Sunday, August 23, 2015

சார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு -பட்டுக்கோட்டை பிரபாகர்

சார்லி சாப்ளின் என்கிற பெயரை உச்சரிக்கும்போதே அவரின் வித்தியாசமான உருவம் மனதில் வந்து உதடுகளில் ஒரு புன்னகை பரவும்.
சாப்ளின் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை குடிகாரர். தாய் மன நோயாளி. 7 வயதில் வேலைக்குப் போகவேண்டிய சூழ்நிலை. ஓரளவுதான் படித்தார். 14 வயதில் மேடை நடிகரானார்.
லண்டனில் பிறந்து ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இவர் உடல் மொழி மற்றும் பாவனைகளால் சிரிக்க வைக்கும் ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் மேதை. கதை, திரைக்கதை, வசனம், இசை, எடிட்டிங், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று அத்தனைத் துறைகளிலும் இயங்கியவர். உலகிலேயே உச்சமான சம்பளத்தைப் பெற்றவர். 1915-ம் வருடம் அதாவது 100 வருடங்களுக்குமுன் மியூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன் அவருக்குக் கொடுத்த வருட சம்பளம் 6 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள்.
தி கிட், கோல்டு ரஷ், சர்க்கஸ், சிட்டி லைட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் போன்ற அவரின் பல படங்கள் காலம் கடந்தும் ரசிக்க வைப்பவை. கோடிக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்த அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மிகவும் குறைவு. அவர் சந்தித்த வழக்குகளும் அதிகம்.
சாப்ளின் நான்கு முறை திரு மணம் செய்தவர். முதல் மூன்று திருமணங்களிலும் மன வேதனைதான் மிஞ்சியது. மூவருமே நடிகைகள். 17 வயதான மில்ட்ரெட் ஹாரிசை முதல் மனைவியாக்கிக் கொண்டபோது சாப்ளி னுக்கு வயது 29. இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து. இவர்களுக்குப் பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்தது மற்றொரு சோகம்.
16 வயது லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. திருமணத்துக்கு முன்பே லிடா கிரே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துவிட்டார். சட்டப்படி சாப்ளினைக் கைது செய்து கற்பழிப்பு வழக்கு போட சாத்தியம் இருந்ததால், அவசரமாக வெகு சில நண்பர்களை அழைத்து லிடா கிரேயை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தன.
ஆனால் லிடா கிரேக்கும் சாப்ளி னுக்கும் ஒத்துப் போகவில்லை. சாப்ளின் மன உளைச்சலுக்கு ஆளானார். தன் குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே விவாகரத்து வழக்கு தொடுத்ததோடு சாப்ளினைப் பற்றி தரக்குறைவாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத் தார். சிலஅமைப்புகள் சாப்ளினுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அவர் நடித்த திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
லிடா கிரேக்கு 6 லட்சம் டாலர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு சாப்ளின் ஆளானார். அப்போது அமெரிக் காவில் விவாகரத்து வழக்கில் மனை விக்கு கணவனால் வழங்கப்பட்ட மிகப் பெரிய தொகை இது. மனச் சோர்வால் ஒரு வருடம் சாப்ளின் சினிமா தொடர்பாக எந்த வேலையும் செய்யவில்லை.
1928-ல் ஆங்கிலப் படங்கள் மவு னத்தை உடைத்து பேசும் படங்களாக வரத் தொடங்கின. ஆனால் சாப்ளின் ‘சர்க்கஸ்’ என்கிற மவுனப் படத்தைக் கொடுத்து வெற்றிபெற்றார். அடுத்து ‘சிட்டி லைட்ஸ்’ படத்தையும் மவுனப் படமாகவே கொடுத்தார். தன் பாணியை தொடர்வதா, பேசும் படங்களில் இறங்கு வதா என்கிற பெரிய குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் கிட்டத்தட்ட 2 வருடங்கள் படம் எதுவும் எடுக்காமல் திரைக்கதை மட்டும் எழுதி ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்னும் பேசும்படம் எடுக்கத் தயாரானார்.
அந்த சமயம் இவர் 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகி வந்தார். எங்களுக்குள் ரகசியமாக திருமணம் நடந்தது என்று பிறகு அறிவித்தார். அப்போது சாப்ளி னுக்கு வயது 43.
இவர் நட்புடன் பழகிய இன்னொரு நடிகையான ஜோன் பெர்ரி தான் கர்ப்ப மாகஇருப்பதாகவும், அதற்குக் காரணம் சாப்ளின்தான் என்றும் அறிவித்தார். சாப்ளின் அதை திட்டவட்டமாக மறுத் தார். பெர்ரி வழக்கு தொடுத்தார்.
அதுவரை அரசியல் கலப்பு எதுவும் இல்லாமல் படங்கள் செய்துகொண்டி ருந்த சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் ஹிட்லரைக் கடுமை யாக கிண்டல் செய்திருந்தார். அந்தத் திரைப்படத்தை அப்போதைய ஜனாதி பதி ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து ஜனாதிபதி சர்ச்சிலும் மிகவும் ரசித்தா லும், அமெரிக்க அரசாங்கம் சாப்ளின் மேல் அரசியல் சாயம் பூசியது. அவரை கம்யூனிஸ்ட் என்று விமரிசித்தது. எஃப்.பி.ஐ அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகளைத் தரத் தொடங்கியது.
ஜோன் பெர்ரி வழக்கு தொடுத்த அதே சமயத்தில் எஃப்.பி.ஐயும் அவர் மேல் உப்புசப்பில்லாத நான்கு காரணங் களுக்காக வழக்கு தொடுத்தது. சாப்ளின் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளா மல் அமெரிக்க விரோதப் போக்கிலேயே வழக்குகளைச் சந்தித்தார்.
ஜோன் பெர்ரிக்கு கரோல் என்கிற பெண் குழந்தை பிறந்தது. சாப்ளினின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. (மரபணு பரிசோதனை அப்போது இல்லை) சோதனை முடிவு சாப்ளினுக்கு சாதகமாக இருந்தபோதும், அதை ஏற்காமல் அந்தக் குழந்தைக்கு சாப்ளின்தான் தந்தை என்றும் கரோலுக்கு 21 வயது நிரம்பும் வரை பராமரிப்பு செலவுகளை கொடுத்தாக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது கோர்ட்.
வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 18 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
அமெரிக்க உளவுத் துறையின் தொடர்ந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தால் சாப்ளின் மனம் நொந்து போனார். அவரை நாடு கடத்த வேண்டும் என்று குரல்கள் ஒலித்தன. தன் அடுத்த படத்தின் முதல் காட்சியை வெளியிட லண்டனுக்குப் புறப்பட்டார் சாப்ளின். அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான பர்மிட்டை அரசு ரத்து செய்தது. பர்மிட் வேண்டுமானால் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
சாப்ளின் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்ப மாட்டேன் என்று அறிவித்தார். சுவிட்சர்லாந்தில் தங்கிக்கொண்டார். மனைவியை அமெரிக்காவுக்கு அனுப்பி தன் ஸ்டுடியோ, வீடுகள், பங்குகள் என்று அனைத்து சொத்துக்களையும் விற்றார்.
அடுத்து அமெரிக்காவை விமர்சிக் கும் விதமாக ‘கிங் ஆஃப் நியூயார்க்’ என்கிற படத்தை எடுத்தார் சாப்ளின். அந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிடவில்லை. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு அமெரிக்க பத்திரிகையாளர்கள் வரக் கூடாதென்றும் உத்தரவிட்டார். அதுதான் அவரின் கடைசிப் படம். அது ஒரு மிகப் பெரிய தோல்விப் படமானது.
அதன் பிறகு உடல்நலம் குன்றி சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்திய சூழலிலும், தன் மகளை நடிகையாக்கும் நோக்கத்தில் ஒரு கதையைத் தயார் செய்தார். ஆனால் அந்தப் படம் வரவேயில்லை.
1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளினை 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.
1977-ல் தனது 88-வது வயதில் சாப்ளின் காலமானார். அதன் பிறகும் ஒரு வழக்கு. சாப்ளினின் கல்லறையில் இருந்து அவரின் சவப் பெட்டியைத் திருடிச் சென்று குடும் பத்தினரிடம் பணம் கேட்டு மிரட் டினார்கள். பெரிய போலீஸ் படை இறங்கி குற்றவாளிகளைப் பிடித் தார்கள். சவப்பெட்டி மீண்டும் புதைக் கப்பட்டு கடுமையான பாதுகாப்பு செய்யப்பட்டது.
கடைசியாக ஒரு லேட்டஸ்ட் வழக்கு..சாப்ளின் வாழ்ந்த சுவிட்சர்லாந்து வீடு 2016-ல் மியூசியமாகிறது. அதில் வைக்கப்பட இருந்த சாப்ளின் வாங்கிய ஆஸ்கர் விருதை இந்த ஜனவரியில் திருடிவிட்டார்கள். ஏதாவது தகவல் தெரிந்தால் தெரிவிக்கச் சொல்லி சாப்ளினின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
- வழக்குகள் தொடரும்…

நன்றி -த இந்து

0 comments: