தூங்கா நாயக்கர் பேச்சுக்குத் தொடர்ந்து ‘ம்’ போட்டுக்கொண் டிருக்க வேண்டும் என்பதே இல்லை. மனுசன் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று அவர் மனசுக்குப் பட்டால் போதும்; அவர் பேசிக்கொண்டே இருப்பார். வாழ்வனுபவங்களின் திரட்டாகவே அவை எல்லாம் இருக்கும். அப்படித்தான் இந்தக் கதைகளை அவர் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
மாங்காத்தோப்புக் காவக்காரன், தேங்காத்தோப்புக் காவக்காரன் போல வாழைத்தோப்புக் காவக்காரன் என்றும் இருந்தான்.
இந்த வாழைத்தோப்பு காவக்காரன் பலே கில்லாடி. அவன் ஆயுசுலேயே இது வரை ஒரு வாழைக் குலையென்ன… ஒரு வாழை இலைக்கூட களவுபோனது இல்லை.
இவனை எப்படி முறியடிக்கிறது என்று ஒருவன் யோசித்தான். திருடன் கெட்டிக்காரனா..? உடையவன் கெட்டிக் காரனா… என்ற கேள்விக்குத் திருடனே கெட்டிக்காரன் என்று பதில் இருக்கிறது.
இந்தக் காவக்காரனை ‘அடிச்சி’க் காண்பிக்கணும் என்று தீர்மானித்து விட்டான் திருடன்.
‘கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவன்' என்று சொல்லியிருந்தாலும், சில களவு களுக்கு கூடவே ஒருத்தன் இருந்தாத் தோது.
அந்த ரெண்டு பயல்களும் வழக்கம் போல நோட்டம் பார்க்கப் போனார்கள். வாழைத் தோட்டம் ரொம்பப் பெரிசாக இருந்தது. முதல்ல தப்பிக்கிறதுக்கு எதெல்லாம் வழி என்று பார்த்து வைத்துவிட்டார்கள். காவல் இருப்பது ஒரு ஆளா, ரெண்டு பேரா என்று கவனித்ததில் ஒரே ஆள்தான் என்றும், அவனிடம் சிக்கினால் யாரும் தப்ப முடியாது என்றும் சொன்னார்கள்.
காவல்காரர் வரும் நேரம், போகிற நேரம், தோட்டத்தினுள் இருப்பு எந்த இடம் என்று எல்லாம் தெரிந்துகொண்டார்கள்.
இதில் ஒரு கஷ்டம் என்னவென்றால், காவலாளி தூங்கவே மாட்டான் போலி ருக்கு. ராத்திரியெல்லாம் கம்பை வைத் துக்கொண்டு அப்படியே இருக்கிறானே, எப்படி அப்படியே பொம்மையைப் போல இருக்க முடிகிறது என்று கவனிக்க வேண்டும் என்று தீர்மானித் தார்கள்.
காவல்காரனைப் பகலில் பார்த்து வைத்துக் கொண்டார்கள். பகலில் அவன் தூங்கியதாகத் தெரியவில்லை. அதெப்படி பகலில் தூங்காமல்? அப்போ ராத்திரி தூங்கித்தானே ஆகணும்.
அவனுடைய மீசை அநியாயத்துக்கு நீளமாக இருந்தது. பெரும்பாலான தாடிகள் மீசையில் இருந்துதான் தொடங்கும். இவனுடைய மீசை தாடியில் இருந்து வந்தது போலிருக்கு.
என்றைக்கு இருந்தாலும் ‘ஓம்… இந்த மீசைக்கு ஒரு ஆபத்து இருக்குடேய் …’ என்று கருவிக் கொண்டான் திருடன்.
வாழைக் காய்கள் பருத்து முற்றிவிட் டன. வெட்டுவதற்கு நாள் குறித்திருப்பார் கள். நாம முந்திக் கொள்ளணும்.
திருடன் தன்னுடைய சேக்காளியுடன் ராத்திரிச் சாமத்துக்கு மேல் வந்தான். கால் நிலவுதான் இருந்தது. கண் வெளிச் சத்துக்கு இது கொஞ்சம் அதிகம்தான். அவன்களுடைய செருப்பில்லாத கால் கள் தரைக்குப் பழகியவை; கண்கள் இருட்டுக்குப் பழகியவை.
தோட்டத்தில் கால் வைப்பதற்கு முன்னால் சாமியை நினைத்துக் கொண் டார்கள். ஒவ்வொரு தொள்ளாளிக்கும் அவர்களுக்கு என்று சாமிகள் இருக் கிறார்கள், துணை செய்ய.
உடையவனுக்கு ஒரு சாமி இருந் தால் திருடனுக்கு ஒரு சாமி இருக்காதா? சேக்காளியைக் காலெட்டும் தூரத் தில் நிறுத்திவிட்டு, இவன் மாத்திரம் காவலாளியைப் பார்த்துக் கொண்டே அவனை நெருங்கினான் தைரியமாக.
‘யாரு?’ என்றுதான் கேட்பான் காவ லாளி. ‘மாடு தப்பி வந்துட்டது… சாயங் காலத்துலேர்ந்து தேடித் தேடி அலையு றோம்… இந்தப் பக்கம் வந்ததா…’ என்று பதிலுக்குக் கேட்கணும். ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை.
காவலாளி காவல் இருப்பதே ஒரு ‘அளகு’தான்!
நாடி உயரத்தில் ஒரு தடித்த கம்பின் மீது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றின்மேல் ஒன்றை வைத்து, அந்தக் கைகளின்மேல் நாடியை வைத்துக் கொண்டு கால்களை அளவோடு அகட்டி நின்று சொகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான் காவலாளி.
‘ஏ... குடியக் கெடுத்தானே' என்று இவன் மனசுக்குள் சொல்லிக்கொண் டான். காலுக்கு மேல் காலு ‘ரட்ணக்கால்' போட்டுக் கொண்டுதான் தூங்கப் பாத் திருக்கோம். இது கைக்கு மேல் கையெ வெச்சி அந்தக் கை மேலே மோரைக் கட்டையும் வெச்சி இப்புடிக் காவல் காக்கிறானே பாவி... படுபாவி. இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரிக்க முடியுமா?
‘தோட்டத்துக்கு உள்ளே போகலாம்’ என்று சேக்காளிக்குக் கையை உசத்திக் காட்டினான்.
வெள்ளைக்காரன் ரயில் விட்ட காலத்தில் கைகாட்டி மரத்தின் கை இறங்கினால் ரயில் வரலாம் என்பது அடையாளமாகும். பரிபூரண சுதந்திரம் நமக்கு வந்த பிறகு கைகாட்டி மரத்தின் கை மேலே ஆகாசத்தை நோக்கிக் காட்டினால் நம்முடைய ரயில் வரலாம் என்பது அடையாளமானது.
மேலே என்னங்க இருக்கு என்று கேட் பவர்களுக்கு ‘சொர்க்கம் மேலேதானே இருக்கு’ என்று பதில் சொல்லலாம்.
சேக்காளி பதற்றமே இல்லாமல் உள்ளே போனான். மதியமே பார்த்து வைத்திருந்த இரண்டு கனமான வாழைத் தார்களைச் சீவி, நீர்வடியும் வரை காத்திருந்து அவற்றைக் கொண்டுபோய் கரை சேர்த்துவிட்டு, திருட்டண்ணன் பார்வை எட்டும் தூரத்தில் வந்து நின்றுகொண்டான் சேக்காளி.
இங்கே காவலாளி முக்காலித் தூக்கத்தில் நின்ற பெருமாளே என்று ‘காவல்’ காத்துக்கொண்டிருந்தான்.
இந்த முக்காலித் தூக்கத்துக்கு கம்பை ஊன்றிக் கொள்வதைவிட துப்பாக்கி தான் ரொம்ப சவுகர்யம். அதனால் இது வெள்ளை சிப்பாய்களிடம் இருந்துதான் வந்ததோ என்று நினைத்துவிட வேண் டாம். அப்படியும்கூட வந்திருக்கலாம்.
இது, கிடைக் காவலுக்கு முக்கியமாக திருட்டு வெள்ளாடுகளுக்கு பயம் காட் டவே ஏற்பட்டது. நின்று நின்று சோர்ந்து போன இடுப்பை ஆற்றிக்கொள்ளவே வந்தது. ஆள் அரைக் கண் தூக்கத்தில் இருக்கும்போது தூங்குகிறானா, முழித் துக்கொண்டிருக்கிறானா என்று எதிரா ளிக்கு நிகா பிடிபடாது, ராத்திரிகளில்.
இப்போது வந்த சோலி முடிந்தது என்று சைகை மூலம் தெரிவித்துவிட் டான் திருட்டண்ணன். இன்னொரு முக்கியமான சோலிதான் பாக்கியிருந் தது. எடுத்துக்கொண்டு வந்த கத்திரிப் பானை மடியில் இருந்து எடுத்தான். சத்தம் எழாமல் ஒரு பக்கத்துத் தொங்கட் டான் மீசையைக் காணாமல் ஆக்கிவிட்டு, ஒரு சல்யூட் செய்து, வந்த சிரிப்பை அடக் கிக்கொண்டு நகர்ந்து வந்துவிட்டான்.
இந்தக் கதையை நான் இரண்டாவது முறையாகக் கேட்டேன்.
- இன்னும் வருவாங்க...
0 comments:
Post a Comment