Friday, July 24, 2015

முல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு!

'னிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்ற சங்கப் புலவனும், மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்ற இளங்கோவும், வான் சிறப்பை தொகுத்த வள்ளுவனும் வாழ்ந்த தமிழ்நாட்டில்தான், விதவிதமான பெயர்களில் குடி தண்ணீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. தண்ணீரை புகழ்ந்தவன்தான், தண்ணீருக்காகப் போராடிய வரலாற்றுக்கும் சொந்தக்காரன். 

தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் வருமென்று உலக அறிஞர்கள் சொல்லும் வேளையில், அந்தப் போருக்கான வழிகாட்டு மாதிரியாக முல்லை பெரியாறு போராட்டம் இருக்கும்.
எதிர்காலத்தில் போராட வேண்டியதற்காவது கடந்த கால முல்லை பெரியாறின் போராட்ட வரலாற்றைக் காண்போம்...

வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண்மை சமூகமாக மாறிய கலாசாரத்தோடு முதலாளித்துவ சிந்தனையும் வளர, நாடு பிடிக்கும் ஆசையில் நம்மை பிடித்த ஆங்கிலேயனுக்கே சவால் விட்டது இயற்கை. தென் தமிழகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான். 'ஆடைக்கும் கோடைக்கும் வாடாத பனை மரங்களே' அசந்துவிட்டன. அப்பகுதி  மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் வருடத்துக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதுவும் நிலையில்லாதது. தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கைக்கும், ராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறுகள் நடந்து மக்களை மேலும் சோதித்தது. 

அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர்  சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது. மேற்கே உருவாகி வீணாக கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும் என நினைத்த ராமநாதபுர அரசன், தனது அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி விவரம் அறிந்துவரச் சொன்னான்.

அதுவரை மனித காலடிகளே படாத, சூரிய கதிர்களே உட்புக முடியாத, மிகப்பெரிய ராணுவம்போல அணிவகுத்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணாத் துயரத்துக்கும் விஷக்கடிகளுக்கும் இடையே,  அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடினார். அவற்றை தன் கற்பனை திறனுக்குள் கொண்டுவந்து கட்டுமானத்துக்கான சாத்தியங்களை வழிவகுத்தார்.
 
அந்த மகிழ்ச்சியோடு மன்னனிடம் வந்தார். அங்கேதான் விதி விளையாடியது. ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது. அவருடைய  உழைப்பும் வீணானது. அதற்கடுத்த வருடங்களில் மீண்டெழுந்த தாது வருடப் பஞ்சமும் மக்களை மேலும் இம்சித்தது. இன்றைய எத்தியோப்பியாவானது அன்றைய தமிழகம்.
மதராஸ் மாகாணத்தை முழு கட்டுப்பாட்டில்  கொண்டுவந்திருந்த நிலையில், அப்பகுதிக்கு உட்பட்ட மக்களின் வறுமையால் அதிகமான வரியை வசூலிக்க முடியாத ஆங்கிலேய அதிகாரிகள், மக்கள் பஞ்சத்தைப் போக்க உதவும் வகையில் வேளாண்மைத் திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அதன் மூலம் வரி வசூல் செய்தல் என்ற யுக்தியைக் கொண்டுவந்தனர். 

அவர்களுடைய திட்டமும் மேற்கில் பாயும் ஆறினை வைகையோடு இணைப்பதுதான். இந்தத் திட்டம் குறித்து எத்தனையோ பொறியாளர்கள் தங்கள் அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்து வந்தனர். இடைக்காலங்களில் உண்டான பட்டினி சாவுகளால் மக்கள் அங்கிருந்து இடம்பெயரவும் தொடங்கினர். 

1860-களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒப்புதலோடு, மேஜர் பெய்ன் மற்றும் மேஜர் ரைவ்ஸ் ஆகியோர் அப்பகுதியினை பார்வையிட்டு, அணைப்பகுதிக்காக வடிவமைப்பு மாதிரிகளைக் கொண்டுவந்தனர். மேஜர் ரைவ்ஸ் என்பவர்தான் அணைக் கட்டுமானம் குறித்த ஒரு அறிக்கையும், கட்டுமானத்துக்கான செலவாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் சமர்ப்பித்தார்.
இன்றைய தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் சிவகிரி மலைப்பகுதியில் உருவாகும் பெரியாறு, மேற்கு மலை தொடர்ச்சிகளைத் தழுவி, கேரளாவின் மலைப்பகுதியில் உருவாகும் முல்லை ஆற்றுடன் முல்லைக்கொடி என்னும் இடத்தில் சங்கமித்து, முல்லை பெரியாறு ஆகிறது. மலைகளின் பாதைகளில் ஓடி,  மேற்கு நோக்கி அரபிக்கடலில் கலக்கும் பாதையில் ஒரு குறுகிய இடத்தினை மறைத்து கட்டப்பட்டுள்ளதுதான் முல்லை பெரியாறு அணை. 

ரைவ்ஸ் கொடுத்த திட்ட அறிக்கையை வைத்துக் கொண்டு,  இன்னும் செலவுகளைக் குறைக்கும் முறைகள் குறித்து கவனமாகக் கையாண்டு வந்தார் ஒரு ராணுவப் பொறியாளர். அவரோடு சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவும் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு மேற்கண்ட இடத்தில் அணையினை எழுப்ப தீர்மானித்து நடவடிக்கையில் இறங்கியது. 

சொர்க்கத்தில் ஓடிக்கொண்டிருப்பதாக கருதப்பட்ட கங்கை நதியை பூமிக்குக் கொண்டுவர தவமிருந்தான் பகீரதன். 

தன்னுடைய வேகத்தை பூமி தாங்காது என கங்கை சொல்ல, சிவபெருமானை நோக்கி தவம் இருந்து அவர் தலையிலேயே கங்கையை விழவைத்து, வேகத்தடையை உண்டாக்கி, அங்கிருந்து பூமிக்கும் கொண்டுவந்தான் பகீரதன். ஆதலால் கங்கைக்கு 'பகீரதி' என்ற பெயரும் உண்டு. இது இதிகாச புராணம். 

உண்மையிலேயே ஒரு பகீரதன் முல்லை பெரியாறிலும் இருந்தார். மேற்சொன்ன ராணுவப் பொறியாளர் தான் அவர்!
- வரலாறு தொடரும்...
- உ.சிவராமன்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

நன்றி -விகடன்

0 comments: