குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திலிருந்து வாழ்க்கையெனும் பெருநதிக்கு நம்மை அழைத்துச்செல்கிறது வியட்நாமிய திரைப்படமான சென்ட் ஆஃப் கிரீன் பப்பாயா.
ஆதரவற்ற 10 வயதுள்ள ஓர் ஏழைச் சிறுமி கிராமத்தின் ஒரு வசதிமிக்க வீட்டுக்கு வேலைக்காரியாக வருகிறாள். அதே வயது சிறுமியாக இருந்த அந்த வீட்டின் மகள் இறந்துவிட்ட சோகத்தில் இருந்தவர்களுக்கு இவளின் வருகை மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது.
தங்கள் குடும்பத்து பெண்ணாகவே வளர்க்கிறார்கள். அவள் அந்த வீட்டில் உள்ள சில புதிரான தன்மைகளுக்குப் பொருந்தி அதை ஏற்றுவாழ்கிறாள். அக்குடும்பம் வீழ்ச்சியுற்ற பிறகும் எப்படி அவர்களைவிட்டு பிரியாமல் தன்னடக்கமுள்ள தேவதையாக வளர்கிறாள் என்று இப்படத்தின் கதையைச் சில வாக்கியங்களில் சொல்லிவிடலாம்.
குடும்பத் தலைவன் கடை பணத்தோடு வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போவதோ, சூதாட்டம், பெண்களின் தொடர்பு என்று அவனுக்கு இருக்கும் தவறான சகவாசங்களோ, அக்குடும்பத்தார் நடத்தும் மளிகைக் கடையோ, அவ்வீட்டின் மூத்த மகன் நிர்வகிக்கும் நடவடிக்கைகளையோ இப்படம் வெளிப்படுத்த முனையவில்லை.
வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குழந்தையின் மன உலக அம்சங்களைக் காட்சிப்படுத்துவதன் ஊடாக கதையை நகர்த்திக்கொண்டு செல்லும்முறைக்கே பெருங்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவை தவிர வாசலுக்கு வரும் பறவைகள், சன்னல் வழியாக ஓடும் அணில்கள் தோட்டத்தில் செழித்து நிற்கும் மரங்களில் பூத்துக் குலுங்கும் பப்பாளி மலர்கள் என்று அதன் வாசத்தை சிறைபிடிக்க முயன்றுள்ளார்கள்.
இப்படத்தின் முக்கியப் பாத்திரமாக வரும் சிறுமியின் கண்கள் மூலமாகவே இவையனைத்தையும் காணும்படியான வாய்ப்பு பார்வையாளனுக்கு தரப்பட்டுள்ளது. புதிதாக வேலைக்கு வரும் சிறுமி மிகப் பரவசத்தோடு ஒவ்வொரு இடமாக சென்று வீட்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது இப்படத்தில் காட்டப்படும் பளிங்குத் தரையமைப்பு, பழுப்புநிற மரத்தடுப்புகள், காற்றோட்டமிக்க பெரிய பெரிய சாளரங்கள், விசாலமான வராந்தாக்கள், தோட்ட நிழல்கள், அச்சம் தரத்தக்கதாக உள்ள பின்கட்டு அறைகள் என இப்படத்தின் ஒளிப்பதிவு மாசற்ற பயணத்தை மேற்கொள்ள, அந்த வீடே இக்கதையில் இன்னொரு கதைப் பாத்திரமோ என்று நம்பத் தோன்றுகிறது.
வாளியில் தண்ணீர் எடுத்து வைத்துக்கொண்டு தரைமெழுகும் பணியில் ஈடுபடும் அவளை பணி செய்யவிடாமல் அங்கு சதா வந்து இடையூறு செய்யும் சிறுவன் டின் சில (வால்முளைத்த) சிறுவர்களுக்கே உண்டான கோணங்கித்தனத்தை, குறும்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஓர் எதிர்பாத்திரம் போலவே காட்சியளிக்கிறான்.
சமைத்துவிட்டு சாப்பாடு எடுத்து வரும்போது, பெரியவர்களின் உத்தரவைக் கேட்டு ஒவ்வொரு பணியாக மேற்கொள்ள முயலும்போதெல்லாம் வந்து இடையூறு செய்யும் அவனின் நடிப்பு குழந்தை உலகத்தின் இன்னொரு பரிமாணத்தை நமக்குத் தருகிறது. துடிப்புமிக்க அவனின் நடிப்பு வழியேதான் பேச எவ்வளவோ இருந்தும் அதை அழுத்திவைத்திருக்கும் சிறுமி மியூவின் அமைதித் தன்மையை நம்மால் உணரமுடிகிறது.
அக்குடும்பம் பொருளாதாரத்திலும் சமூக தளத்திலும் வீழ்ச்சியை சந்திக்கிறது. இப்படத்தின் பின்பாதி 'பத்தாண்டுக்குள் கழித்து' என்று காட்டப்படுவதற்குப் பிறகும் கலைச் செறிவோடு இயக்கப்பட்டுள்ளது.
அக்குடும்பத்தின் மூத்த மகனின் சிறந்த நண்பனாக வரும் குயான் எனும் பியானோ இசையமைப்பாளனின் வீட்டு வேலைக்காரியாக மியூ வருகிறாள். அங்கும்கூட யாருக்கும் வசனங்கள் அதிகம் இல்லை. இப்படத்தின் முழுத்தன்மையே இதே கதியில் இயங்குகிறது.
மிகச்சிறந்த ஒரு மனிதனான குயான் எனும் இசைக்கலைஞனின் வீட்டுக்கு வீட்டு வேலை செய்யவரும் மியூவுக்கு வயது 20. (டிரான் நியு என்கே எனும் நடிகை). முன்பிருந்த அதே குணத்துடன் கூடிய வாய்ப்பேசா (வளவளவென பேசுவதற்கு எந்த அவசியமுமற்ற) பணிப்பெண்ணாக தன்னடக்கம், அமைதி, வேலையில் கவனம், தோட்டப் பராமரிப்பு, அவன் வாசிக்கும் பியானோவை தூய்மைப்படுத்துவது என்று வருகிறாள்.
அந்த இசைக்கலைஞனை அடிக்கடி சந்திக்க வரும் பெண் அவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள். ஆனால் அவளுக்கோ அவன் பியானோ வாசிப்பதில் ஆர்வமில்லை. அவள் கவனமெல்லாம் அவன் அவளை வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்பதுதான். அவளோடு அவனுக்கு பிணக்கும் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் இல்லாத ஒருநாள் அந்த வீட்டிலிருந்த உடையை, அணிகலன்களை எடுத்து அணிந்து கொண்டுவிடுகிறாள். அங்கிருக்கும் வாசனை திரவியங்களை தன்மேல் பூசிக்கொள்கிறாள்.
அந்த நறுமணத்தின் சுவையை மகிழ்வோடு அனுபவிக்கிறாள். அங்கிருக்கும் நிலைக்கண்ணாடி அவளின் அழகை வேறெப்போதையும்விட அதிகம் உயர்த்திக் காட்டுகிறது. அர்த்தங்கள் பல தொனிக்க அப்போதுதான் அவளுக்கு வாழ்வின் மீதான விருப்பம் முதன்முதலாக வருகிறது.
எதிர்பாராமல் அவன் வந்துவிட்ட சந்தடி கேட்டு அவள் அங்குமிங்கும் ஓடி மறைகிறாள். சடுதியில் உள்ளே வந்த அவன், அங்கு ஏதோ வித்தியாசமாய் நிகழ்ந்துள்ளதை உணர்ந்துவிடுகிறான். வீட்டில் அவள் ஓடி மறைந்த வழியில் அவன் அங்கும் இங்கும் ஓடி அவளைக் கண்டுபிடித்து விடுகிறான்.
இப்படத்தில், மியூ சின்ன வயதில் வளர்ந்த வீட்டின் தோட்டத்தில் கண்ட பப்பாளி மர மலர்களிலிருந்து வரும் நறுமணத்தை ரசித்தவள். வெறும் மலர்களாக மட்டும் காட்சியளிக்கும் பப்பாளி மலர்கள் பின்னாளில் அற்புத கனிகளின் தொகுப்பாக மாறுவதையும் அவள் பார்த்திருக்கிறாள். பொறுமைமிக்க அவளது பால்யகாலம் இன்று வாழ்வின் அற்புதக் கனிகளை கண்டடைந்துவிடுகிறது.
இயல்பாக அவளை எதிர்கொண்டவன் அவளின் தோற்றப் பொலிவைக் கண்டு திகைத்து நிற்கிறான். அவளின் அழகையும் பண்பு நலன்களையும் அங்கீகரிக்கிறான்.
இப்படத்துக்கு உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவு பிரிவில் சிறந்த படத்துக்கான தங்கமயில் விருது கிடைத்திருக்கிறது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில் வரும் சிறுமியின் வாழ்க்கைக் கதை வழியே போருக்கு முந்தைய வியட்நாமை காட்ட விரும்பிய இயக்குநர் ட்ரான் அன்ஹங், காலநதியில் கரைபுரண்டோடும் வரலாற்று வெள்ளத்திலிருந்து சிறு மிடற்றுபானத்தை, அதில் ததும்பும் ரசத்தை சிதறாமல் நமக்கு பருகக் கொடுத்துவிட்டார்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment