ஒரு இயக்குநருக்கு, என்ன தேவையோ, அது கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதியாகிவிடும். வலிந்து பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்று முயற்சித்தால் தப்பாகத் தெரியும். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அது படத்தில் இருக்கும் என்று வார்த்தைகளில் நம்பிக்கையை உரித்தார் விஜய் நடித்துவரும் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருந்தவருடன் உரையாடியதிலிருந்து…
‘புலி' படத்தின் தொடக்கம் எப்படி அமைந்தது?
‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் வெளியான சமயத்தில் விஜயைச் சந்தித்து இக்கதையைக் கூறினேன். கதையைக் கேட்ட உடனே பிடித்திருக்கிறது, உடனே தொடங்கலாம் என்றார்.
படத்தின் நாயகன் விஜயைத் தவிர ஸ்ரீ தேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, சத்யன், பிரபு, விஜயகுமார் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதே போல படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்பாகக் கற்பனை எப்படிக் காட்சியாக வர வேண்டும் என்பதை வடிவமைத்துவிட்டேன். இதுபோன்ற படங்களில் இயக்குநருக்குப் போதிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். எனது கற்பனையை சரியாகத் திரையில் கொண்டுவருவதற்கு அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்களின் படப்பிடிப்புக்குக் காலவரையின்றி அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நான் அனைத்தையுமே சரியாக முன்பே திட்டமிட்டுவிட்டதால், தொடர் படப்பிடிப்பு மூலமாகக் குறைவான நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம்.
‘புலி' படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் வரலாறுப் படம்போல் தெரிகிறதே?
இப்படத்தை ஒரு ஃபாண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் என்று கூறுவேன். போரும் காதலும் கலந்த கதை. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் வகையில்தான் இப்படத்தின் கதையை நான் வடிவமைத்திருக்கிறேன். இக்கதை ஒரு கற்பனைதான். எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமலும், புதிதான ஒரு உலகம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது உறுதி. இது ஒரு புதுமையான களம், அதில் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக உங்களின் திட்டமிடல் என்ன?
இப்படத்தை இடைவெளியின்றி முடித்திருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக, ‘புலி' படத்திற்கான கிராஃஃபிக்ஸ் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இப்படத்தின் கதைக்களத்தைக் காட்டுவதற்கு கலை இயக்குநர் முத்துராஜ், ‘மகதீரா', ‘நான் ஈ' உள்பட பல படங்களில் பணியாற்றிய கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரது பணிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
செட் தவிர காடு, மலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. அதற்காக கேரளம், ஆந்திரம், தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.
2014 நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால், அதற்கு முன்பே ஒவ்வொரு காட்சியும் எப்படி வர வேண்டும் முன்னதாகத் தீர்மானித்துவிட்டதால், படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றவுடன் மிகவும் எளிதாக வேலை நடந்தது.
முதல் முறையாக விஜயுடன் பணியாற்றிய அனுபவம்..
முதல் முறையாக ஒரு முன்னணி நாயகன், ஒரே படத்தில் நிறைய நடிகர், நடிகைகள் என்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது பொறுப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் விஜயும் தனது கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து செயல்பட்டார்.
சண்டைக் காட்சிகள், உடைகள் என இப்படத்தில் விஜய் நிறைய காட்சிகளுக்கு அதிக உழைப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக வாள் சண்டை கற்றுக்கொண்டார். காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியபோது மாலை படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து ஊருக்குள் சென்று தங்கி, திரும்பி வர தாமதமாகும் என்பதால் பக்கத்து கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கினோம். விஜய் சாருக்கு தனியாக ரூம் போடப்பட்டது. ஆனால், வேண்டாம் என்று மறுத்து அவரும் எங்களுடனேயே 40 நாட்கள் தங்கிவிட்டார். பெரிய நடிகர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். கதையைக் கேட்டவுடன் என்ன சொன்னார்?
இக்கதையை நான் எழுதும்போதே, அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். மும்பையில் போய் கதை கூறும்போது, மிகவும் தயக்கத்துடன்தான் கதையைக் கேட்க ஆரம்பித்தார். கதையைக் கேட்ட உடனே ‘ரொம்ப நல்லாயிருக்கு, கண்டிப்பாக பண்ணுகிறேன்’ என்று தெரிவித்தார்.
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் வந்தன, இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஸ்ரீ தேவி என்னிடம் கூறினார். ஸ்ரீ தேவியைத் தமிழ்த் திரையில் எதிர்பார்க்கும் அனைவருக்குமே இப்படம் உற்சாகம் தரும்.
‘புலி' படத்தின் புகைப்படங்கள், வீடியோ முன்னோட்டம் என அறிவித்த நாளுக்கு முன்பே இணையத்தில் வெளியானது பரபரப்பைக் கிளப்பியதே?
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நமக்கு எப்படி நண்மையாக அமைகிறதோ அதேபோலப் பல பின்னடைவுகளுக்கும் வழிகோலுகிறது. அப்படித்தான் இதுபோன்ற நிகழ்வுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போதுகூட இது தொடர்பான விஷயங்களில் மேலும் கவனமாக இருக்க வேண்டும் என நிறைய மாற்றங்களைப் படக் குழுவில் கொண்டுவந்திருக்கிறோம். இனிமேல் இது தொடர்பாக எதுவும் நடக்காது, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகிலும் நடக்காது.
நன்றி -த இந்து
0 comments:
Post a Comment