்றும் மேரி யின் வாக்குமூலம் இவற்றின் அடிப்படை யில் கொலை செய்யப்பட்டவரின் உடல் இல்லாமலேயே சந்தர்ப்ப சாட்சியங் களின் அடிப்படையில் ஃப்ரெட்தான் கொலைகாரர் என்று கோர்ட் தீர் மானித்து, 75 வருடங்கள் சிறைத் தண்டனை அளித்தது.
இதனால் ஃப்ரெட் ஒரு பாடம் கற்றுக் கொண்டிருப்பான். இனிமேல் கொலை செய்தால் பிணத்தை எரிக்கும்போது மரங்கள் இல்லாத பகுதியில் வைத்து எரிக்க வேண்டும் என்று. ஆனால், நவீன தடயவியல் துறையின் முன்னேற்றத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியும் என்பதே உண்மை!
- வழக்குகள் தொடரும்…


நன்றி-தஹிந்து

0 comments: