தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மாவாக வலம் வந்துகொண்டிருந்த சரண்யா பொன்வண்ணன் எங்கே போனார் என்று தேடிக்கொண்டிருந்த இடைவெளியில் நகைச்சுவை கொப்புளிக்கும் அம்மாவாக அதிரடி கிளப்பிவருகிறார் ஊர்வசி. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரியான உற்சாகத்துடன் வலம் வரும் ரகசியம் என்ன?
குடும்பமும் எனக்கு அமைந்த சூழ்நிலையும் முக்கியக் காரணம். எனது கணவர் சிவப்பிரசாத் தரும் ஊக்குவிப்பு இதில் முக்கியமானது. அவருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். குழந்தை பிறந்த பிறகு நடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். என் மகனுக்கு ஒரு வயது ஆகிறது.
இஷான் பிரஜாபதி என்று சிவபெருமானின் பெயரை வைத்திருக்கிறோம். நீலகண்டன் என்று அழைத்து அவனைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறோம். அவனை விட்டுவிட்டுப் படப்பிடிப்புகளுக்குச் செல்ல நான் விருப்பமில்லை. மகனையும் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் செல்லக் கணவர் அனுமதித்தார். அதன் பிறகு தொடர்ந்து நடித்துவருகிறேன்.
சமீபத்தில் உங்களை ஆச்சரியப்படுத்திய பாராட்டு எது?
உத்தம வில்லன் படத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகரின் மனைவியாக நடித்தேன். அந்தப் படத்திற்காகப் பாராட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேர்மாறாக போகுமிடமெல்லாம் “நீங்க வசந்தோட அம்மாவா கலக்கீட்டிங்க. உங்களாலதான் இதுமாதிரி கேரக்டர்ஸ் பண்ண முடியும்” என்று ஓடிவந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள். அப்போதுதான் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் எனது கதாபாத்திரத்தின் வீச்சை உணர்ந்துகொண்டேன்.
அந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அதில் வந்த அம்மா கதாபாத்திரம் எனக்குச் சட்டென்று பிடித்துப்போனது. காரணம் அம்மாக்கள் எல்லோருமே பிள்ளைகளுக்காகவே தங்களை அறிவாளிகளாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவர்கள். பொதுவாக சினிமாவில் வரும் அம்மா கதாபாத்திரம் என்பது மகனின் காதலுக்கு ஆதரவு கொடுக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் அப்படியே தலைகீழ். மகனின் அறிவியல் மூளைக்கு ஈடுகொடுக்கும் அந்தத் தாய் அவனுக்கு இணையாக அறிவியல் வார்த்தைகளையும் விஷயங்களையும் பேசியபோது, “அட! இந்த மாதிரி அம்மாக்கள் எவ்வளவு பேரை நாம பார்க்கிறோம்” என்று எனது கதாபாத்திரத்தை நெருக்கமாக உணர்ந்ததால் கிடைத்த வெற்றி இது.
முந்தானை முடிச்சு படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அந்தப் படத்தில் நான் ஏற்ற பரிமளம் கதாபாத்திரம்தான் சினிமாவில் எனது பாதையைத் தீர்மானித்தது. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் தியாகம் என்று வயதுக்கு மீறிய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கதாபாத்திரம் அது. என்ன வேடம் கொடுத்தாலும் இவர் தாங்குவார் என்ற பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதுவே ‘ஒருகை ஓசை’ படத்தில் வந்த சோகமான அஸ்வினியாக நான் முதலில் அறிமுகமாகியிருந்தால், முந்தானை முடிச்சு மாதிரி படம் பண்ண எனக்குப் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். ரசிகர்கள் நம்மை கதாபாத்திரங்களாகவே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நான் கிராமப் பகுதிகளுக்கு படப்பிடிப்புக்குச் சென்றால் “பச்சக் குழந்தையைப் போட்டு இப்படித் தாண்டிட்டியேம்மா...!? அந்தக் குழந்தை இப்போ நல்லா இருக்கா? ” என்று 30 வருடங்களுக்குப் பிறகு கேட்டவர்களும் உண்டு.
நீங்கள் ஏற்கும் அம்மா கதாபாத்திரங்கள் மீது நகைச்சுவையின் நிழல் படிந்துவிடுவதற்கு என்ன காரணம்?
நான் மட்டுமே காரணம். ஒரு பெண் நடிகர் நிஜ வாழ்க்கையில் தாயாக மாறிய பிறகு அவளுக்கு சினிமாவில் கிடைக்கும் அதிகபட்ச புரமோஷன் அம்மா கேரக்டர்கள்தான். அக்கா அண்ணி எல்லாம் நடுவில் வரலாம். ஆனால் நிரந்தரமான இடம் என்பது அம்மாதான். அந்த அம்மாவுக்கான பாவம் என்ன என்பதை நமது கலாச்சாரம் ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருக்கிறது. புருஷனுக்காக அழணும், குழந்தைகளுக்காக உழைக்கணும்.
அவ்வளவுதான். இதிலிருந்து மாறுபடுவதற்கு ஒரே வழி அம்மா கதாபாத்திரத்தில் நகைச்சுவையை இழையோடச் செய்வதுதான் என்று நினைத்தேன். இளம் கதாநாயகியாக நடித்துவந்த காலத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மிகவும் சங்கடப்பட்டேன். அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக கொஞ்சம் நகைச்சுவையைக் கலக்க ஆரம்பித்தேன். அதுவே எனக்கு முத்திரையாகிவிட்டது. அதையே அம்மா கதாபாத்திரங்களுக்கும் இடம்மாற்றினேன்.
இன்றைய அம்மாக்கள் கணவன், குழந்தைகளால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக சிரிப்பதையே மறந்துகொண்டு வருகிறார்கள். எனது கதாபாத்திரங்களாவது சிரிப்பை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கட்டும் என்றுதான் நான் நகைச்சுவையை விட மறுக்கிறேன்.
25 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்த பல ஆண் நடிகர்களுக்குப் பாராட்டு விழா நடத்தும்போது உங்களைப் போன்ற பெண் நடிகர்களின் சாதனைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்று நினைத்திருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. ஏனென்றால் சினிமா தொடங்கியது முதலே ஆண்களின் கையிலிருக்கும் ஒரு கலை. அதில் பெண் என்பவளுக்கு எப்போதுமே இரண்டாவது இடம்தான். சினிமாவில் ஆண்களின் உழைப்பில் பெண்கள் பங்கேற்றுக்கொள்கிறார்கள் அவ்வளவுதான். அதேபோல ஆண்களுடைய விழாக்கள் நடத்தும்போதும் அங்கே அலங்கரிப்புக்காக நிற்கிறவர்கள் பெண்கள். இந்தப் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்களது சாதனைகள் நினைத்துப் பார்க்கப்படும்.
உங்களை பாதித்த கதாநாயகிகள் என்று யாரைச் சொல்வீர்கள்?
என்னை யாரும் பாதிக்கவில்லை. ஆனால் பலரை மனதார ரசித்திருக்கிறேன். அந்த வரிசையில் சாவித்ரி அம்மாதான் எனக்கு மிகவும் பிடித்தவர். மனோரமா ஆச்சி. சுகுமாரி, ராதிகாவை ஆல்ரவுண்டர் என்ற வகையில் மிகவும் பிடிக்கும், அதேபோல் சரிதா, ஸ்ரீதேவி. பானுப்ரியா, ரேவதி ஆகியோரை தனித்து முத்திரை பதித்தவர்கள் என்பேன்.
உங்கள் முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனும் நீங்களும் தற்போது நண்பர்களாக இருக்கிறீர்களா?
கிடையவே கிடையாது. கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்த பின்னர் ஒரு கட்டத்துக்குப் பிறகு முன்னாள் கணவனும் மனைவியும் இன்னாள் நண்பர்கள் ஆகிவிடுவது யதார்த்தமானது. ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை. என்னை எதிரியாக நினைத்துதான் பிரிய முடிவுசெய்தார். எனக்கு மனதளவில் பெரும் பாதிப்பு உண்டாக்கிய பிறகே என்னைப் பிரிந்தார்.
என் மகளின் நலனுக்காக அவர் மாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். படப்பிடிப்புக்காக கேரளா செல்லும்போதெல்லாம் என் மகளுடன் தங்குவேன். தினசரி அவளுடன் போனில் பேசாவிட்டால் எனக்கு அந்த நாள் ஓடாது.
சமீபத்தில் உங்களைப் பற்றி வந்த சர்ச்சையான செய்தி மற்றும் வீடியோ பற்றி எதுவும் கூற விரும்புகிறீர்களா?
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இரவுபகலாக நடந்த படப்பிடிப்பிலிருந்து அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு ஓடோடி வந்தேன். கொடுத்த தலைப்பில் சரியாகப் பேசினேன். அந்த நேர்மைக்குக்கூட இன்று மதிப்பில்லை. இதைத் தவிர இப்போதைக்கு நான் எதையும் கூற விரும்பவில்லை.
யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க விரும்பும் எவரும் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் அழுக்குகளை முதலில் களைந்துவிட்டு வரட்டும். இது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் பொருந்தும்.
thanx - the hindu
0 comments:
Post a Comment