Thursday, August 20, 2015

நயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணிட்டாரா?-சிம்பு ஓப்பன் டாக்

சிம்பு, படம்: எல்.சீனிவாசன்
சிம்பு, படம்: எல்.சீனிவாசன்
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'வாலு' படம் வெற்றி பெற்றதாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் சிம்பு, இயக்குநர் விஜய் சந்தர், இசையமைப்பாளர் தமன் மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார்.
இனிமேல் இந்த மாதிரி படங்கள் பண்ண வேண்டும், இவரை மாதிரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?
உண்மையை சொன்னால் எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி ஆக வேண்டும் என்று எதுவுமே கிடையாது. நான் சாவதற்கு முன்பு எப்படியாவது கடவுளிடம் போய் சேர்ந்துவிட வேண்டும், அது தான் எனது கடைசி ஆசை. நாம் எழுதிக் கொண்டிருக்கும் பரீட்சையின் வெற்றி, தோல்வி என்பது கடவுளிடம் போய் சேருகிறோமா இல்லையா என்பது தான். எனக்கு அது தெரிந்துவிட்டது. தற்போதைய என்னுடைய ஆசையும் அது தான்.
இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருந்துவிட்டேன், என்னை நம்பி இவ்வளவு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்றால் எனக்கு கடவுளின் துணை இருக்கிறது. என் ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக படங்கள் பண்ணுவேன். 2015, 2016 ஆண்டுகளில் எல்லாம் 2 முதல் 3 படங்கள் கண்டிப்பாக வரும்.
உங்கள் மீது நிறைய பேர் சொல்லும் குற்றச்சாட்டு, நீங்கள் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது தானே..
அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆம், நான் படப்பிடிப்புக்கு தாமதாகத் தான் போகிறேன். என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது வேலைக்கு சொல்வது போல் கிடையாது. நான் கஷ்டம் பார்க்காத ஒரு பையன். இன்றைக்கு போய் நாம் நடிக்க வேண்டும் என்று தோன்றினால், அங்கு போய் நிற்கும் போது நான் அந்த காட்சிக்கு நியாயமாக இருக்க வேண்டும். எனக்கு நியாயமாக தெரியாவிட்டால் செல்ல மாட்டேன். ஒரு நாள் படப்பிடிப்பு என்னால் நடக்கவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால், எனக்கு நியாயமாக இல்லாத பட்சத்தில் போய் 7 மணிக்கு நின்று நடிக்க மாட்டேன். நான் போய் ஒழுங்காக நடிக்கவில்லை என்றாலும், என் மீது தானே பழி விழும்.
நான் தாமதாக வருகிறேன் என்றால் மற்ற நேரங்களில் சினிமாவில் தானே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். முந்தைய நாள் இரவு பாட்டு பாட போயிருப்பேன், படத்தின் எடிட்டிங்கில் இருந்திருப்பேன் இப்படி எப்போதுமே சினிமாவில் தான் இருக்கிறேன். வேண்டும் என்றே படப்பிடிப்பு தாமதமாக போக வேண்டும் என்பது என் எண்ணம் கிடையாது.
கெளதம் மேனன், செல்வராகவன் இருவருடைய படப்பிடிப்புக்கும் சரியாக சொல்கிறீர்களா?
சிம்பு ஒரு சிங்கிள் டேக் நடிகன் என்று நிறைய பேட்டிகள் சொல்லி இருக்கிறார். அதே போல, இப்போதும் சிம்பு நாளைக்கு காலை இத்தனை மணிக்கு படப்பிடிப்பு, உங்களுக்கு ஒ.கேவா என்று என்னிடம் கேட்டுவிட்டு தான் படப்பிடிப்பு வைப்பார். இல்லை சார்.. மதியம் என்றால் ஒ.கே என்று கூறினேன் என்றால் மதியம் தான் படப்பிடிப்பு. இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே உள்ள புரிதம் தான் அனைத்துக்கும் காரணம்.
செல்வராகவனும் அப்படித் தான். சிம்புவை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லுவார். முதல் கட்ட படப்பிடிப்பு இரவு வைத்து உங்களுக்கு சரியாக இருக்கும் என்று கூறினார். என்னை புரிந்து கொள்ளும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவது எளிதாக இருக்கிறது.
முன்பு போல சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது எல்லாம் ஆசை இல்லையா..
சூப்பர் ஸ்டார் பட்டம் என்று எந்த ஒரு எண்ணமும் இல்லை. கடவுளிடம் விட்டு விட்டேன், எங்கு வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு போகட்டும். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மேலே கூட ஏதாவது கொடுக்கலாம், எனக்கு எப்படி தெரியும். சிவனே என்று சிவனிடம் விட்டு விட்டேன்.
இடைவெளியில் நிறைய நடிகர்கள் வந்து விட்டார்களே.. கவனித்தீர்களா?
நல்ல விஷயம் தானே. என்னால் நாலு பேர் நன்றாக இருக்கிறார் என்கிற போது சந்தோஷமாக இருக்கிறது. நிறைய சம்பாதிக்கிறார்கள் நல்ல விஷயம் தான். ரஜினி சார் இடைவெளி விடவில்லை என்றால் நிறைய நடிகர்கள் வந்திருக்கவே முடியாதே. அதை நான் ஒரு பொறாமையாகவோ, போட்டியாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. நான் சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறேன்.
மீண்டும் காதல் விழும் திட்டம் இருக்கிறதா..
இத்தனை நாள் நான் காதலைத் தேடிப் போனேன். அதனால் எனக்கு சரிபடவில்லை. இப்போது என்னை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன், அவர் கொடுப்பது எப்படி எனக்கு சரிவராமல் போகும். வரும் போது பார்ப்போம். புதிய காதல் கடவுள் கொடுத்தால் கண்டிப்பாக வரும். அவர் உனக்கு வேண்டாம்பா சரியா வராது, தனியாகவே இரு என்று சொன்னால் தனியாகவே இருப்பேன். அதில் தயக்கம் இல்லை.
காதலில் விழுந்து அவ்வளவு அடி வாங்கியதால் தான் கடவுள் யார் என்று தெரிந்து கொண்டேன். காதல் தான் எல்லாவற்றுக்கும் காரணம். மற்றவர்கள் காதலிப்பது நல்ல விஷயம் தான். யாரை காதலிப்பது என்பது அவர்களின் முடிவில் இருக்கிறது.
ஹன்சிகா, நயன்தாரா இருவருடனும் மீண்டும் நடிக்கிறீர்களே. அந்த ரகசியம் என்ன?
எந்த ஒரு தப்பான விஷயங்களாலோ, சண்டையாலோ நான் பிரியவில்லை. அன்றைக்கு இருந்த சூழ்நிலை நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று இருந்தது, பிரிந்துவிட்டோம். அதனால் கோபப்பட்டு பிரியும் அளவுக்கு நான் எந்த ஒரு தப்பும் பண்ணவில்லை. அதனால் தான் என்னை மதித்து இப்போதும் பேசுகிறார்கள். உண்மையில் பெண்களுக்கு என்னை பிடிக்கும், அதனால் பேசுகிறார்கள்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே உங்கள் நண்பர்கள். இருவரும் காதலிக்கிறார்களாமே தெரியுமா..
அப்படினு உங்ககிட்ட சொன்னாங்களா. ஒரு இயக்குநர் நாயகியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அவ்வளவு தான். கல்யாணம் நடக்கும் போது கேளுங்கள். பிரபுதேவா உடன் திருமணமாமே போவீங்களா என்றீர்கள், நடக்கும் போது கேளுங்கள் என்றேன். நடந்துதா?
இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் எனக்கு என்ன பிரச்சினை. இரண்டு பேருமே எனக்கு நண்பர்கள் தானே சந்தோஷமாக இருந்துவிட்டு போகிறார்கள். அப்படி திருமணம் நடந்தால் நானே நடந்தி வைப்பேன்.

நன்றி- த இந்து

0 comments: