ஆடு மேய்ப்பவர்களிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். கதைகளைச் சொல்லவும் கேட்கவும் அவர்களிடம் விஸ்தாரமான பொழுதுகள் உண்டு.
முக்கியமாக இவர்கள் பேய் பிசாசுக் கதைகள்தான் அதிகம் சொல்லுவார்கள். மக்களிடம் பயம், பீதிகளை உண்டாக்கினால்தான் ராத்திரிகளில் தைரியமாக வெளியே வர மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை!
கிடை தூங்கிக் கொண்டிருக்கும் போதே இயங்கிக் கொண்டிருக்கும் அதனுடைய அமைப்பு அப்படி.
ஈனுவதற்கு ராப்பொழுதுகள்தான் வசதி போலிருக்கிறது. தூக்கம் ஒரு பக்கம்; கிடாய்கள் பெண் ஆடுகளில் முடையடித்து, முகர்ந்து பார்த்து விரட்டி விரட்டி பொலிந்துகொண்டிருக்குங்கள்.
ரா வேட்டையாடும் நரிகள், ஓநாய்கள் ஒரு பக்கம்.
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் இங்கே மனுசன்தான் பிரசவம் பார்க்கிறான். காட்டு ஆடுகளுக்கும் காட்டு மாடுகளுக் கும் அவை தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்கின்றன. அதேபோல் காட்டுப் பெண்களும் அவர்களே தங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சொல்கதையில் ஒரு காட்டு வேட்டு வப் பெண், தனக்குத் தானே பிரசவம் பார்த்துப் பிள்ளைப் பெத்து, தொப்புள் கொடியைப் பல்லால் துண்டித்து, பச்சைத் தண்ணீர்த் தொட்டுக் குழந்தை யைத் துடைத்து, குழந்தையை புஜத்தில் சேர்த்தணைத்து வைத்துக் கொண்டு, சேகரித்துக் கட்டிய விறகுச் சுள்ளிகள் கொண்ட கட்டைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டுப் போகிறதை, புலிவேட்டைக்காக மரத்தின் மேல் இருந்த ராஜா ஒருவன் பார்த்ததாக அந்தக் கதையில் வருகிறது.
பசு மாடு ஈனும்போது பார்க்கக் கிடைப் பது பாக்கியம் என்கிறது ஒரு நம்பிக்கை. ஈனும் பசுவை அந்த நிலையில் பிரதட் சணம் வந்து வணங்குவது மிகப் பெரிய புண்ணியம் என்கிறது இன்னொரு நம்பிக்கை.
குற்றாலத்தில் எனது நண்பர்களோடு இதுபற்றிய பேச்சு வந்தபோது, நான் அவர்களிடம் சில கிரித்திரியமான கேள்விகள் கேட்டேன்.
‘‘உங்களில் யாராவது குரங்கு ஈனும்போது பார்த்தது உண்டா?'' என்று கேட்டு வைத்தேன்.
ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘நீங்கள் குற்றாலவாசிகள். இங்கே உள்ள குரங்குகளும் குற்றாலவாசிகள். இங்கே முந்தி வந்தது அதுகளா? நீங்களா?'' என்றேன்.
சிரித்தார்கள் நண்பர்கள்.
‘‘சிரிக்கிறதுக்குக் கேட்கவில்லை நான்; நிசமாகத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்” என்றேன்.
‘‘எங்களுக்குத் தெரியவில்லை; தெரிந்தால் நீங்களே சொல்லலாமே...'' என்றார்கள்.
‘‘குரங்குகளின் பூர்வீகம்தான் இந்த மலை. அதுகள் எங்கிருந்தும் வர வில்லை. வந்தவர்கள் நாம்தான் என்று தோன்றுகிறது'' என்றேன்!
“சரியான கரிசல் காடையா நீங்க?” என்று சொல்லிச் சிரித்தார் தீப.நடராஜன்.
சிறந்த உழைப்பாளிகளையும், அதி லும் யோக்கியமானவர்களையும், பெண் ணைப் பெற்றவர்களும் பெண்களும் கண்டுபிடித்துவிடுவார்கள். ரொம்ப அலைய வேண்டியதில்லை. மாப் பிள்ளைகளுக்கு, அவர்களுக்குப் புழக் கடையிலேயே பச்சிலை கிடைத்துவிடும்.
அப்படித்தான் தூங்காநாயக்கரும் ‘ஆம்புட்டுக்' கொண்டார் உத்தியம்மாவிடம்.
இரு உழைப்பாளிகள் சேர்ந்து பாடுபட்டால் செல்வம் கூடிவரும்.
கிடையிலும் அவர் செயலாக இருந்தார்; ஊரினுள்ளும் செயலாளரானார்.
அதிகம் பேசாதவருக்கு எப்போதும் மதிப்புதான்!
கலியாணம் முடிந்ததும் தூங்காநாயக் கர் இன்னொரு மனுசனானார். கிடையில் இருந்து அவர் ‘தள்ளிவைக்கப்'பட்ட மாதிரி எல்லாரும் சேர்ந்து அவரை வீட்டுக் காவல் வைத்ததுபோல ஆக்கிவிட்டார்கள்.
உத்தியம்மா நல்ல விளைந்த பெண் பிள்ளை. உலகத்தைப் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்ட பொம்பிளை.
எப்போது பார்த்தாலும் ஒரு துருதுருப் புத் தெரியும். தானும் ஒரு உலகம் கண்டு, அவருக்கும் ஒரு உலகத்தைக் காட்டினாள். புது மனுசனாகிவிட்டார் தூங்காநாயக்கர்!
விளக்கேற்றாமலேயே பிரகாசம் கொண்டது வீடு. அவள் வந்தபிறகு வீடே தனியொரு மணம் கொண்டது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வாரம் இரு முறை உச்சியில் இருந்து உள்ளங் கால்வரை எண்ணெய்த் தேய்த்துத் தலைமுழுக்கு என்று ஏற்பட்டது. இந்த மாதிரிப் புது மாப்பிள்ளைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் எண்ணெய்த் தலைமுழுக்கு. மற்ற சாதாரண நாட்களில் நல்லெண்ணெய்தான் தலை முழுக்கில். இந்த நாட்களில் மட்டும் விளக்கெண்ணெய்தான் பயன்பட்டது தலைமுழுக்குகளுக்கு.
ஏண்டாப்பா என்று கேட்டால், ‘சூடுல்லா' என்பார்கள்.
‘‘என்னா சூடு? வேனா வெயிலில் மண்டையைப் பிளக்க ஆடு மேய்த் தவனுக்கு இல்லாத சூடு இதுல வந்துட்டதாக்கும்.”
‘‘லேய் கோட்டிக்காரா, அது மண்டை யிலே மட்டுந்தாம் சூடு, இதுல ஒடம்பு பூராவும் கடுஞ்சூடு டேய்'' என்பார்கள்.
‘‘அதுலேயும் ஒருநாள் மாத்தி ஒருநாள் தவறாமக் கோழிக் கறி, கேக்கணுமா...'' என்பார்கள்.
ஆக, தூங்காநாயக்கனெத் ‘தொவைச்சி’ எடுத்துருவாங்கன்னு சொல்லு!
பொண்ணு வீட்டு விருந்துன்னா சும்மாவா. மூணு மாசம்!
பிட்டி நகண்டு போகும் மாமனார் வீட்டுக்கு. மாப்பிள்ளை தனது ஊருக் குத் திரும்பிவரும்போது, யாரு இதுன்னு கேக்கணும். அப்படி ஊதி உதைச்சிப் போயிறணும்.
பொண்ணு வீட்டில் இருந்து வரும் போது அந்த ஊரு கம்மாக்கரையிலேயோ, ஊர் மடத்துக்கு முன்னாலயோ இளவட்டக் கல் கிடக்கும். அதைத் தூக்கி தோளுக்கு ஏற்றி, பின்புறம் விழும்படி போடணும். அப்படிப் போட்டு விட்டால் அந்த மாப்பிள்ளைக்கு ஊர் இளவட்டங்கள் மாப்பிள்ளையின் கையில் வெத்திலை பாக்கும், கால் ரூபாயும் கொடுத்து மரியாதை செய்து வழியனுப்புவார்கள்.
தூங்காநாயக்கர் இளவட்டக் கல்லை யும் எடுத்து முதுகுக்குப் பின்பக்கம் வீசி எறிந்து, அந்த ஊர் இளவட்டங்களுக்கு வெத்திலையில் வெள்ளி ரூபாய் ஒன்றை வைத்துக்கொடுத்துவிட்டு வந்தார்.
பார்வைக்கும் அவர் கொஞ்சம் ஆள் அம்சமா இருப்பார்.
ஆடுகளில் ரெட்டைக் குட்டி ஈனுகிற வம்சம்னு இருக்கிறதுபோல மனுசக் குடும்பங்களில் ஒத்தைப் பிள்ளை வம்சம் என்று உண்டு. தூங்காநாயக்கர் வீடுகளில் ஒரு பிள்ளைதான் பிறக்கும்.
இந்தக் குடும்பம் கட்டுப்பாடுங்கிற தெல்லாம் ‘நேத்து’ வந்தது. ‘ஒரு பிள்ளை வம்சம்’ என்பது பூர்வீகத்தில் இருந்து வருவது.
ஒரே ஆண்பிள்ளை; அல்லது ஒரே பெண்பிள்ளை. மிஞ்சிப் போனால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும்.
ஒரே பிள்ளை மட்டும் பெறுவதால் அந்தப் பெண்கள் இடை சிறுத்து, கடைசிவரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
வீட்டிலும் சரி, காட்டிலும் சரி... வேலை களில் அவர்களுக்கு ஈடு அவர்களே. உத்தியம்மா கம்மம் புல் குத்தினால் வீடே அதிரும். தெருவழியாகப் போகிறவர் கள் கொஞ்சம் நின்னு பார்த்துவிட்டுப் போவார்கள்.
- இன்னும் வருவாங்க…
அ
நன்றி- த இந்து
கி.ராஜநாராயணன்
0 comments:
Post a Comment