மலையாளத்தில் உருவான 'த்ரிஷ்யம்' தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஹிட்டடித்து, தற்போது தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ரிலீஸ் ஆகியிருக்கிறது.
ஹிட் படத்தின் ரீமேக், கமல் நடிப்பு என்ற இந்த காரணங்களே பாபநாசம் படத்தைப் பார்க்க வைத்தன.
சரி, படம் எப்படி?
மிக நீண்ட நன்றி கார்டுகளுக்குப் பிறகு படம் தொடங்குகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் கமல் டிவியில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும்போது ரசிகர்கள் அமைதி காத்தனர். விசில், கிளாப்ஸ் எதுவும் இல்லாமல் தியேட்டர் முழுக்க நிசப்தம் நிலவியது.
ஜெயமோகன் வசனங்களுக்கு சிரிப்பு சத்தம் அதிகம் கேட்டுக்கொண்டே இருந்தது.
கதை: டிவிக்கு கேபிள் இணைப்பு தரும் சுயம்புலிங்கத்துக்கு இரண்டு மகள்கள். மனைவி, மகள்களுடன் மிக சிக்கனமாக நேர்மையுடன் உண்மையுடன் வாழ்கிறார். மூத்த மகள் கல்விச் சுற்றுலா செல்லும்போது, அங்கு செல்போன் கேமராவில் படம் பிடிக்க முயற்சிக்கும் இளைஞனை கோபிக்கிறார். அதற்குப் பிறகு அந்த இளைஞன் கமல் மகளைப் பின் தொடர்கிறார். அதனால் எதிர்பாராத விபரீதம் நிகழ்கிறது. சுயம்புலிங்கம் குடும்பமே அந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறது. ஒரு சாமானிய குடும்பத்தினர் மிகப் பெரிய சிக்கல்களை எதிர்கொண்ட விதமே பாபநாசம்.
ஒரு படம் ஐந்து மொழிகளில் (இந்தியிலும் த்ரிஷ்யம் ரீமேக் ஆகிறது) ரீமேக் ஆகிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. அந்த அளவுக்கு கதைத் தன்மையும், திரைக்கதையும் அழுத்தமாக இருப்பதே காரணம். மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் தாண்டி, எந்தக் களத்திலும் பொருந்தக்கூடிய தன்மை நிறைந்திருப்பது மிக முக்கிய காரணம்.
'த்ரிஷ்யம்' படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழில் 'பாபநாசம்' என்று மறு ஆக்கம் செய்ததால்தான் என்னவோ, அசல் தன்மை எந்த இடத்திலும் மிஸ் ஆகாமல் ஜீவனோடு இருக்கிறது.
தமிழில் இப்படி ஒரு படத்தை மறு ஆக்கம் செய்ததற்காக ஜீத்து ஜோசப்பை வாழ்த்தலாம்.
கதை, திரைக்கதையில் எந்த மாற்றமும் செய்யாமல், கதாபாத்திரத்தில் நாயக பிம்பத்தை திணிக்காமல் இயல்பான நடுத்தர குடும்பத் தலைவன் சுயம்புலிங்கமாக நடித்ததற்காக, கமல்ஹாசனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆரம்பக் காட்சிகளில் கமலை புத்திசாலியாக காட்டவே இல்லை. கொஞ்சம் படிப்பு வாசனை இல்லாத சாமானிய மனிதர் என்றே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
கமல் சயின்ஸ் பாடத்துல கணக்கு வராதா? என அப்பாவியாகக் கேட்பது, ரொமான்ஸ் நேரத்திலும் கார் கேட்கும் மனைவியிடம், அதுக்கு வேற ஆளைப் பாரு என வம்பு செய்வது, செகண்ட் ஹேண்ட் கார் வாங்கித் தரேன் என சமாதானம் செய்வது, சிக்கனத்தைக் கடைபிடிப்பது, எதற்காகவும் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது என சாமானியனுக்கான அடையாளத்தோடு பொறுப்புள்ள அப்பாவாக நம் கண் முன் நிற்கிறார்.
போலீஸ் விசாரணையில் என்ன நடக்கும் என்பதை குடும்பத்தினரிடம் சொல்லிக் காட்டும்போதும், காயங்களோடு சின்ன மகளைப் பார்த்து பார்வையாலேயே செய்தியைச் சொல்ல வருவதுமாக அசத்துகிறார் நடிகர் கமல்.
தன் வீட்டு முன் ஊரும், போலீஸும் குழுமிக் கிடக்க, எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று போலீஸ் கைவிரிக்கும் சமயத்தில் கமல் காட்டும் ரியாக்ஷன்... சான்ஸே இல்ல!
ரீ என்ட்ரி ஆகியிருக்கும் கௌதமி இரு மகள்களின் அம்மாவாக இயல்பாக எந்த உறுத்தலும், நெருடலும் இல்லாமல் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். பரபரப்பும் படபடப்புமாக மகள்கள் குறித்து கவலைப்படும்போது மனதில் நிற்கிறார்.
கமலின் மகள்களாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், பேபி எஸ்தர் ஆகிய இருவரும் பொருத்தமான தேர்வு. அழுகை, பதற்றம், பயம் என்று கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் நிவேதா. பேபி எஸ்தர் மிக முக்கியமான கதாபாத்திரம். எந்தக் குறையும் இல்லாமல் நடிப்பில் மின்னியிருக்கிறார்.
ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆஷா சரத்தும், அவரது கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவனும் இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார்கள்.
பொறுப்பான அதிகாரியாக ஆதாரம் தேடும் போதும், மகனுக்காக தவிக்கும்போதும் ஆஷா சரத் அட போட வைக்கிறார். எஸ்.ஐ அருள்தாஸ், கான்ஸ்டபிள் கலாபவன் மணி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், பசங்க ஸ்ரீராம் ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்களும் இதம். சுஜித் வாசுதேவின் கேமரா இயற்கை அழகையும், பசுமையையும் அள்ளிக் காட்டுகிறது.
போலீஸ் விசாரணை, கமல் சொல்லும் பதில்கள், கிளைமாக்ஸ் என்று எல்லா இடங்களிலும் கை தட்டல்கள் அதிகம் கிடைத்தன. சமீபத்தில் வெளியான படங்களில் இடைவேளைக்குப் பிறகு அதிக கிளாப்ஸ் 'பாபநாசம்' படத்துக்குதான் கிடைத்திருக்கும் போல.
கமலை நெல்லை வட்டார வழக்கில் பேச வைத்திருக்கிறார் சுகா. அது எந்த விதத்திலும் குறையாகத் தோன்றவில்லை. மூன்று மணி நேரப் படம்தான் என்றாலும், அசலைப் போலவே அப்படியே சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் பரபரப்பு அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறது 'பாபநாசம்'.
குடும்பப் பின்னணியில் டிராமா த்ரில்லரை இவ்வளவு நேர்த்தியாக, இயல்பாக காட்சியப்படுத்தியதை ரசிகர்கள் வரவேற்றனர். படம் முடிந்து வெளியே வந்ததும் சூப்பர், எக்ஸ்ட்ரா ஆர்டினரி, எக்ஸலண்ட் வீடியோ பைட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கமல் இந்த மாதிரி நடிச்சா போதும். பார்த்துக்கிட்டே இருக்கலாம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இதை யாராவது கமலுக்கு கொண்டு போய் சேர்க்கக் கடவது!
நன்றி -த இந்து
உதிரன்
0 comments:
Post a Comment