உங்கள் நிலத்துக்கு ஒரு சான்றிதழ் கேட்டு வருவாய்த்துறை அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள். ‘‘அந்த நிலம் இப்போது உங்கள் பெயரில் இல்லையே’’ என்கிறார் அங்குள்ள அதிகாரி.
நீங்கள் இதை ‘போலி பத்திர மோசடி’ என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிகாரி மேலும், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் இறப்புச் சான்றிதழைக் கொடுத்து, உங்கள் மாமா அந்த நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டுவிட்டாரே. சட்டப்படி நீங்கள் இப்போது உயிருடனேயே இல்லை’’ என்கிறார்.
உங்களுக்கு எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருந்தது லால் பிஹாரி என்கிற அந்த 22 வயது இளைஞருக்கு. இது நடந்தது 1976-ம் வருஷம். உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் மாவட் டத்தில் காலியாபாத் நகரில் இருந்த அலுவலகத்தில்தான் அந்த அதிர்ச்சி அவருக்குக் கிடைத்தது.
‘‘நான் சிறுவனாக இருந்தபோதே என் தந்தை இறந்ததும், எனது தாய் இந்த ஊரைவிட்டு அமீலோ என்னும் ஊருக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டார். பல வருஷங்களுக்குப் பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன்’’ என்று விளக்கம் தந்தார் லால் பிஹாரி.
ஆனால், ‘‘நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் மாமா உரிய மருத்துவச் சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்து சட்டப்படி உத்தரவு பெற்று, உங்கள் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டதால் எங்களால் எதுவுமே செய்ய முடியாது’’ என்றார் அதிகாரி.
லால் பிஹாரி முதலில் போலீஸுக் குப் போனார். ‘‘லால் பிஹாரி இறந்து விட்டான். நீ பொய்யாக புறப்பட்டு வந்திருக்கிறாய்’’ என்று போலீஸும் அவரைத் துரத்தியது. அடுத்து பிஹாரி தன்னுடைய மாமா வீட்டுக்குப் போனார். அங்கும் ‘‘நீ லால் பிஹாரி இல்லை. அவன் இறந்துபோய்விட்டான்’’ என்று முகத்தில் அடித்ததுபோலச் சொல்லி விரட்டினார்கள்.
‘இதை நான் சும்மா விடப்போவ தில்லை…’ என்று தீர்மானித்த லால் பிஹாரி, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பத்திரிகைகளுக்கு எழுதிப் போட்டார்.
மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக தன் பெயருக்கு முன் பாக ‘இறந்தவன்' என்று அடைமொழி யுடன் லெட்டர் பேட் அடித்து, அதில் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதினார். தன் பெயரைப் போட்டு இறுதி ஊர்வலம் என்று நோட்டீஸ் அடித்து விநியோகித்து பொம்மை சிதைக்கு கொள்ளி வைத்து ‘காரியம்’ செய்தார்.
தன் மனைவிக்கு ‘விதவைக்கான நல நிதி வேண்டும்’ என்று மனு போட்டார். அவர் உயிருடன் இருப்பதால் அதைத் தர முடியாது என்று அதிகாரிகள் கடிதம் எழுதினால், அது தனக்குச் சாதகமான சான்றாகும் என்பது அவரின் நோக்கம். நேரில் வந்து விசா ரித்துச் சென்ற அதிகாரி, லால் உயிருடன் இருப்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அவர் மனைவியின் நெற்றியிலும், வகிட்டின் உச்சியிலும் குங்கு மம் வைத்திருப்பதால் அவர் விதவை இல்லை என்றும், அதனால் அவருக்கு நல நிதி தர முடியாது என்றும் பதில் கடிதம் அனுப்பினார்.
தன்னைக் கைது செய்து வழக்கு போட வேண்டும் என்பதற்காகவே போலீஸ்காரர்களிடம் தகராறு செய் தார். அப்படியும் இவரைக் கைது செய்யவில்லை. ஒரு கான்ஸ்டபிளுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்து தன் மேல் வழக்கு பதியச் சொல்ல, விவரம் புரிந்ததும் அவர் மறுநாள் வந்து பணத்தைத் தந்துவிட்டுப் போய்விட்டார்.
அடுத்த திட்டமாக தன் நிலத்தை சாமர்த்தியமாக அபகரித்த மாமாவின் 5 வயது பையனைக் கடத்திகொண்டு வந்து தன் வீட்டில் வைத்தார். மாமா தன் பெயர் போட்டு புகார் கொடுக்க வேண்டும் என்பது அவர் நோக்கம். ஆனால், அந்த ‘எம்டன்’ மாமா இவர் பையனை எதுவும் செய்ய மாட்டார் என்கிற நம்பிக் கையில் கடத்தப்பட்டு 5 நாட்களாகியும் புகாரே கொடுக்கவில்லை. மனசாட்சி உறுத்தவே பையனை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் பிஹாரி.
ஒரு பத்திரிகையாளர் இவரின் நூதன மான போராட்டங்களைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதினார். அதைப் படித்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேச சட்டசபையில் இவரின் பிரச்சினையைப் பற்றிப் பேசினார். அந்தச் செய்தியைப் படித்த லால், லக்னோ சென்று தனக்கு நீதி வேண்டும் என்று ஒரு தட்டி எழுதிப் பிடித்துக்கொண்டு சட்டசபைக்கு வெளியில் தனி நபராக தர்ணாவில் இறங்கினார். போலீஸ் வந்து இவரை இழுத்துச் சென்றது.
சட்ட மன்றத்துக்குப் பார்வையாள ராகச் சென்றார். சபை நடந்து கொண்டி ருந்தபோது தன் பிரச்சினைகளை விளக்கி அச்சடித்த நோட்டீஸ்களை சபைக்கு நடுவில் வீசினார். சபைக் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். 7 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடு விக்கப்பட்டார்.
ஒரு பக்கம் இவரின் வழக்கு நீதிமன்றத்தில் வாய்தாக் களுக்கு நடுவில் தொடர்ந்து கொண்டிருக்க, 1988-ல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அலஹாபாத் தொகுதியில் வி.பி.சிங்குக்கு எதிராக தேர்தலில் நின்றார். தனக்கு ஓட்டு எதுவும் விழாது என்று நினைத்த இவருக்கு 1,600 ஓட்டுக்கள் கிடைத்தன. 1989-ம் வருடம் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து தேர்தலில் நின்றார்.
கடைசி முயற்சியாக 1994-ல் தாசில் தார் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழை யப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டி னார். ஆனால், அதற்குள் இவரின் இடைவிடாத 18 ஆண்டு சட்டப் போராட் டத்தின் பலனாக, இவர் உயிருடன் இருப்ப தாக நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தது.
இடைப்பட்ட காலத்தில் மாமாவுடன் சமாதானமாகிவிட்டதால் அந்த நிலத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
“எனக்கு சொத்து பெரிதில்லை. உயி ரோடு இருக்கும் என்னை இறந்துவிட்ட தாக சொன்ன அரசாங்கத்தின் பொறுப் பற்ற செயலை உலகுக்குக் காட்ட விரும் பினேன். அதற்காக நான் பட்ட அவமானங் கள் அதிகம். என்னை பைத்தியக்காரன் என்று விமர்சித்தார்கள். சாலைகளில் நான் நடந்தால், இறந்தவன் போகிறான் என்று கிண்டல் செய்வார்கள். என் மனைவி தினமும் அழுவாள். வழக்குக்காக என் சொத்து, சேமிப்பு எல்லாம் இழந்தேன்' என்கிறார் லால்.
சொத்துக்காக மோசடி செய்யப்பட்டு தன்னைப் போலவே போலிச் சான்றி தழ்கள் மூலம் இறந்துவிட்டதாக அறிவிக் கப்பட்டவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்கிறார். அவர்களுக்கு உதவ ‘இறந்தவர்கள் சங்கம்' என்னும் அமைப்பை இவர் தொடங்கினார். அதில் இப்போது 20 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இவரைத் தேடி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்கூட ஆலோசனைக்காக வந்து போகிறார்கள்.
1999-ல் இவரைப் பற்றியும் இவரின் அமைப்பைப் பற்றியும் ஒரு விரிவான கட்டுரையை ‘டைம்’ இதழ் வெளியிட்டது. அந்தக் கட்டுரையையே புகாராக எடுத் துக்கொண்ட உத்தரப்பிரதேச உயர் நீதி மன்றம், இந்த விவகாரத்தை உடனே கவனிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கை களைத் தேசிய மனிதஉரிமை அமைப்பு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன் பிறகே அரசாங்கம் விழித்துக்கொண்டு இதுபோன்ற வழக்குகளில் முன்னுரிமை தந்து, இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட பலரை உயிருடன் இருப்பதாக திருத்தச் சான்றிதழ் அளிக்கத் தொடங்கியது.
லால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணைகொண்டு தகவல் அறிந்தபோது 2008-ல் 335 பேர்களும் 2012-ல் 221 பேர்களும் உயிருடன் இருப் பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இவருக்கு கண்ணீருடன் நன்றி சொன்னார்கள்.
அமெரிக்காவில் முதலில் கோமாளித் தனமாக நினைக்கிற, ஆனால் பிறகு மக் களுக்கு பலன் அளிக்கிற செயல்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் ‘இக் நோபல்' பரிசு 2003-ம் வருடம் லாலுக்கு அளிக்கப்பட்டது. இவரின் கதையை இந்தியில் திரைப்படமாக எடுக்க இயக்கு நர் சதீஷ் கடாக் முன்வந்திருக்கிறார்.
தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட வர்களுக்கு சேவை செய்வதையே தன் முழு நேர வேலையாக ஏற்றுக்கொண்டு வாழும் லால் பிஹாரிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தன் மகன் மற்றும் நண்பர்களின் உதவிகளோடுதான் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்.
- வழக்குகள் தொடரும்
அ
நன்றி த இந்து
0 comments:
Post a Comment