காமெடி ரேஸில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பவர் சூரி. ‘பாயும் புலி’, ரஜினி முருகன்’, ‘இது நம்ம ஆளு’, ‘அரண்மனை 2’ என்று இவர் நடிக்கும் படங்களின் வரிசை நீள்கிறது. படப்பிடிப்புகள், டப்பிங், புரமோஷன் என பரபரப்பாக இருந்த சூரியை சந்தித்து பேசினோம்.
இப்போது என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
விஷாலுடன் ‘பாயும்புலி’, தம்பி சிவகார்த்திகேயனோடு ‘ரஜினி முருகன்’, எங்கள் அண்ணன் பாண்டிராஜ் இயக் கத்தில் ‘இது நம்ம ஆளு’, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் சார் தயாரிப்பில் ‘மாப்ள சிங்கம்’, சுந்தர்.சி. சார் இயக்கத்தில் ‘அரண்மனை-2’ படங்களில் இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்தபடியா விஷால் சாரோட இரண்டு படங்கள், ஹரி சார் இயக்கத்தில் சூர்யா அண்ணன்கூட ‘சிங்கம்-3’, எழில் சார் இயக்கத்தில் ஒரு படம், விஷ்ணுவுடன் ‘வீர தீர சூரன்’, அட்லி-மகேந்திரன் தயாரிப்பில் ஜீவாவுடன் ஒரு படம்னு அடுத்த ரவுண்டும் தரமா இருக்கு. எல்லாத்தையும் விட முக்கியமா எனக்கு இந்த வருசம் தல தீபாவளி! அதனால, சந்தோசம் புடிபடலை...
கல்யாணமாகி நாலஞ்சு வருஷ மாச்சு. இப்பப் போயி தல தீபாவளிங்கிறீங்க?
ஹலோ ஜீ... கொஞ்சம் பொறுங்க. நான் சொல்றது எங்க தல அஜித் சாரோட சேர்ந்து நடித்த படம் வெளியாகிற தீபாவளியை. அஜித் சாரோட சேர்ந்து நடிக்கணும்னு எனக்கு பல வருச ஆசை. எனக்கு மட்டும் இல்ல, தம்பிங்க, குடும்பம்னு எல்லாருக்கும் அது ஒரு கனவு. தீபாவளிக்கு ரிலீஸாகப் போற அஜித் சாரோட படம்தான் எனக்குத் தல தீபாவளி. எங்க கனவை நிறைவேத்திக் கொடுத்த இயக்குநர் சிவா சாருக்குத்தான் நன்றி சொல்லணும்!
அஜித், சூர்யா, விஷால்னு பெரிய நடிகர்களோட நடிக்கிறீங்க. இனி சின்ன பட்ஜெட் படங்களிலோ புது முக இயக்குநர்களின் படங்களிலோ சூரியைப் பார்க்க முடியாதா?"
ஏங்க, சின்னப் பட்ஜெட் படத்துக்கு சின்ன கேமராவும் பெரிய பட்ஜெட் படத்துக்குப் பெரிய கேமராவும் வைச்சு எடுக்குறாங்களா? எல்லாப் படத் துக்கும் கேமரா ஒண்ணுதானே... அப்புடியிருக்க எனக்குச் சோறு போட்ட சின்ன பட்ஜெட் படங் களை நான் எப்படி தவிர்ப்பேன்? இப்போ நான் பண்ற ‘கத்துக்குட்டி’ சின்ன பட்ஜெட் படம்தான். புதுமுக இயக்குநர் இரா.சரவணன்தான் பண்ணியிருக்கிறார். படத்துக்குப் பட்ஜெட் முக்கியம் இல்ல... கதை தான் முக்கியம். ‘கத்துக்குட்டி’ படத் தைப் பார்த்தீங்கன்னா நீங்க என்னைய தேடி வந்து கை குடுப்பீங்க. அப்புடியிருக்க பெரிய படத்துல மட்டும்தான் நடிப்பேன்னு சொல்லி, நம்ம சோத்துக்குப் பங்கம் பண்ணிட்டுப் போயிடாதீங்க...
(பேசிக்கொண்டே இருந்தவர் சமீபத்தில் ஸ்டில் ஷூட்டில் எடுத்த புகைப்படங்களை காட்டி னார். மாடர்ன் லுக்கில் அத் தனைப் படங்களும் ‘அட’ போட வைத்தன
கெட்டப், உடைகள் எல்லாம் பட்டையைக் கிளப்புகிறதே... அடுத்து ஹீரோதானா?
சினிமாவுலதான் இந்த மாதிரியெல்லாம் பேன்ட்டு, சட்டை போட முடியலை. சரி, வெளியிலயாச்சும் போட்டுப் பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். அதுவும் உங்களுக்குப் பொறுக் கலையா? புதுசா பேண்டு சட்டை போட்டு ஸ்டைலிஷா மாறினா உடனே ஹீரோ ஆசைன்னு சொல்லிடுவீங்களா? ஹீரோவா ஆகுறதுக்கு இதுதான் தகுதியா? நல்ல ட்ரஸ் போட்டுப் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசைண்ணே... கைலியும், டவுசருமா சுத்து னதை எல்லாம் எந்தக் காலத்துலயும் மனசு மறக்காது. இருந்தாலும், ‘ஒரு நடிகனா லட்சணமா இருக்கலாம்ல’ன்னு வீட்டுக்குள்ளே இருந்தே குரல் கெளம்பிடுச்சு. அதனாலதான் புது ட்ரஸ் போட்டுப் பார்த்தேன். ‘நீ கெட்ட கேட்டுக்கு கெட்டப் வேறயா’ன்னு மத்தவங்க நினைக்கிறது என்னோட மனசுக்கும் தெரியும். அதனால, சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் இதெல்லாம். மத்தபடி கண்டிப்பா இந்த ரிஸ்க்கான அவதாரத்துல வந்து உங்க நிம்மதியைக் கெடுத்துட மாட்டேன்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment