Monday, September 28, 2015

மனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ராஜநாராயணன்

உலகத்துல ஒவ்வொரு மனுசங் களுக்குப் பெயர் இருப்பது போல, கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்கும் பெயர்கள் உண்டு. எதுக்கு சாகுபடி செய்ற நிலத் துக்கெல்லாம் பேரு வெச்சிருக்காங்க? அன்றைய வேலை முடிஞ்சு சாயந் தரமா வீடு திரும்புறப்ப, ‘‘ஏம்பா, நாளைக்கு எந்தப் புஞ்சையில வேலைன்னு கேட்குறப்ப சரியா பதில் சொல்லணுமே... அதுக்குத்தான்!
‘‘இந்தத் திசையில் உள்ள, இந்தப் பெயருடைய புஞ்சையில் வேலை’’ என்பார்கள்.
அந்தக் காலத்தில் மனுசப் பெயர் களில் ஜாதி ஒட்டியிருக்கும். ஆனால், புஞ்சைகளில் ஜாதிப் பெயர் மட்டுமே ஒட்டியிருக்கும்.
‘கிட்ணஞ்செட்டியார் வீட்டு புஞ்சை’ என்பதை ‘செட்டியார் வீட்டு புஞ்சையில் வேலை’ என்பார்கள். காரணப் பெயர் களும் உண்டு. நடுவோடைப் புஞ்சை (புஞ்சையின் நடுவில் ஒரு ஓடை), மதுரை வழிப் புஞ்சை, எருவடிப் புஞ்சை, குட்டைவெளிப் புஞ்சை, பாறையடிப் புஞ்சை, வன்னிமரப் புஞ்சை, ஊருணிப் புஞ்சை, போனாம்போக்கிப் புஞ்சை. இதில் ‘போனாம் போக்கி’ என்பதற்கு சொன்ன காரணத்தை ஒருவரிடம் சொன்னபோது கண்கள் பனித்துவிட்டன அவருக்கு.
மனுசன் வாழ்க்கையில் மண் அப்படி ஓர் ஒட்டுதல்கொண்டது. ‘ஏர் பிடித்து உழும்போது மண்ணில் இருந்து ஒரு பெண் குழந்தை கிடைத்தது ஜனகமகராஜனுக்கு’ என்ற வரிகளைப் படிக்கும்போது மனங்கொள்ளாத மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் எற்படு கிறதே நமக்கு.
நலங்கள் பெருகப் பெருக குடும்பம் அகன்றுகொண்டே வரும் ஆலமரம் போல. அவர்களோடு யாரும் சண்டைக் குப் போக முடியாது. பிலுபிலு என்று வந்துவிடுவார்கள்.
வீடுகள் போல மாடுகள் இருக்கவும் தனித் தொழுவங்கள் இருக்கும் அவர் களிடம். தீமைகள் போல கொசுக் களும் விருத்தி அடையாத புண்ணிய காலம் அது.
தூர ஊர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு விருந்தாட வருவார்கள் சொந்தபந்தங்கள். பொழுது போகவில்லை என்றால் வீட்டைச் சுற்றி நிற்கிற ஆடுகளை எடுத்து கொஞ்சி குலாவுவார்கள். வீட்டில் படுக்க இடமில்லை என்றால் தொழுவங் களில் போய் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்வார்கள்.
அப்படி வந்த விருந்தாடிகளில் சிறுவர்களைத் தவிர மற்ற ஆண்கள், பெண்கள் அனைவரும் இவர்களுடன் காட்டு வேலைகளுக்கும்கூடப் போவார் கள். சமையல் கட்டுகளிலும் வேலை செய்வார்கள்.
ஆண்களின் பேச்சுகள் பெரும்பாலும் மாடுகள், மாட்டுச் சந்தைகள் பற்றித் தான் இருக்கும். சிறுவர்களும் அந்தப் பேச்சை ரசித்துக் கேட்பார்கள்.
மாடுகள், பொதி மாடுகள் இவை போக வில்வண்டி, ரேக்ளா வண்டிக்கு என்றே தெரிந்தெடுத்த மாடுகளை செல்லமாக வளர்ப்பார்கள். பெருமை பீத்திக்கொள்ளும் பேச்சுகளே அதிகம் இருக்கும். ‘சரிதாண்டா நிறுத்துங்கடா பெருமைப் பீத்தக்குழல்களா…’ என்று அதட்டுவார்கள் வயசான தாத்தாக்கள்.
பகுத்து (பெருமை) பேசாத சம்சாரிகள் தான் யார்? ‘கோப்பய்ய நாயக்கனுக்கு என்ன பகுத்து; கோழி பகுத்து; குஞ்சு பகுத்து’’ என்கிற சொலவடையுடன் அன்றைய பேச்சு முடியும்.
பகல் பொழுதுகளில் எல்லோரும் காட்டு வேலைகளுக்குப் போய்விட்டால் வீட்டில் இருப்பவர்கள் தவங்கிப் போன வயோதிகர்களும் குழந்தைகளும்தான். இதுதவிர ஒருசில வீடுகளில் ஊன முற்ற நபர் ஒருவர் இருப்பார். அதாவது நடக்க முடியாமல் கால் முடங்கியவர்கள் அல்லது வாய் பேசத் திறன் இல்லாதவர்கள். இவர்களிடம் இருந்துதான் ’கதைகள் காரணங்கள்’ பிறக்கின்றன. கற்பனைகளும் கனவு களும் வருகின்றன பறந்து. மனஸ்தாபங் கள், அழுகைகள், கண்ணீர் எல்லா மும் உண்டு. சொல்கதைகளின் குவியல்கள் இவர்களிடம் இருந்துதான் புறப்படுகின்றன.
வீட்டினுள் இருக்கிற பால் மாடுகள், கன்றுகள், கோழிகள், நாய்கள், பூனைகள் போன்ற உயிர் ராசிகளையெல்லாம் இவர்கள்தான் கவனித்துக் கொள்வார் கள். வாய் பேச இயலாதவர் ஆண் என் றால்கூட அவருக்குக் கல்யாணம் நடந்துவிடும். வாய் பேச இயலாத பெண்களின் நிலைதான் பரிதாபகர மானது ஆகும். இவர்களுக்கு அவ்வளவு எளிதாக திருமண நடந்தேறாது. ஒருவேளை அந்த வாய் பேச இயலாத பெண்ணுக்கு சொத்துபத்து, நிலம்நீச்சு என்று எதாவது இருந்தால் கட்டாயம் கல்யாணம் நடந்தேறிவிடும்.
ரெண்டாந்தாரம், மூன்றாந்தாரம் என்பதெல்லாம் அப்போது ரொம்ப சகஜம். வீட்டு வேலைகள், தண்ணீர் சுமக்க, களை செதுக்க என்று எத் தனையோ பேர் இருந்தாலும் காணாது. வீடு பூராவும் பிலுபிலுவென்று பிள்ளை கள். வீட்டுக்குள் தலையை நுழைத்ததும் குழந்தைகளின் மூத்திர வாடையும் பிரசவ வாடையும் இருந்துகொண்டே இருக்கும்.
முட்டுவீட்டுப் பிள்ளைகள் இறந்து போனால் இடுகாட்டுக்குக் கொண்டு போவது இல்லை. வீட்டுக்குப் புறத்தாலேயே புதைத்துவிடுவார்கள்.
வயசாளிகள் கூடிப் பேசுகிற, சந்திக்கிற இடங்கள் என்றே சில இடங்கள் இருந்தன. குளுமையான வீட்டடி நிழல்கள், கம்மாய்க்கரை அரசமரத்தடிகள், கிராம தேவதையின் முன்புறக் கூரையடிகள். இதில் மட்டும் ஒரு சவுகரியம் ‘வெயிலு வந்திரிச்சு’ என்று எழுந்திரிச்சு போக வேண்டியது இல்லை.
மத்தியில் ஒரு கோழித் தூக்கம்கூட போடலாம். சலிப்புத் தட்டும்போது ஒரு ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளை யாட்டுக்கூடத் தொடங்கலாம். பாக்கு அளவு இருக்கிற பதினைஞ்சி சின்னச் சின்னக் கல்லுகளும், அதே அளவு இருக்கிற மூணு ஓட்டுச் சில்லுகளும் இருந்தால்போதும். கோடு கிழிக்க ஏதோ ஒரு பச்சிலையோ, கரித்துண்டோ கிடைத்தால் முடிந்தது. மனசில் ஆட்டை ஒழுங்கு இருக்கணும். திருட்டுத்தனம் மட்டும் இருக்கவே கூடாது.
‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு தென் தமிழக கிராமங்களில் புகழ்பெற்ற சிறுவிளையாட்டு. பசி, தாகம் மறந்து ஆடிக்கொண்டே இருக் கலாம். ரெண்டு பேர் மட்டும் போதும் விளையாட. பார்க்கறதுக்கு நாலு பேர் கூடிவிடுவார்கள்.
சில வீடுகளில், கோயில்களில், குளக் கரையில் என அகலமான படிக்கட்டு களில் இந்த ‘பதினைஞ்சாம் பிள்ளை விளையாட்டு’ என்கிற ‘ஆடுபுலி ஆட்டம்’ ஆடுவதற்கென்றே கல் தச்சனைக் கொண்டு வரைந்த கோடுகளை அங்கங்கே பார்க்கலாம்.
வீட்டுக்கு வீடு போய் அல்லது தெருவிட்டுத் தெரு சென்று பொறணி பேசவோ, சட்டமாக உட்கார்ந்துகொண்டு ஊர்க் கதைப் பேசுகிறவர்கள் பெண் களிலும் இருந்தார்கள்; ஆண்களிலும் இருந்தார்கள் அப்போது.
இதுவொரு பேச்சு சுவாரஸ்யம். இப்படிப் பேசுவதில் சிலர் ‘சொகம்’ கண்டுவிடுவார்கள். இந்தப் பேச்சு ‘சொகம்’ கூட ஒருவிதமான ஆட்டம் போல, விளையாட்டைப் போலத்தான். பேசிச் ‘சொகம்’ கண்ட நாக்கும், ஆடி ‘சொகம்’ கண்ட காலும் ஒரே இடத்தில் நிற்காது என்பார்கள், அது நெசந்தான்.
- இன்னும் வருவார்கள்…


நன்றி-தஹிந்து

0 comments: