இளைய சமுதாயத்தினர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அனைத்துத் துறைகளுக்கும் தலைமையேற்று அவர்கள் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் அமரர் கலாமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
கோபப்பட்ட கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில், அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரிடம் நேர்காணல் நடத்த அனுமதி கோரினேன். ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்படுவது எதனால்?’ என்ற கருத்தை மையமாக வைத்துத் தயாரிக்கப்படவிருந்த உரைச் சித்திரத்துக்காக அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
நான் இந்த விஷயத்தைக் கூறியதும் சட்டென்று அவர் முகத்தில் லேசான கோபம் பிரதிபலித்தது. அவர் இயல்புக்கு மாறான சற்றுக் கடுமையான குரலில் ‘‘இளைஞர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா சார்?’ என்று கேட்டார். ‘‘எனக்கு வரும் இ-மெயில்களைப் பாருங்கள். “நாட்டு முன்னேற்றத்துக்காக எந்த வழிமுறைகளில் நாங்கள் செயல்பட வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அதற்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று மாணவர்களும் இளைஞர்களும் அந்த இ-மெயில்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கின்றனர்’’ என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அரசியலிலும்...
மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது அவர்களின் எதிர்கால லட்சியம், இலக்கு குறித்துக் கேள்வி கேட்பார். ஆனால், யாருமே அரசியலில் இறங்கப்போவதாகவோ அமைச்சர்களாக மாறப்போவதாகவோ சொல்லாததால், ‘‘ஏன் நீங்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை?’’ என மாணவர்களை அவர் கேட்பது வாடிக்கை. அரசியலைத் தூய்மைப்படுத்த இன்றைய இளைஞர்கள் அரசியலிலும் நேர்மையுடன் செயல்பட்டு நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிடுவதுண்டு.
பொதுவாகப் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பயிலும் பெரும்பாலான மாணவர்கள், பெரிய படிப்புகள் படிக்க வேண்டும், படித்த கல்வித் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேட வேண்டும் என்பதில்தான் விருப்பம் கொண்டிருப்பார்கள். கல்வியால் தனக்குக் கிடைத்த பலன்களைப் பயன்படுத்தி, தங்களைச் சார்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க முடியும் என ஆழமாக யோசிப்பதில்லை.
சின்னது குற்றமே
மாணவர்களின் இத்தகைய மனப்போக்கை தனது கருத்தில் கொண்டுதான் மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது சின்னதாகக் குறிக்கோள் வைத்துக்கொள்வது ஒரு குற்றம் (small aim is a crime) என வலியுறுத்தினார்.
மிகப் பெரிய இலக்குகளை மாணவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என எப்போதுமே எடுத்துரைத்து வந்தார். மாணவர்களின் அளவுகடந்த ஆற்றலைத் தேசத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவரே ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டார்.
ஏவுகணைப் பணிகளில் மாணவர்கள்
நாம் முதல் முறையாக ஏவுகணைகளை 100 சதவீதம் நமது நாட்டுத் தயாரிப்புகளாக உருவாக்க முனைப்புடன் பாடுபட்டபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியமான பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களை ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்க வைத்தார். அக்னி ஏவுகணையை தயாரிக்கும் பணிகளில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
அனைத்து விண்வெளித் திட்டங்களிலும் தனது வெற்றிகளுக்குப் பக்கபலமாக இருந்தது துடிதுடிப்பாற்றலும் ஆர்வப் பெருக்கும் கொண்ட இளம் அணியினர்தான் என்பதைத் தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகளில் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.
நானும் ஒருநாள்...
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய குணாம்சங்களை ஒவ்வொரு இளைஞரும் தனக்குள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய கலாம், தனது வாழ்க்கையில் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
‘சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும், நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற நம்பிக்கையைத் தனக்குள் வேர்விட வைத்ததால்தான் தனது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடிந்தது என்றும், சாதனை நாயகன் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
சுய கட்டுப்பாட்டு நெறிகள்
சாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு அர்த்தம் பொதிந்த ஆலோசனையைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் :
“மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச் சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாக முயற்சி செய்தேன்.
ஒவ்வொரு மாணவருக்குமே வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நிஜமாக்கிக் காட்டுவதில்தான் ஒவ்வொருவருமே வேறுபடுகிறோம். சுய கட்டுப்பாட்டு நெறிகளைப் பின்பற்றிச் செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்க முடியும்.”
தீர்க்கதரிசியின் நம்பிக்கை
நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் உலக அரங்கில் நமக்கு இன்னமும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பையும் இளைய தலைமுறையினரிடம்தான் அப்துல் கலாம் ஒப்படைத்துள்ளார்.
நமது தேசம் வலுவான, வளமையான, வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக உயர்வடையும் என்பதில் திட்டவட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தனது சுயசரிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கதரிசிகளின் நம்பிக்கை என்றுமே பொய்ப்பதில்லை.
“மற்றவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒருசில ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக் கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம் உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்’ என்பதுதான் அவரது சுயசரிதையின் இறுதி வரிகள்.
அவரது நம்பிக்கை கட்டாயம் நிறைவேறவே செய்யும்.
- கட்டுரையாளர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நூல்களை தமிழாக்கம் செய்தவர்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment