Monday, August 24, 2015

தங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் : பி.ஆர்.சோமசுந்தரம் நேர்காணல்

பி.ஆர்.சோமசுந்தரம், நிர்வாக இயக்குநர், உலக தங்க கவுன்சில்
பி.ஆர்.சோமசுந்தரம், நிர்வாக இயக்குநர், உலக தங்க கவுன்சில்
தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் தலைப்புச் செய்திதான். தங்கத்தின் தேவை என்ன, விற்பனை எவ்வளவு உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் சென்னை வந்திருந்தார். அந்த சமயத்தில் அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...
திருநெல்வேலி சொந்த ஊர். படித்தது சென்னையில். சார்டர்ட் அக்கவுண்டட் படித்தவர். ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டாண்டர்டு சார்டட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். லஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராக இரு வருடங்கள் பணியாற்றியவர். 2013 ஜனவரியில் இருந்து உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
எப்எம்சிஜி, வங்கி, உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்துவிட்டு இப்போது உலக தங்க கவுன்சிலில் எப்படி?
படிப்பு என்பது ஒரு ஆரம்பம் தான். டிகிரி முடித்தவுடன்தான் படிப்பே ஆரம்பிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் போது இவை மூன்று வெவ்வேறு துறைபோல தெரிந்தாலும் இவை அனைத்து கிட்டத்தட்ட ஒன்றுதான். நாம் செய்ய வேண்டிய வேலையைப் புரிந்துகொள்வதும், சரியான கேள்வி கேட்கும் திறன் இருந்தாலும் பெரும்பாலான வேலைகளைச் செய்யலாம். வங்கித்துறையில் இருக்கும்போது தங்கத்தை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அதனால் இங்கு சேர்ந்தேன்.
கடந்த 35 வருடங்களில் தங்கத்தில் கிடைத்த வருமானம் (பணவீக்கத்துக்கு பிறகு) என்பது கிட்டத்தட்ட 3.94 சதவீதம்தான். தங்கத்தை முதலீடு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
நாம் நம்புகிறோமோ இல்லையோ உலகத்தில் பலர் தங்கத்தை நம்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிடைக்கும் வருமானத்தை வைத்து முடிவுக்கு வரமுடியாது.
கிரீஸ் பிரச்சினையில் வங்கியில் பணத்தை எடுக்க அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தங்கத்தை வைத்து பொருள் வாங்கப்பட்டது. காரணம் சர்வதேச அளவில் தங்கத்துக்கு என்று ஒரு விலை இருக்கிறது. மேலும் தங்க அடமானம் என்பது பொருளாதார நடவடிக்கையை ஊக்கப்படுத்துகிறது.
ஆரம்பத்தில் தங்கத்தை அடிப்படையாக வைத்துதான் நாட்டில் கரன்ஸி அச்சடிக்கப்பட்டது. அதன் பிறகு கரன்ஸி அச்சடிக்கும் முறை மாறி இருக்கிறது. உலகில் பல நாடுகளில் கரன்ஸி அச்சடிப்பதை அதிகரித்திருக்கிறார்கள், ஆனால் தங்கதை உற்பத்தி செய்ய முடியாது. கரன்ஸி புழக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை உயரும் என்பது தியரி.
பண முதலீடு என்றால் வட்டி கிடைக்கும், ரியல் எஸ்டேட்டில் வாடகை கிடைக்கும். ஆனால் தங்கம்என்பது ஒரு உலோகம். அதற்கு மதிப்பு கிடையாது என்பதால், முதலீடு செய்வதற்கான இடம் இல்லை என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்களே?
பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு டிவிடெண்ட் கிடைக்கலாம். அல்லது முதலீடு செய்த தொகையே வராமல் போகலாம். மற்ற முதலீட்டு வாய்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்துதான் முடிவுக்கு வர முடியும். தங்கத்துக்கு வட்டி கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தங்கம் என்பது உற்பத்தி செய்ய முடியாதது என்பதையும் மறக்ககூடாது. தங்கத்தை பயன்படுத்தி நடக்கும் தொழில்கள் அதிகம். இதற்கெல்லாம் மதிப்பு இல்லையா.
சீனா செய்தது போல நாணயத்தின் மதிப்பை குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் தங்கத்தில் அப்படி செய்ய முடியாது. தங்கத்தின் விலையை தனிநபரோ, தனி நாடோ தீர்மானிக்க முடியாது. இதுபோன்ற asset class- யை வைத்துக்கொள்வதில் தவறில்லையே.
தங்கத்தின் மீதான ஈர்ப்பை உருவாக்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தங்கத்தை சேர்ப்பதிலே முடிவடைந்து விடுகிறது. அதே தங்கத்தை அவசர தேவைக்காக அடகு வைத்து அதை மீட்காமல் மூழ்கி பல சமூக சிக்கல்கள் உருவாகிவருகிறதே?
சில வருடங்களுக்கு முன்பு, சகட்டு மேனிக்கு கிரெடிட் கார்டு கொடுத்து வங்கிகள் சுட்டுக்கொண்டன. ஆனாலும் கிரெடிட் கார்டு கொடுப்பதை நிறுத்தினார்களா? அந்த நடைமுறையை சரி செய்தார்கள். அதுபோல சில இடங்களில் தங்கம் அடகு சரியாக நடப்பதில்லை. அதற்காக தங்கத்தின் மீதான ஈர்ப்பை சரியில்லை என்று சொல்ல முடியாதே. இதற்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்படி யோசிக்கலாம். தங்கம் இல்லை என்றால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி இருப்பார்கள். அவர்களின் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கும்.
தற்போது இளைஞர்கள் பலரும் வளர்ந்து வரும் நிதி சார்ந்த முதலீடுகளான மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது வருங்காலத்தில் தங்கத்தின் தேவை எப்படி இருக்கும்?
அனைத்து நிதி சார்ந்த முதலீடுகளும் நல்ல வருமானம் கொடுக்கும் போது தங்கம் வருமானம் கொடுக்காது. அனைத்து நிதி சார்ந்த முதலீடுகள் மோசமாக இருக்கும் போது தங்கம் நல்ல வருமானம் கொடுக்கும். நிதிசார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதில் தவறில்லை. மொத்த முதலீட்டில் தங்கத்தில் முதலீடு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம்.
தங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல. உலகில் எப்போது அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்று கணிக்க முடியாது. அப்போது தங்கத்தின் தேவை புரியும். அதிக பணவீக்கம் நிலவும் சூழலில் தங்கம் உதவும். இந்த சூழ்நிலையில் தங்கத்தை பற்றிய விழிப்புணர்வு தேவை. நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாவிட்டாலும் தங்கம் சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
அரசின் தங்க அடமானத் திட்டம் குறித்து உங்கள் கருத்து?
அனைத்து வகையான தங்கத்திலும் மக்கள் உணர்வுபூர்வமாக இல்லை. நகையை மாற்றுவதற்கு பலர் வருகிறார்கள். அந்த அனைத்து தங்கமும் உருக்கப்படுகிறது. அதேபோல அடமானத் திட்டத்தில் வரும் தங்கமும் உருக்கலாம். ஆனால் தங்கத்தை கொண்டு வருபவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும். நல்ல மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். அனைத்து திட்டங்களும் வெற்றி அடையும் என்று கருத முடியாது. ஆனால் அதற்கான சூழ்நிலைகளை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கால மாற்றத்தில் அனைத்தும் நடக்கும்.
கோல்ட் இடிஎப், கோல்ட் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பெரிய வெற்றி அடையவில்லையே. தங்க நகை அடமானத் திட்டம் வெற்றி அடையுமா?
இந்த திட்டம் உடனடியாக வெற்றி அடையும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காக கொண்டு வராமல் இருப்பது நல்லதில்லை.
1998-ம் ஆண்டுக்கு முன்பு அனைத்து பங்குகளும் பத்திரங்களாக/காகிதங்களாக இருந்தது. 1998ம் ஆண்டு டீமேட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அப்போதும் இதேபோல பேச்சுகள் இருந்தன. முதல் சில வருடங்களுக்கு பெரிய மாற்றம் இல்லை. ஆனால் இப்போது 99% பங்குகள் டீமேட் வடிவில்தான் இருக்கின்றன. மாற்றத்துக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மாற்றம் தானாக நடக்கும்.

0 comments: