Saturday, August 29, 2015

அதிபர் - சினிமா விமர்சனம்

நடிகர் : ஜீவன்
நடிகை :வித்யா
இயக்குனர் :சூர்யபிரகாஷ்
இசை :விக்ரம்செல்வா
ஓளிப்பதிவு :பிலிப்ஸ் விஜயகுமார்
நன்றி = மாலைமலர்
வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு தொழில் தொடங்க வரும் இளைஞரை, நண்பராக பழகுபவர் ஏமாற்றும் கதை. 

சிறு வயதில் இருந்தே கனடாவில் வாழ்பவர் ஜீவன். தாய்நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக இந்தியா வந்து தொழில் தொடங்குகிறார். கட்டுமான நிறுவனம் நடத்தும் அவரிடம் சட்ட ஆலோசகராக அறிமுகம் ஆகும் ரஞ்சித் நண்பன் போல பழகுகிறார். 

அவரை ஜீவன் முழுமையாக நம்புவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டுமான நிறுவனத்துக்கு ரஞ்சித் நம்பிக்கை துரோகம் செய்கிறார். அவரது மோசடி ஜீவனுக்கு தெரிய வருகிறது. எனவே, கட்டுமான நிறுவனத்தை தன் வசமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார். 

இதனால், ஜீவனுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பொய்யான ஆதாரங்களை கொடுக்க ஏற்பாடு செய்யும் ரஞ்சித், கட்டுமான நிறுவன அதிபர் ஜீவனை ஜெயிலுக்கு அனுப்புகிறார். 

இறுதியில் சி.பி.ஐ. பிடியில் இருந்து ஜீவன் வெளியே வந்தாரா? ரஞ்சித் சதிகளை முறியடித்து அவர் மீண்டது எப்படி? என்பது மீதி கதை. 

வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டுக்கு தொழில் தொடங்க வரும் இளைஞராக ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புது அவதாரம் எடுத்துள்ள அவர், அலட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். ‘அதிபர்’ ஆக மாறி முத்திரையை பதித்து இருக்கிறார். சண்டை காட்சி விறுவிறுப்பு. 

இவருக்கு ஜோடியாக வரும் வித்யா பொருந்தி இருக்கிறார். குடும்பாங்கான உணர்வுகளை வெளிப்படுத்தி கவர்கிறார். ஜீவன் நண்பர்களாக வரும் நந்தா, சமுத்திரகனி அவரவர் பாத்திரங்களை சிறப்பாக செய்து கதை ஓட்டத்துக்கு கை கொடுக்கிறார்கள். 

நல்லவனாக அறிமுகமாகி, நயவஞ்சகம் செய்யும் ரஞ்சித் இரண்டிலும் கைதட்டல் பெறுகிறார். ரிச்சர்ட்டும் வில்லனாக வந்து மிரட்டுகிறார். தம்பி ராமையா, சிங்கமுத்து, டி.சிவக்குமார், மதன்பாப், கோவை சரளா உள்பட அனைவரும் கொடுத்த வேலையை பிசிறு தட்டாமல் செய்திருக்கிறார்கள். 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சூர்யபிரகாஷ். உண்மை கதையை உயிரோட்டமாக தர முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் செயற்கை தனம் அதிகம். சி.பி.ஐ. அதிகாரியை ஜீவன் குடும்பத்தினர் சந்திப்பது... அவர்களை உடனே அவர் நம்புவது.... நம்பும்படியாக இல்லை. என்றாலும் கதை திசை திரும்பாமல் கொண்டு போகிறார். 

பிலிப்ஸ் விஜயகுமாரின் ஒளிப்பதிவும், விக்ரம் செல்வாவின் இசையும் படத்துக்கு கை கொடுத்து இருக்கின்றன. பாடல்கள் கேட்கும் ரகம். வித்தியாசமான கதை ஓட்டத்தால் ரசிகர்களிடம் இந்த அதிபர் இடம் பிடித்திருக்கிறார். கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் அதிபர் செல்வாக்கு மேலும் உயர்ந்து இருக்கும்.

மொத்தத்தில் ‘அதிபர்’ செல்வாக்கு குறைவு

0 comments: