Saturday, September 05, 2015

எப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : வெங்கட் கிருஷ்ணா
நடிகை :உமாஸ்ரீ
இயக்குனர் :வேலு
இசை :ஆல்வின்
ஓளிப்பதிவு :சிவா
ஒகேனக்கல் பகுதி நீர்வீழ்ச்சியில் தற்கொலை செய்துக் கொள்பவர்களின் உடல்களை மீட்பது மற்றும் தவறி தண்ணீரில்  விழுபவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார் நாயகன் வெங்கட் கிருஷ்ணா. அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்டின் மாமா மகள் சோனியா, மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வெங்கட் மீது அன்பு கொண்டு அவரையே திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்துடன் இருந்து வருகிறார்.

ஆனால், வெங்கட்டோ குடும்பப் பகை காரணமாக சோனியாவை விரும்பாமல் இருக்கிறார். ஒரு நாள் ஒகேனக்கல் பகுதிக்கு தன் அண்ணன், அண்ணி, குழந்தையுடன் சுற்றுலா வருகிறார் நாயகி உமாஸ்ரீ. அப்போது உமாஸ்ரீ திடீர் என்று ஆற்றில் விழுந்து விடுகிறார். இதை அறிந்த நாயகன் வெங்கட் ஆற்றில் விழுந்து உமாஸ்ரீயை தேடுகிறார். ஆனால் அவரது உடல் கிடைக்காமல் போகிறது. இதனால் வெங்கட் மனவேதனை அடைகிறார். ஆனால் குடும்பத்தார் உமாஸ்ரீ இறந்து விட்டதாக கருதி சென்னை சென்று விடுகின்றனர்.

அன்று இரவு சோனியா, வெங்கட்டிடம் ஆற்றோரத்தில் ஒரு பெண்ணின் குரல் கேட்டதாக கூறுகிறார். உடனே வெங்கட் அங்கு சென்று பார்க்கும் போது உமாஸ்ரீ அடிப்பட்ட நிலையில் மயக்கமாக கிடக்கிறார். உடனே வெங்கட் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கிறார். உயிர் பிழைத்த உமாஸ்ரீ தன்னை காப்பாற்றிய வெங்கட் மீது காதல் வயப்படுகிறார். காலப்போக்கில் தன்னுடைய காதலையும் வெங்கட்டிடம் கூறுகிறார். அவரும் உமாஸ்ரீயின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கிடையில் உமாஸ்ரீ உயிருடன் இருப்பது உமாஸ்ரீயின் அண்ணனுக்கு தெரியவருகிறது. அண்ணன் குழந்தை, உமாஸ்ரீ ஆற்றில் விழுந்த அதிர்ச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உமாஸ்ரீயை அழைத்து வந்தால் குழந்தையின் உடல் சரியாகிவிடும் என்று ஒகேனக்கல் பகுதிக்கு சென்று உமாஸ்ரீயை அழைக்கிறார். உமாஸ்ரீயும் குழந்தையை பார்த்துவிட்டு வருகிறேன் என்று வெங்கட்டிடம் கூறி சென்னைக்கு செல்கிறார்.

உமாஸ்ரீ சென்னைக்கு சென்று விட்டதால் அவள் ஞாபகமாகவே இருந்து வருகிறார் வெங்கட். இதையறிந்த வெங்கட்டின் மாமா மகள் சோனியா, உமாஸ்ரீயை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துக் கொள் என்று கூறுகிறார். அதேசமயம், உமாஸ்ரீ கிடைக்காத பட்சத்தில் என்னை திருமணம் செய்துக்கொள் என்றும் கூறுகிறார்.

உமாஸ்ரீயை தேடி சென்னைக்கு புறப்படுகிறார் வெங்கட். இறுதியில் உமாஸ்ரீயை கண்டுபிடித்தாரா? அல்லது சோனியாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் கிருஷ்ணா சிறப்பாக நடித்திருக்கிறார். தண்ணீரில் குதித்து மக்களை காப்பாற்றுவது, காதலுக்காக ஏங்குவது என வித்தியாசமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். 

படத்தில் சோனியா, உமாஸ்ரீ என்று இரண்டு கதாநாயகிகள். இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மீன் வியாபாரம் செய்யும் பெண்ணாக பாவாடை தாவணியில் அழகாக நடித்திருக்கிறார் சோனியா. சென்னை பெண்ணாக நடித்திருக்கிறார் உமாஸ்ரீ. இவர் பார்வையாலேயே காதலை அழகாக வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

மற்ற கதாபாத்திரங்களும் காட்சிகளுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக வெங்கட்டின் பாட்டியாக வருபவர் அளவான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

கிராமத்து பின்னணியில் அழகான காதலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேலு. குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அவர்களிடம் திறமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார். கதைக்கு ஏற்றாற்போல் திரைக்கதையும் அருமையாக உருவாக்கியிருக்கிறார்.

சிவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒகேனக்கல் பகுதியை நம் கண்களுக்கு அழகாக விருந்து படைத்திருக்கிறார். ஆல்வினின் இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகம்.

மொத்தத்தில் ‘என்ன சொல்ல போற’ ஆல் த பெஸ்ட்.
நன்றி- மாலைமலர்

0 comments: