விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஏழாவது தமிழ்ப் படம், விஷ்ணுவர்தன் - ஆர்யா கூட்டணியில் ஐந்தாவது படம், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்ற இந்த காரணங்களே 'யட்சன்' மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
''டபுள் ஹீரோ சப்ஜெக்ட். எப்பவுமே எனக்கு ஒர்க் அவுட் ஆகும்'' என்று கிளைமாக்ஸில் விஷ்ணுவர்தனே கிருஷ்ணாவிடம் சொல்கிறார்.
உண்மையில், அது ஒர்க் அவுட் ஆனதா?
'யட்சன்' கதை: சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வருகிறார் கிருஷ்ணா. தூத்துக்குடியில் பிரச்சினையில் சிக்கும் ரவுடி ஆர்யா, அதிலிருந்து தப்பிப்பதற்காக சென்னை வருகிறார். இருவரும் பயணிக்கும் வாகனங்கள் மாறுவதால், வாய்ப்புகளும் மாறுகின்றன. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? இருவரும் என்ன ஆனார்கள்? என்பதுதான் முழு கதையும் திரைக்கதையும்.
வார இதழ் ஒன்றில் சுபா எழுதிய 'யட்சன்' தொடர் தான் சுபா, விஷ்ணுவர்தன் கூட்டணியில் திரைப்படமாக வெளியாகி உள்ளது.
சின்னச் சின்ன தகிடுதத்தங்கள் செய்யும் ஆர்யா அடிப்பது, தூக்கிப் போட்டு மிதிப்பதுமாக ரவுடிக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் நச்சென்று உட்கார்கிறார். ஃபெர்பாமன்ஸில் பின்னி எடுக்கும் எந்த வேலையும் இல்லாததால் அலட்டல் இல்லாத ஆர்யாவாக இயல்பாக வந்து போகிறார்.
நடிப்பு மீதான காதலில் கிருஷ்ணா செய்யும் சேட்டைகளை ரசிக்க முடியவில்லை. வாய்ப்பை இழந்த பின்னும் பெரிய ரியாக்ஷன் காட்டாத கிருஷ்ணா இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்.
தீபா சந்நிதி கண்களால் மட்டும் அவ்வப்போது உள்ளேன் ஐயா அட்டனென்ஸ் போடுகிறார். மற்றபடி, எதையோ தவறவிட்டதைப் போல தயக்கமும், தவிப்புமாக நடித்திருக்கிறார்.
''போட்ட ஜட்டியோட வா பொழைச்சுக்கலாம்'' என்று ஹீரோவுக்கு நம்பிக்கை விதைக்கும் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்வாதி கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார்.
தம்பி ராமய்யா முதல் பாதியில் கலகலப்பூட்டுகிறார். ''ரவுடி டா''. ''டான் வீட்டுக்கு வந்துட்டு டானையே 'டா'ன்னு கூப்பிடுறியா'' என பேசும் ஆர்.ஜே பாலாஜி சிரிக்க வைக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அடில் ஹூசைன் கவனம் ஈர்க்கிறார். செண்ட்ராயன், பொன்வண்ணன், அஜய் ரத்னம், அழகம் பெருமாள், ஃபைஸ் ஸ்டார் கிருஷ்ணா, ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் காக்கா பொண்ணு பாடல் வழக்கமான குத்துப்பாடல். ஆனால், திரைக்கதையில் அந்தப் பாடல் வரும் இடம் தொய்வை ஏற்படுத்துகிறது. பின்னணி இசையில் யுவன் எந்தக் குறையும் வைக்கவில்லை.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். ஸ்ரீகர் பிரசாத் சரியாக கத்தரி போட்டிருப்பதை உணர முடிகிறது.
டெக்னிக்கலாக பார்க்கும்போது படத்தில் எந்த மைனஸும் இல்லை.
திரைக்கதையில்தான் எந்த அழுத்தமும் இல்லை. தொடர், நாவலுக்கென்று இருக்கும் முடிச்சுகள் - சுவாரஸ்யங்கள், ட்விஸ்டுகள் 'யட்சன்' படத்திலும் இருக்கின்றன. ஆனால், முழு திரைப்படத்துக்கான பேக்கேஜாக இல்லை என்பதுதான் குறை.
அதிரடி படமா, காமெடிப் படமா, சஸ்பென்ஸ் த்ரில்லரா என்ற குழப்பம் இயக்குநருக்கே வந்திருக்கிறது. அதனால்தான் எதிலும் சேர்த்தியில்லாமல் பொத்தம் பொதுவாக தேமே என்று திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ராஜா - சுபா கூட்டணி ஹிட்டடித்தது. ஆனால், 'யட்சன்' படத்தில் விஷ்ணுவர்தன் - சுபா கூட்டணி சறுக்கி இருக்கிறது.
''டபுள் ஹீரோ சப்ஜெக்ட். எப்பவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகும்'' என்று கிளைமாக்ஸில் விஷ்ணுவர்தனே கிருஷ்ணாவிடம் சொல்கிறார்.
'யட்சன்' என்றால் இயக்குபவன் என்றும் ஓர் அர்த்தம் உண்டு.
ஆனால், அந்த இயக்குநரே திருவாய் மலர்ந்தது பொய்யாகிப் போகுமென்றால், வேறென்ன சொல்ல?
நன்றி-தஇந்து
0 comments:
Post a Comment