Tuesday, August 25, 2015

BROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)

இயக்குநர் கரண் மல்ஹோத்ரா ‘அக்னிபத்’துக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘பிரதர்ஸ்’. ஹாலிவுட்டில் 2011-ல் டாம் ஹார்டி, ஜோயல் எட்கர்டன் நடிப்பில் வெளிவந்த ‘வாரியர்’ படத்தை அதிகாரபூர்வமாக ரீமேக் செய்திருக்கிறார் கரண் மல்ஹோத்ரா.
தெருச் சண்டை வீரர்களைப் பின்னணியாக வைத்து அண்ணன் - தம்பி இருவருக்கும் நடக்கும் போட்டியே ‘பிரதர்ஸ்’. கேரி ஃபெர்னாண்டஸ் (ஜாக்கி ஷ்ராஃப்) ஒரு தெருச்சண்டை வீரர், குடிப் பழக்கம் உள்ளவர். இவருக்கு 2 மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு மகன் - டேவிட் (அக் ஷய் குமார்), மான்டி (சித்தார்த் மல்ஹோத்ரா). டேவிட்டின் தாய் மேரியை (ஷெஃபாலி ஷா) போதையில் எதிர்பாராத விதமாகக் கொன்றுவிடுகிறார் கேரி. இதனால் குடும்பம் உடைகிறது. டேவிட், மான்டியும் பிரிகின்றனர். சிறு வயதில் தந்தையிடம் கற்ற ஃப்ரீ ஸ்டைல் தெருச் சண்டையை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் டேவிட். அவரது மனைவி ஜென்னி (ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்).
ஒரு கட்டத்தில், குழந்தையின் மருத்துவச் செலவுக்காக மீண்டும் தெருச் சண்டைப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் டேவிட்டுக்கு ஏற்படுகிறது. அதே போட்டியில் மான்டியும் கலந்துகொள்ள, அண்ணன் - தம்பி இருவரும் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். யாருக்கு வெற்றி என்பதுதான் ‘பிரதர்ஸ்’.
முக்கியக் கதாபாத்திரங்களின் கண்ணீர், சோகம், பிளாஷ்பேக் என படத்தின் முதல் பாதி அழுது வடிகிறது. ஆனால், அது சோகத்தை வரவழைப்பதற்கு மாறாகத் திரையில் வேடிக்கையாக அமைந்துவிடுகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளால் ‘மெலோடிராமா’ பாணியை அமைக்க விரும்பி, முதல் பாதியைப் பார்க்கவிடாமல் செய்திருக்கிறார் இயக்குநர் கரண் மல்ஹோத்ரா. இரண்டாம் பாதியை ‘மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தெருச் சண்டையை அமைத்த விதமும், அக் ஷய் குமாரின் நடிப்பும், கேமராவும் ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறது. சொல்லப்போனால், இடைவேளைக்கு பிறகுதான் படமே தொடங்குகிறது.
ஜாக்கி ஷராஃப், சித்தார்த், ஷெஃபாலி, ஜாக்குலின் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தாலும், காட்சிகளின் பலவீனமான கட்டமைப்பால் மனதில் நிற்கவில்லை. காட்சியால் புரியவைத்த பிறகும் வசனங்கள் மூலம் காட்சிகளுக்கு உரை எழுதுகிறது திரைக்கதை. ‘மகாபாரதம் ரீலோடட்’, ‘எதிரியைச் சோர்வடைய வைத்து தோற்கடிக்கிறான்’ என்பது போன்ற வசனங்கள் அத்தகையவை. சொல்லிவைத்தாற்போல ஒரே ஸ்டைலில் அக் ஷய் குமாரும், சித்தார்த் மல்ஹோத்ராவும் சர்வதேச வீரர்களைத் தோற்கடிக்கிறார்கள். இந்த அம்சங்கள் பார்வையாளர்களை மேலும் சோர்வடைய வைக்கின்றன.
திரைக்கதைக்கு சற்றும் பொருத்தமில்லாத இடத்தில் கரீனாவின் ‘மேரா நாம் மேரி’ என்ற ‘ஐட்டம் சாங்’ வருகிறது. ‘அக்னிபத்’தின் ‘சிக்கினி சமேளி’ பாடல் ஹிட்டானதுபோல இந்த பாட்டும் ஹிட்டாகும் என இயக்குநர் கரண் மல்ஹோத்ரா நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ‘ஐட்டம் சாங் சென்டிமென்ட்’ சுத்தமாக வேலைசெய்யவில்லை.
அக்ஷய் குமாரின் தீவிர ரசிகர்கள், பொறுமைசாலிகளால் ‘பிரதர்ஸ்’ படத்தை பார்க்க முடியும். மற்றவர்கள் ஹாலிவுட் அசலையே (வாரியர்) பார்ப்பது நல்லது.


நன்றி - த இந்து

0 comments: