நயன்தாரா நடிப்பில் ஒரு பேய் படம், 'நெடுஞ்சாலை' ஆரி நடிக்கும் படம் என்ற காரணங்களே 'மாயா' படத்தைப் பார்க்க வைத்தன.
வழக்கமான பேய் படமா 'மாயா'? என்ற கேள்வியோடு தியேட்டருக்குள் நுழைந்தோம்.
'மாயா' எந்த மாதிரியான படம்?
கதை: கணவனைப் பிரிந்து வாழும் நயன்தாரா பொருளாதாரச் சுமையில் தவிக்கிறார். பரிசுப் பணத்துக்காக ஒரு திகில் படத்தைப் பார்க்கிறார். ஆனால், அந்தப் படம் அவரைப் புரட்டிப்போடுகிறது. பிரிந்த கணவனை சேர்க்க வைக்கிறது. அது என்ன படம்? அந்தப் படத்துக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் மீதிக் கதை.
படத்துக்குள் இன்னொரு படம் என இரு கதைகளை சொல்லி, அதை ஒற்றைப் புள்ளியில் இணைத்த அறிமுக இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கு வெல்கம் பொக்கே.
குழந்தையிடம் பாசம் காட்டும்போதும், தனிமையில் கடன்சுமையில் கலங்கும்போதும், பாசத்தில் தவிக்கும்போதும் கதாபாத்திரத்தை கண் முன் நிறுத்துகிறார்.
ஆரி அலட்டல் இல்லாத அளவான நடிப்பில் கவர்கிறார். அம்ஜத்கான், ரேஷ்மி, ரோபோ ஷங்கர், மைம் கோபி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
பேய் படத்துக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிகவும் முக்கியம் என்பதை அச்சரம் பிசகாமல் உணர்த்தி இருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் மாயவனம் காடு அமானுஷ்யமாய் காட்சி அளிக்கிறது. நள்ளிரவு திக் திக் அனுபவங்களை ரான் யோஹன் இசை ரசிகர்களுக்குக் கடத்துகிறது.
ரசிகர்களின் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முதல் பாதியில் வந்த காட்சிகளை இரண்டாம் பாதியில் ரிப்பீட் செய்கிறார்கள். டி.எஸ்.சுரேஷ் அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் படம் இன்னும் நறுக்கென்று இருந்திருக்கும்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக நிறைய பேய் படங்கள் வருகின்றன. அதில், 'மாயா' தனித்து நிற்கிறது.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் பிசாசு என்பது கெடுதல் செய்யாது. நல்ல பிசாசு என்று அன்பை வலியுறுத்தினார். அஸ்வின் சரவணன் இயக்கிய 'மாயா' படம் எமோஷனல், சென்டிமென்ட் என்பதை அடிப்படையாகக் கொண்டு நகர்கிறது.
மொத்தத்தில் லாஜிக் பிரச்சினை இல்லாத, கச்சிதமான பேய் சினிமா 'மாயா'.
விஷூவல் அனுபவம், பின்னணி இசை, கதையமைப்பு, திரைக்கதைக்காக 'மாயா' பட அனுபவத்தை நீங்களும் அடையலாம்.
நன்றி-தஹிந்து
0 comments:
Post a Comment