இரும்பு யுகம் வந்தது’ என்று போகிறபோக்கில் சாதாரண மாக சொல்லிவிடுவது சரியாக இருக்குமா என்று எனக்குத் தெரிய வில்லை. அவ்வளவு சங்கதிகள் இரும் பின் அறிமுகத்துக்குப் பின்னால நிரம்பிக் கிடக்கு.
நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் ஒரு கவிதையின் தொடக்க வரியை எங்களிடம் ரசிகமணி அவர்கள் சொல்லிக் காட்டினார்.
‘கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் ஒன்று வருகுது’
என்பதை
‘கத்தியின்றி ரத்தமின்றி
வருகுது ஒரு யுத்தம்’
என்று இப்படிச் சொல்லிப் பாருங்கள் என்று அதைச் சொல்லிக் காட்டினார். இந்தச் சொல்லா டல் எழுச்சி மிகுந்ததாகத் தெரிந்தது.
‘ஜிந்தாபாத’ என்கிற இந்தி மொழி சொல்லுக்கு ‘வாழ்க’ என்றே அர்த்தம். அந்தக் காலத்தில் ‘இன்குலாப் ஜிந்தா பாத்’ என்பதற்கு இங்கே ‘புரட்சி வாழ்க; என்றே ஊர்வலத்தின்போது ஓசை எழுப் பியபடி சென்றார்கள். தோழர் ப.ஜீவானந் தம் வந்து ‘புரட்சி ஓங்குக’ என்று அதை சரியாகத் திருத்தி அமைத்தார்.
‘இரும்பு யுகம் வந்தது’ என்று மட்டும் சொன்னால் காணாது. ‘வந்தது இரும்பு யுகம்’ எனச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு அதிஅரக்கன் இந்த ‘இரும்பு’.
‘ஒரு சிற்றுளி போதும் மலையவே தகர்க்க’ என்கிறது ஒரு முதுமொழி.
அந்தக் காலத்தில் இரும்புக்கு முன் னால் எங்கும், எதிலும் ‘மர(ம்)யுகமே’ இருந்தது. சண்டையில் ஒரு வெறும் கம்பு மட்டுமே எல்லார் கையிலும் இருந் தது. அதன் பின்னர் அதே சண்டைக் களத்தில் அந்தக் கம்பின் நுனியில் ஒரு இரும்புத் துண்டு வந்து உட்கார்ந்தது. அது அப்படியே வேல் ஆகிவிட்டது. வேலைக் கண்டதும் கம்புக்காரர்கள் எல்லாம் துண்டைக் காணோம்… துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தார்கள். வேலனே வெற்றிக்கொண்டான்!
ஆரம்ப காலத்தில் இரும்பு கொழு இல்லாத வெறும் மரக் கலப்பையை வைத்துத்தான் வயக்காட்டை உழுதார் கள். லாடம் கட்டாத மாட்டின் கால்களை யும், இரும்புப் பட்டை போடாத வண்டிச் சக்கரங்களையும் நினைத்துப் பாருங்கள்.
நாம் அன்றாடம் ‘நா சுவைச்சு’ சாப் பிடும் உணவு வகையறாக்களுக்கு சுதி சேர்ப்பது தினுசு தினுசான காய்கறிங்க தான். அந்தக் காய்கறிகளை நறுவிசாக நறுக்கப் பயன்படுவது அருவாமனை. சாப்பாடு தயாரிக்க இந்த இரும்புச் சாமான் எவ்வளவு முக்கியம்! காய்கறிங்க மட்டுமில்ல புளி அரிய, ஊறுகாய் போட நாரத்தங்காய், எலுமிச்சங்காய் களை அரிய, சமயங்களில் தென்னையின் கீற்று ஓலைகளை ஒவ்வொண்ணா சீவி துடைப்பம் தயாரிக்கவென்று அருவா மனையின் உபயோகங்கள்தான் எத்தனை!
அது மட்டுமா இரும்பில்தான் எத்தனை வகைகள்!
‘‘தேன் இரும்பில் ஒரு அரைக் கிலோ வாங்கி வா’’ என்று யாரோ, யாரிடமோ சொன்னதை நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது ரொம்பவும் அதிசயப்பட்டுப் போனேன்!
துருப்பிடிக்காத இரும்பெல்லாம் எப்பவோ வந்துவிட்டது. வெள்ளைக் காரன் வந்து போட்ட தண்டவாளம்கூட இரும்புதான்; பால் பேரிங் செய்வதற் கென்றே தனிரகமான இரும்பை பயன்படுத்தினார்களாம். இரும்பு என்று சாதாரணமாக நாம் சொல்லிவிடுவதற்குப் பின்னால் அதில் எத்தனை வகைகள், தன்மைகள் இருக்கின்றன!
ருஷ்ய புரட்சி முடிந்து அந்த நாடு போல்ஷ்விக்குகள் கைக்குள் வந்துவிட்டது. உடனே ருஷ்ய நாட்டை உலகில் அனைத்து நாடுகளும் சேர்ந்து தள்ளி வைத்துவிட்டன. அப்போது ஒரு பால்பேரிங் செய்வதற்குள் அந்த நாடு பட்டபாட்டில் நாக்குத் தள்ளிப் போச்சாம். நம்ப முடிகிறதா? ஆனாலும் அதுதான் உண்மை.
எதுக்குமே பயப்படாத பேய்கள் இரும்பைக் கண்டால் போதும், பயந்து ஓடிவிடுமாம். ஆனாலும் நம்மிடம் இரும்பு மனிதர் என்றெல்லாம் உண்டு. மக்களை அடக்கி ஒடுக்க இரும்புக் கரங்கள்கூட இருக்கின்றன.
நாளடைவில் சரியாக இந்த ஊரின் இரும்பு மனிதராக வளர்ந்துவிட்டார் தூங்கா நாயக்கர்.
அவரை நிமிர்ந்து பார்த்து நடக்க வைத்தது அந்த ஊர் மக்களின் திடீர் பணிவுதான். தலைவாசல் படிக்கட்டு களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக் கும் பெண்கள், அவர் தெரு வழி நடந்து வந்தாலே எழுந்து நிற்க ஆரம்பித்தார்கள்.
ஒரு மொழியில் உயர்த்திப் பேச சொற்கள் இருப்பது போலவே; அதை அப்படியே திருப்பிப் போட்டு பழித்துப் பேசவும் சொற்கள் உண்டு. ‘‘அவன் நடந்து போனா பேளுற பொம்பளக்கூட எழுந்திரிச்சு நிக்க மாட்டா’’ என்கிற சொல வடை கிராமங்கள்ல உண்டு. மரியா தைக்கு எப்படியெல்லாம் அளவுகோல் வைத்திருந்திருக்கிறார்கள் நமது மக்கள்.
ஒவ்வொரு குடும்பத்தின் திடீர் உயர்வுக்கும் பல கதைகள் உண்டு.
பன்றிகளை வாங்கி வளர்த்தே பணக்காரர்களாகிவிட்டதாக எங்களூர் பக்கத்தில் ஒரு கதை உண்டு. அதாவது - ஒரு பன்றி பத்து குட்டிகள் போடும். வருசத்துக்கு ரெண்டு ஈத்து. அஞ்சு வருசத்தில் எத்தினினு கணக்குப் போட்டுப் பாருங்கள் என்பார்கள்.
தேனீக்களுக்கு, பன்றிகளுக்கு எல் லாம் நாம் இரைப் போட்டு வளர்க்கிறது இல்லை. ஆனால், புறாக்களுடைய விசயங்களே வேற. செய்திகள் கொண்டு போய்ச் சேர்க்கிறது மட்டுமல்ல; வைரங் களையும் கூட நாடுவிட்டு நாடு கடத்துமாம் புறாக்கள். ராஜாக்கள் காலத்தில் இப்படிப் புறாக்களைப் பழக்கப்படுத்தி வைத்திருந்திருந்தார்களாம்.
பர்மாவில் இருந்து கப்பல் கப்பலாக அரிசி இங்கே இறக்குமதி ஆகிக் கொண்டிருந்த காலத்தில், ஒருவன் புறாக்கள் வளர்த்தான். அப்போது, கடுமையான உணவுப் பஞ்சம். அரிசு கிடைப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
அதிகாலையில் விடிஞ்சதும் அவன் தன் வீட்டில் இருந்த புறாக் கூண்டுகளை அகலமா திறந்து விடுவான். அவை எல்லாம் நேராக துறைமுகத்துக்குப் பறந்து செல்லும். அங்கே பர்மாவிலேர்ந்து வந்த அரிசி மூட்டைகளெல்லாம் ஒண்ணு மேல ஒண்ணா அட்டியல் போட்டு வைக்கப்பட்டிருக்குமாம். அப்படி அட்டியல் போட்டு வைத்திருக்கிற அரிசி மூட்டைகளின் சுற்றுப்புறங்களில் சிந்திச் சிதறிய அரிசிகளை எல்லாம் புறாக்கள் பொறுக்கி இரைப் பையை நிரப்பிக்கொண்டு, தண்ணீர் குடிக்க இவனுடைய வீட்டுக்கு வருமாம்.
இவன் மரப்பத்தாயங்களில் அந்தப் புறாக்களெல்லாம் குடிக்கத் தயாராக ஒருவித பச்சிலைக் கலந்த தண்ணீரை நிறைத்து வைத்திருப்பானாம். அந்தத் தண்ணீரைக் குடிச்சவுடன் எல்லாப் புறாக்களும் வாந்தி எடுக்கும். அப்புறமென்ன அந்த அரிசி பூராவும் அவனுக்கே. எடுத்து அலசி காய வைத்துக்கொள்வான். மறுதடவை கொண்டுவரும் அரிசிகள் அனைத்தும் புறாக்களுக்கு. அந்தத் தடவை மட்டும் பச்சிலை கலக்காத தண்ணீரை வைப்பான். அந்தப் புறாக்களெல்லாம் தங்களை வளர்ப்பான் குடும்பத்துக்கும் சோறு போட்டு, தாங்களும் உண்டன.
கையில் காசு சேர்ந்ததும் மனிதர்கள் முதலில் செய்வது வீடு கட்டுவதுதான். சம்சாரிகள் மட்டும் நிலங்களை வாங்குவார்கள்.
பெருநிலக்காரர்களிடம் உள்ள நிலங்கள் அவர்களோட சொந்த நிலங்கள் என்பது கொஞ்சமே. மடி யில் வந்து விழுந்த நிலங்கள்தான் அதிகம். கொடுத்த கடன்களுக்கு நிலங்களாகத்தான் திரும்பக் கிடைக்கும்.
அடமானம் வைத்த நகைகளையும், நிலங்களையும் திரும்பப் பெற முடியும் என்கிற பெரிய நம்பிக்கையிலதான் அமயம்சமயத்துக்கு அவற்றை அடமானம் வெச்சு கடன் வாங்குகிறார் கள். ஆனாலும் வட்டி அவர்களை மூழ் கடிச்சுடும். ‘கடன் கொடுத்தவன் தூங்கினாலும் வட்டி தூங்காது’ என்பது முதுமொழியாகும்.
- இன்னும் வருவாங்க…
a
நன்றி- த இந்து
0 comments:
Post a Comment