Saturday, July 11, 2015

RUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)

வாழ்க்கையை நிர்ணயிப்பது விதியா? நம் தேர்வுகளா? 84 நிமிடங்கள் மட்டுமே ஓடும் ‘ரன் லோலா ரன்’ படத்தைப் பார்த்து முடிக்கும்போதுஇதே கேள்வி மீண்டும் வருகிறது.
ரன் லோலா ரன் 1998ல் வெளிவந்த ஜெர்மானியப் படம். டாம் டைக்வர் இயக்கிய இத்திரைப்படம் உலக அளவில் 41 விருதுகளுக்கு அனுப்பப்பட்டு 26 விருதுகளைப் பெற்றுள்ளது.
கதை பெர்லினில் நடக்கிறது. லோலாவின் காதலன் அவசரமாய் அழைக்கிறான். 20 நிமிடத்திற்குள் தனக்கு 1,00,000 மார்க்குகள் (ஜெர்மானிய கரன்ஸி) கொண்டு வந்து தர வேண்டும். இல்லாவிட்டால் முதலாளி தன்னைச் சுட்டுக் கொன்று விடுவான் என்று கதறுகிறான்.
மன்னி லோலாவின் காதலன். சின்ன கடத்தல்காரன். திட்டப்படி பார்சலைக் கை மாற்றும் பொழுது லோலா வந்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும். லோலாவின் மொபெட் களவு போனதால் நேரத்திற்கு வர முடியவில்லை. அதனால் ரயிலில் செல்கையில் போலீஸ் சோதனை வருகையில் வண்டியில் பார்சலை வைத்து இறங்கி விட, அதை அருகிலிருந்த வறியவன் ஒருவன் எடுத்துச் செல்கிறான். பார்சல் பறி போய்விட்டது என்றால் கடத்தல் முதலாளி நம்ப மாட்டான்; கண்டிப்பாகக் கொல்வான்.
“ நீ மட்டும் நேரத்திற்கு வந்திருந்தால் எனக்கு இந்த நிலை இருந்திருக்காது. அதனால் என்ன செய்வாயோ தெரியாது, 20 நிமிடத்திற்குள் பணத்துடன் வா. நான் இந்த போன் பூத்தில் காத்திருக்கிறேன். நேரத்திற்கு வராவிட்டால் அருகில் உள்ள கடைக்குள் நுழைந்து துப்பாக்கி காட்டி கல்லாவில் கை வைத்துவிடுவேன். உடனே வா லோலா!” என்று கெடு வைக்கிறான். லோலா ஓட ஆரம்பிக்கிறாள். 20 நிமிடத்திற்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படம். மூன்று பகுதிகளாகப் படம் செல்கிறது.
முதல் பகுதியில் ஓட்டமாக ஓடி வங்கி மேலாளரான தன் தந்தையிடம் செல்கிறாள். வழி நெடுக நிறைய சம்பவங்கள். அவள் அப்பாவிற்கு இன்னொரு உறவு இருக்கிறது. அவள் அவரைச் சேர்ந்து வாழ அழைக்கிறாள். அந்த உரையாடலின் போது மகள் உள்ளே நுழைந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை. அவள் பணம் கேட்கும்போழுது மறுத்து வெளியே அனுப்புகிறார். ‘நீ எனக்குப் பிறந்தவளே இல்லை. நான் உங்களை விட்டுப் பிரிகிறேன்’ என்று கிட்டத்திட்ட கழுத்தைப் பிடித்துத்தள்ளுகிறார்.
மனமுடைந்த லோலா போன் பூத அடைவதற்கு முன் மன்னி கடைக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி பணம் பறித்து வெளியே வருவதற்குள் போலீஸ் வருகிறது. லோலா தவறுதலாக போலீஸ் குண்டிற்கு இரையாகிறாள். சாகும் தறுவாயில் அவள் காதலனுடன் பேசியதெல்லாம் நினைவுக்கு வர, அவள் சாகத் தயாராக இல்லை.
மீண்டும் முதல் காட்சியிலிருந்து துவங்குகிறது படம். லோலா மன்னியின் போன் கால் முடித்துவிட்டு ஓடுகிறாள். வழி நெடுகிலும் அதே மாந்தர்கள், அதே சவால்கள். இம்முறை சற்று தாமதமாகத் தந்தை அறைக்குள் நுழைய அவர்கள் உரையாடலை முழுமையாகக் கேட்கிறாள். அந்தப் பெண்ணின் கர்ப்பத்திற்குத் தந்தை காரணமில்லை என்றும் தெரிகிறது.
தந்தையுடன் சண்டை போட்டவள், செக்யூரிட்டியின் துப்பாக்கியைப் பிடுங்கி தந்தையைப் பணயக் கைதியாக்கி வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்கிறாள். ஓடிச்சென்று மன்னியிடம் கொடுக்கிறாள். அந்த நேரம் பார்த்து வேகமாக செல்லும் டிரக் ஒன்று மன்னியைச் சாய்த்துச் செல்கிறது. மன்னி இறக்கும் தறுவாயில் அவளை விட்டுப் போக மனமில்லாமல் இருக்கிறான்.
மீண்டும் படம் முதலிருந்து துவங்குகிறது. லோலா இம்முறை நாய்க் கடியிலிருந்து தப்புகிறாள். கார் விபத்து ஏற்படுத்தவில்லை. அனைத்துக் கதை மாந்தர்களின் சவால்களையும் சரியாக மேற்கொள்கிறாள். ஆனால் இவள் போவதற்குள் தந்தை நண்பருடன் காரில் ஏறிப்போகிறார். வேறு வழியில்லாமல் கையில் இருந்த சொற்பப் பணத்துடன் சூதாட்டத்திற்குச் செல்கிறாள். ஒரே நம்பரில் தொடர்ந்து பணம் கட்டி தொடர்ந்து ஜெயிக்கிறாள். பணத்துடன் பைத்தியமாய் ஓடுகிறாள். அதற்குள் பார்சல் எடுத்தவன் கண்ணில் பட, தவறவிட்டதை மீட்டு முதலாளியிடம் சேர்ப்பிக்கிறான் மன்னி. லோலாவைப் பார்த்து ஆசையுடன் கட்டிக்கொண்டு “பையில் என்ன?” என்று சொல்லுகையில் படம் முடிகிறது.
ஒரே சவால். ஒரே மனிதர்கள். ஆனால் காலமும் நிகழ்வுகளும் மாறுகின்றன. ஒரு வேளை மொபெட் தொலையாமல் இருந்திருந்தால் மன்னி பார்சலைத் தவறவிட்டிருக்க மாட்டான். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு “ஒரு வேளை..?” கேள்விகள் உண்டு.
லோலாவின் ஓட்டத்தில் நடந்தவை அனைத்தும் விதியா அல்லது அவள் தீர்வுகளா? ஒரு சிறு தாமதம்கூடக் கதையை மாற்றிவிடுகிறது. காரண காரியங்கள் நம் புரிதல்களுக்கும் அப்பால் நிறைய இருக்கின்றன. ஒரு பட்டாம்பூச்சியின் அசைவிற்கும் பிற கண்டத்தில் ஏற்படும் பருவ மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம் வாழ்க்கையில் எத்தனை காரணிகள்?
வாழ்வின் அத்தனை சம்பவங்களுக்கும் இப்படி முன்னே பின்னே காரணங்கள் உள்ளன. ஆனால் மனித மனதின் தேர்வுகள் எல்லாவற்றையும் விட முக்கியமானவை. லோலாவின் ஓட்டம் ஒரு தத்துவ விசாரணையை ஏற்படுத்துகிறது. அது வண்ணமாய், வசீகரமாய், அதிரடிப் படத்துக்கான எல்லா அம்சங்களுடன், வேகமாய்- லோலாவின் ஓட்டம் போல- நமக்குக் காட்சி விருந்தாய் காணகிடைக்கிறது.
ஜெர்மானியப் படத்தை ஆங்கில சப் டைட்டில்களுடன் பார்க்கும் அயர்ச்சி சுத்தமாக இல்லை. உங்கள் வாழ்க்கையின் முக்கியத் திருப்பங்களை லோலா யோசிக்க வைக்கிறாள்! இந்தப் படத்தின் திரைக்கதை ஏற்படுத்திய தாக்கம் உலகம் முழுவதும் பல படங்களில் எதிரொலித்தது. தமிழில் ஜீவா இயக்கிய ‘12 பி’, சிம்பு தேவன் இயக்கிய ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ ஆகியவற்றைக் கூறலாம்.
தொடர்புக்கு [email protected]


நன்றி - த இந்து

0 comments: