ஒரு குடும்பத்தின் பிரச்சனைகளை எடுத்துக்காட்டுவதன்மூலம் ஒரு சமுகத்தையே படம்பிடித்துக் காட்டுகிறது 'கடவுளின் பெயரில்' (In the name of God) பாகிஸ்தானிய திரைப்படம்.
சாஹிப் மன்சூர், சர்மாத் ஆகிய இருவரும் மெல்லிசைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருப்பவர்கள். லாகூரில் செழிப்பாக உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் வாழ்க்கையில் எதிர்பாரா நிகழ்வுகளும் பிரிவும் ஏற்படுகிறது. பிறகு இருவரும் எதிர்எதிர் துருவங்களில் நிற்பவர்களாக காலம் அவர்களைப் புரட்டிப் போடுகிறது.
மன்சூருக்கும் சர்மாத்துக்கும் மேரி என்று ஒரு முறைப்பெண் இருக்கிறாள். முஸ்லீம் - ஆங்கிலேய முறைப்பெண் அவள். சகோதரர்கள் இருவரும் அவள் விரும்பியபடி அவளுடைய நண்பனுக்கே மணம்முடித்து வைக்க முயற்சிக்கிறார்கள். இதற்காக லண்டனுக்குச் சென்று முயற்சியெல்லாம் எடுக்கிறார்கள். அவளுடைய நண்பன் பிரிட்டீஷ் சமூகத்தைச் சேர்ந்தவன்.
அவளது தந்தை ஒரு நாத்திகவாதியாக இருந்தும்கூட ''நீங்கள் கச்சேரி செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். என் மகளை யாருக்கு கல்யாணம் செய்துவைக்க வேண்டும் எனும் விவகாரத்தில் தலையிட வேண்டாம்... எனது மகளை ஒரு முஸ்லீமுக்குத்தான் திருமணம் செய்து வைப்பேன்'' என்று திட்டவட்டமாகக் கூறிவிடுகிறார்.
மன்சூரும், சர்மாத்தும் கச்சேரிகளில் பிரபலமடைகின்றனர். ஆனாலும் அவர்கள் பாதையில் சீக்கிரத்திலேயே ஒரு மாற்றம் ஏற்படுகிறது. ஒருவருமே ஒரு கட்டத்தில் பிரிந்து வேறுவேறு பாதைகளில் சென்று விடுகின்றனர். மூத்தவனான மன்சூர் சிகாகோவிற்கு இசையில் பட்டப்படிப்பு பயில சென்று விடுகின்றான். இளையவன் சர்மாத் ''கடவுளுக்கு எனது இசையை அர்ப்பணித்துவிடப் போகிறேன்'' என்று கூறிச் சென்று விடுகிறான்.
மன்சூர், சிகாகோவிலேயே ஒரு வெள்ளையினப் பெண்ணை சந்தித்து திருமணமும் செய்துகொள்கிறான். அப்போதுதான் 9/11 எனும் பயங்கர சம்பவம் நடக்கிறது. அதற்கும் இவனுக்கும் தொடர்பு இருப்பதாக சிகாகோ போலீஸ் ஒரு நள்ளிரவில் அவனை கைது செய்து எங்கெங்கோ அழைத்துச்சென்று பாதாள சிறையில் அடைக்கிறது.
ஓர் இளம் சமயவாதியாக மத சம்பிரதாயத்துக்குள் நுழைகிறான் சர்மாத். அவனை ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய ஆன்மிக அமைப்பு அவனுடைய இசைக்குத் தடை விதிக்கிறது. அதனால் மிகவும் மனம் உடைகிறான். என்றாலும், வேறுவழியின்றி அவனுக்கு விருப்பமான மார்க்கப் பாதையில் ஈடுபடுகிறான். மதக்கல்வி பயில்கிறான்.
உயர்ந்த மௌல்வியாவதற்கான தர வரிசையில் அவன் காத்திருக்கிறான். இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தன் முறைப்பெண் மேரியை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான்.
இப்போது அவனுடைய நிலைப்பாட்டில் நிறைய மாற்றம். ஒரு முஸ்லீம் பெண் இன்னொரு முஸ்லீம் பையனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அது. அதனாலேயே முறைப்பெண் மேரியை ஆங்கிலேய நண்பனுக்கு திருமணம் செய்துகொடுப்பதில் இவனுக்கு உடன்பாடு இல்லை.
எனவே, அவளை கட்டாயப்படுத்தி தானே திருமணம் செய்துகொள்ள ஆப்கன் மலைத் தொடர்களுக்கு அருகேயுள்ள ஒரு மறைவான கிராமத்தில் அவளை அவளின் தந்தையின் துணையோடு கடத்திச் செல்கிறான்.
மத அடிப்படைவாதிகளின் துணையோடு அவளைத் திருமணமும் செய்துகொள்கிறான். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை?
சிகாகோ ஜெயிலில் இருக்கும் மன்சூரை அமெரிக்க போலீஸ் கடுமையான சித்தரவதைக்குள்ளாக்கும் காட்சிகள் நம் சிந்தையை கதி கலங்கச் செய்கின்றன. தான் குற்றவாளியல்ல என்பதை நிரூபிக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறான் மன்சூர்.
அங்கிருந்து எப்படி மன்சூர் வந்து தன் முறைப்பெண்ணுக்கு அவள் விரும்பும் இஸ்லாமியரல்லாத மாப்பிள்ளைக்கே மணம்முடிக்கப் போராடுகிறான் என்பதை பார்வையாளர்களை 3 மணிநேர அளவுக்கு நுனி இருக்கையில் அமரவைத்து அசையவிடாமல் சொல்லிமுடிக்கிறது இப்படம்.
மன்சூராக நடித்துள்ள ஷானின் அற்புத நடிப்பும், சார்மத்தாக நடித்துள்ள பவாத்கனின் திறமையான வெளிப்பாடும், இருவரின் தாய்மாமனாக வரும் இமான் அலியின் கண்டிப்புமிக்க ஒரு தந்தையின் கறாரான பிடிவாதம் மிக்க நடிப்பும், பழமையின் கட்டுக்கோப்பு குறித்துப் பேசும் மௌல்வியாக நடித்த ரஷீத் நாஸின் நடிப்பும் எவ்வளவு சிறந்ததோ அவற்றையெல்லாம் ஒரு புள்ளியேனும் கடந்துவிடக்கூடியது மிகச் சிறந்த நடிப்புக்குச் சொந்தக்காரரான மேரியாக நடிப்பு.
கட்டாயத் திருமணம் செய்துகொண்ட பிறகும் அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்கிறாள் மேரி.
அப்போது, ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள நதியொன்றின் இருபக்கமும் இருக்கும் மலைகளை அந்தரத்தில் இணைக்கும் கேபிள் கார் வாகனத்தில் தப்பிக்க போராடுவதில் அவரின் நடிப்பில் வலியின் பிரதிபலிப்பு!
இத்திரைப்படத்தின் இறுதியில் நீதிமன்றக் காட்சி இடம்பெறுகிறது. நீதிமன்றத்துக்கு மூத்த மௌல்வி ஒருவர் வரவழைக்கப்படுகிறார். இஸ்லாமியப் பெண் ஒரு பிரிட்டிஷ் இளைஞனை திருமணம் செய்துகொள்ளலாமா கூடாதா? அதற்கு குரான் என்ன சொல்கிறது என்று நீதிமன்ற சாட்சிக்கூண்டில் நின்று மேரிக்கு வக்காலத்து வாங்கும் இடத்தில் நவீன சமுதாயத்துக்கான உயர்ந்த நோக்கம் நிறைவேற்றப்படுகிறது.
முதிர்ந்த மௌல்வியாக வருபவர் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் முக்கியமானவரான நஸ்ரூதீன் ஷா. அவர் தனது பண்பட்ட நடிப்பால் இப்படத்தை மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்று விடுகிறார். இப்படம் முழுக்க வெவ்வேறு காட்சிகளில் பேசப்பட்ட மத தீவிரவாதம், இஸ்லாத்தில் பெண்கள் நிலை, இசை குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு, கலாச்சார சூழல் ஆகியவற்றுக்கு குரான் என்ன சொல்கிறது என்று நஸ்ருதீன் ஷா கோர்ட்டில் வரிக்கு வரி படித்துக் காட்டுகிறார்.
இறுதியில் மதம் அன்புவழியில்தான் மனிதனை வழிநடத்துகிறது என்று கூறுகிறார். இதன்மூலம் மேரிக்கு விருப்பமானவனையே மணம்முடிக்க அவர் காரணமாகிறார்.
படத்தின் இறுதியில் சரியாக 30 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் இக்காட்சி ஓவர் டோஸ். ஆனாலும் அது ஒரு அவசியமான விவாதம். பெண்கள் சுடிதார் அணிவதை வரவேற்கிறார். புனிதம் என்று கட்டமைக்கப்பட்ட மதச் சின்னங்களை மக்கள் மீது (முகத்தையும் மூடிக்கொள்ளும் பர்க்கா உட்பட) திணித்து அவர்களை கட்டாயப்படுத்தியதைக் கண்டிக்கிறார். மேலும் வறட்டுத்தனமான கொள்கையை விடாமல் பிடித்திருக்கும் மதவாதிகளை தோலுரிக்கிறார்.
இத்திரைப்படத்தின் வாயிலாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முடிவெடுக்கும் அரைவேக்காட்டு அவசரக்காரர்களை கண்டிக்கிறார். அதேவேளை மதத் தீவிரவாதத்தை அவர் கடுமையாக விமர்சிக்கத் தயங்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இப்படத்தில் கவார் சமீத் இசையமைத்துள்ள 'பந்தயா' என்ற பாடலும், 'அல்லாஹூ' என்ற பாடலும் கேட்கும்படியாக உள்ளன. அதே நேரத்தில் இப்படம் முழுவதும் வரும் பின்னணி இசையே ஆர்ப்பாட்டமாக உள்ளது. பலநேரத்தில் தியேட்டரைவிட்டு கொஞ்சம் வெளியே போய்வரலாம் என்றும் தோன்றிவிடுகிறது.
எந்த நாட்டில் மதப் பரிபாலன சரத்துக்களே அந்த இறையாண்மைச் சட்டங்களாக உள்ளனவோ, அந்த நாட்டில் இருந்துகொண்டுதான் அந்த நாட்டின் அசைக்க முடியாத ஆணி வேராகத் திகழும் மதக் குழுக்களின் அடிப்படைவாதத்தை கதைக்கருவாக எடுத்து விமர்சித்துள்ளார் ஷாயீப் மன்சூர் எனும் உருது சினிமா இயக்குனர்.
அதே நேரத்தில் முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டிருக்கும் மனோபாவத்திற்கும் சம்மட்டியடி கொடுக்கிறார்.
2008ல் இத்தாலியில் நடந்த உலகத் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குநருக்கான 'இத்தாலிய விருதை' இப்படம் வென்றது.
வெளிப்படையாக விமர்சனம் செய்ததால், தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று இயக்குநர் ஷயீப் மன்சூர் 2007 ஏப்ரலில் படத்தை பாகிஸ்தானில் திரையிட்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். .
ஆயினும், ரசாபாசமில்லாத பொழுதுபோக்கும், யார் மனமும் புண்படாமல் சொல்லப்பட்ட சமூகத்திற்கு மருந்திடும் கருத்துக்களும், விறுவிறுப்பான திரைக்கதையும் இப்படத்தை பாகிஸ்தான் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறச் செய்தது.
நன்றி -த இந்து
0 comments:
Post a Comment