ஆங்கிலத்தில் இதுவரை பத்துப் படங்களில் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஒன்றை இப்போது தனது படம் ஒன்றில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ. அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படங்களில் பெரும்பாலானவை அறுபதுகளில்தான் வந்துள்ளன. ஏன் இந்தத் தொழில்நுட்பத்தை விடாப்பிடியாக அவர் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்?
“டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது வெறுமனே பெரிய திரைகளில் தொலைக்காட்சியைக் காண்பதுதானேதவிர வேறொன்றுமில்லை. திரைப்படம் என்பது ஃபிலிமால்தான் அதன் முழுப் பிரம்மாண்டத்தையும் பெறுகிறது. நான் படங்களை எடுக்க முடிவுசெய்தது டிஜிட்டலில் அல்ல. டிஜிட்டலில்தான் படம் எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தும் ஒரு இண்டஸ்ட்ரி எனக்குத் தேவையும் இல்லை. என் படங்கள் எப்பொழுதுமே ஃபிலிமில்தான் எடுக்கப்படும். இதனால்தான் இந்தப் பழைய தொழில்நுட்பத்தை நான் உபயோகப்படுத்த முடிவுசெய்தேன்” என்பது டாரண்டினோவின் கூற்று.
உலகிலேயே ஃபிலி்மை வைத்துக்கொண்டு பிடிவாதமாகப் படம் எடுக்கும் ஒரு சில இயக்குநர்களில் இவரும் ஒருவர் என்றாலும் (பிறரில் சிலர்: க்ரிஸ்டோஃபர் நோலன், வெஸ் ஆண்டர்ஸன் (Wes Anderson), பால் தாமஸ் ஆண்டர்ஸன் (Paul Thomas Anderson), ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் முதலியோர்), இவர் சொல்லும் தொழில்நுட்பம் ஃபிலிமில் படம் எடுப்பது அல்ல. மாறாக, ஃபிலிமில் பரவலாகப் படங்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே எப்போதாவது மட்டுமே உபயோகிக்கப்பட்ட Ultra 70MM என்பதே அந்தத் தொழில்நுட்பம்.
பானாவிஷன் நிறுவனத்தின் (Anamorphic Movie Camera lences) லென்ஸ்களை வைத்து, வழக்கமான 35MMமில் எடுக்காமல், அதன் இரண்டு மடங்கான Ultra 70MMமில் எடுக்கப்படும் படமாக அவரது புதிய படமான ‘த ஹேட்ஃபுல் எய்ட்' (The Hateful Eight) இருக்கப்போகிறது. டிசம்பரில் வெளியாகும் இப்படம் இப்போதே உலகெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. 70MM என்பது தமிழுக்குப் புதிதில்லை என்றாலும் (ரஜினியின் மாவீரன்), Ultra 70-MM என்பதில் இதுவரை மொத்தமே பத்தே பத்து ஆங்கிலப் படங்களே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டின் சிறப்பம்சம்.
வழக்கமாக நாம் பார்க்கும் திரைப்படங் களுக்கும் 70-MM-க்கும் உள்ள வித்தியாசம், அதன் அகலத்திலும் திரைப்படங்களில் பிரேம்கள் வைக்கப்படுவதிலும் இருக்கிறது. இருப்பதிலேயே மிக மிக அகலமான பிரேம்கள் (2:78:1) Ultra 70-MM-ல்தான் சாத்தியம். இதனால், கதை நடக்கையில் கதாபாத்திரங்களைச் சுற்றியும் உள்ள சின்னச்சின்ன விஷயங்கள்கூட எளிதாக நமக்குத் தெரியும். ‘ஷோலே' படத்தை நினைவிருக்கிறதா? இது 70-MM. ஆங்கிலத்தில் Ben-Hur, How the West was Won, Mutiny on the Bounty, It's a Mad, Mad, Mad, Mad World, Khartoum போன்ற பத்தே பத்து படங்கள்தான் இந்தத் தொழில்நுட்பத்தில் இதுவரை படமாக்கப்பட்டுள்ளன.
டாரண்டினோ இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம், அடிப்படையில் அவர் ஒரு திரைப்பட ரசிகர். அவரது இளவயதில் பார்த்து ரசித்த படங்களின் பிரம்மாண்டம் அவரால் மறக்க இயலாதது. இதனால் அப்படங்களில் உபயோகப்படுத்தப்பட்ட அதே லென்ஸ்களை வைத்தேதான் இந்தப் படத்தையும் இயக்குகிறார் (நன்றாகக் கவனியுங்கள். 'அதேபோன்ற லென்ஸ்கள்' அல்ல. அதே லென்ஸ்கள்!). தனக்குப் பிடித்த படங்களில் இடம்பெறும் அம்சங்களை எடுத்துத் தனது படங்களில் அப்படியப்படியே வைப்பது டாரண்டினோவுக்குப் பிடித்தமானது (அவற்றுக்கான உரிய பணத்தையும் credits-ஐயும் கொடுத்துவிட்டுத்தான்). டாரண்டினோவுக்குள் இருக்கும் திரைரசிகன் அப்படிப்பட்டவன்.
இன்றும், பழைய கௌபாய் படங்களை ரசிக்கும் மனிதர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் டாரண்டினோவும் ஒருவர் என்பதால், அந்தப் படங்களின் 70MM பிரம்மாண்டம் தனது படத்திலும் இருக்கவேண்டும் என்று நினைத்தே இப்படிப்பட்ட முடிவை எடுத்தார். மேலும், 'திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு அனுபவம்.
வீட்டில் இருந்து திரையரங்குக்குச் சென்று இருட்டில் அமர்ந்து ஒரு மிகப் பிரம்மாண்டமான வெஸ்டர்ன் படத்தைப் பார்க்கும் அட்டகாசமான அனுபவத்தை இக்கால திரை ரசிகர்கள் அடைவதில் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதாலேயே, நான் அனுபவித்த அந்த அற்புதமான அனுபவத்தை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றே Ultra 70MMமில் இந்தப் படத்தை எடுக்க முடிவுசெய்தேன்' என்பது டாரண்டினோவின் கருத்து.
இத்தனை பெரிய ரசிகராக இருக்கும் டாரண்டினோவின் இந்தப் படத்துக்கு இசை யார்? தனக்கு மிகப்பிடித்த இசையமைப்பாளரான என்னியோ மாரிகோனியையே (Ennio Morricone) இப்படத்துக்கு அழைத்துவந்துவிட்டார் டாரண்டினோ. மாரிகோனி, உலகப்புகழ் பெற்றவர். பழைய பல வெஸ்டர்ன் படங்களில் இயக்குநர் செர்ஜியோ லியோனி - என்னியோ மாரிகோனி ஜோடி உலகப்பிரசித்தம். 'டாலர் ட்ரையாலஜி' என்று அழைக்கப்பட்ட மூன்று படங்களில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டோடு சேர்த்து உலகம் முழுக்க நினைவுகூரப்படுபவர் மாரிகோனி. அவை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான படங்கள். தற்போது 86 வயதான இந்த சிங்கம், முழுதாக 40 வருடங்கள் கழித்து ஒரு வெஸ்டர்ன் படத்துக்கு இசையமைக்கப்போகிறது.
ஐம்பதுகளின் சூப்பர்ஹிட்டான ‘ரியோ ப்ராவோ’ (Rio Bravo) படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் கிட்டத்தட்ட பெரும்பாலான படம், ஒரு மதுபான விடுதிக்குள்தான் நடக்கும். அதேபோல் 'ஹேட்ஃபுல் எய்ட்' படமும் முழுக்க முழுக்கவே இதில் வரும் விடுதிக்குள்தான் நடக்கிறது. படம் முழுக்கவும் இரண்டே லொகேஷன்கள்தான். ஒன்று – கோச்சு வண்டி. இரண்டாவது – மதுபான விடுதி. இது டாரண்டினோவுக்குப் புதிது.
இது படத்தின் மற்றொரு சிறப்பம்சம். இதைப்பற்றி, ‘Django Unchained எடுக்கையில் எனக்கு ஒரு வெஸ்டர்னை எப்படி எடுப்பது என்று தெரியாது. அப்படத்தின் மூலம்தான் நிறையக் கற்றுக்கொண்டேன். எனவே, இப்போது ஒரு வெஸ்டர்னை எப்படி எடுக்க முடியும் என்று நன்றாகத் தெரிந்ததால் ஹேட்ஃபுல் எய்ட்டை அப்படி எடுத்திருக்கிறேன்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார்.
இந்த வருட இறுதியில் வெளியாக இருக்கும் ‘த ஹேட்ஃபுல் எய்ட்' படம் உலகம் முழுதும் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன், திரைப்பட ரசிகர்களுக்கு மறக்கமுடியாத ஒரு விஷுவல் விருந்தாக அமையப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இப்படம் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் வெஸ்டர்ன்களின் பொற்காலமாக விளங்கிய அறுபதுகளின் பிரம்மாண்டம் நமது கண்களின் முன் விரியப்போவதிலும் சந்தேகங்கள் இல்லை.
அதிலும், மிகச்சிறந்த திரை ரசிகரான டாரண்டினோ இப்படத்தை எடுப்பதுதான் இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். எப்படி செர்ஜியோ லியோனியுடன் இணைந்து மறக்க முடியாத பல இசைக்கோர்ப்புகளைக் கொடுத்தாரோ, அப்படி டாரண்டினோவுடன் முதன்முறை இணையும் என்னியோ மாரிகோனி (ஏற்கனவே டாரண்டினோவின் படங்களில் மாரிகோனியின் பழைய இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும்) இப்படத்துக்கும் அவசியம் காலத்தால் அழிக்க இயலாத இசையைக் கொடுத்தே தீருவார்.
தொடர்புக்கு: [email protected]அ
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment