Thursday, July 09, 2015

என் கணவரின் கனவுக் கன்னி!-கிருஷ்ணா

ட்கார்ந்து, உட்கார்ந்து காலெல்லாம் வலிக்குது. கடை வீதி வரைக்கும் ஒரு நடை போயிட்டு வந்துடறேன், பானு!’’
என் கணவர் இப்படிச் சொன்னதும், கேலிச் சிரிப்புடன் மறுப்பாகத் தலை அசைத்தேன். ‘‘உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? சிகரெட் பிடிக்க ஏதுடா வழின்னு பார்க்கறீங்க. அதெல் லாம் எங்கேயும் நகரக் கூடாது!’’
இவரின் மாமா பேத்தி திருமணத்துக் காக வந்திருக்கிறோம். இன்று மாப்பிள்ளை அழைப்பு. சத்திரத்தில் சுமாரான கூட்டம். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தனர். அதுவே கிட்டத்தட்ட எண்பது பேர் தேறும்.
பிளாஸ்டிக் நாற்காலி யில் அமர்ந்திருந்த என்னவர், தன் அருகில் இருந்த இருக்கையில் என்னையும் அமரச் சொன்னார்.
‘‘அது சரி, என்னவோ சொன்னியே, என்னைப் பத்தித் தெரியாதான்னு... என்னைப் பத்தி அப்படி என்ன தெரியும் உனக்கு?’’
‘‘எல்லாம் தெரியும். உங்களோடு இருபத்தஞ்சு வருஷமாய்க் குப்பை கொட்டறேனே, உங்களைப் பத்தி எனக்குத் தெரியாததுன்னு ஏதாவது இருக்கா என்ன?’’
குறும்புச் சிரிப்புடன் என்னை நோக் கினார். ‘‘சரி, அப்படின்னா ஒரு பந்தயம்!’’
‘‘என்ன, சொல்லுங்க?’’
‘‘இளமைப் பருவத்திலே, கல்யாண வயசிலே எல்லா ஆண்களுக்குமே மனசுக் குள்ளே ஒரு சித்திரம் இருக்கும்தானே... தனக்கு வரப்போகும் மனைவி இப்படித் தான் இருக்கணும்னு...”
‘‘சரி, அதுக்கென்ன இப்போ?’’
‘‘எனக்கும் அப்படி ஒரு சித்திரம் இருந்தது. அந்த வயசிலே என் மனசுல இருந்த அந்தக் கற்பனைப் பெண்ணை, ஒரு நாள் நேரிலேயே பார்த்ததும் அசந்துட்டேன். அவளும் இப்ப இந்தக் கல்யாணத்துக்கு வந்திருக்கா. யாருன்னு கண்டுபிடி, பார்ப்போம்!’’
என் மனசுக்குள் ஏதோ ஒரு புகை குபுகுபு வெனப் பரவியது. எத்தனை வயதானால் என்ன, பெண் மனசு மாறாதுதானே? உள்ளே கனன்ற பொறாமையை அடக்க முயன்றபடி அவரைப் பார்த்தேன்.
‘‘என்னை முறைப் பது அப்புறம் இருக் கட்டும். முதல்ல அவ யார்னு கண்டுபிடி. ஒரு மணி நேரம்தான் அவகாசம்!’’
‘ஏய் கிழவா... இரு, உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன். முதல்ல அந்த ‘ரம்பை’ யாருன்னு கண்டுபிடிக்கிறேன்!’’ - மனதுக்குள் கறுவியபடி எழுந்தேன்.
இவருக்கு இப்போது ஐம்பத்திரண்டு வயதாகிறது. அந்தப் பெண்ணுக்குக் கட்டாயம் இப்போது நாற்பத்தைந்து வயதாவது ஆகியிருக்கும். அதனால், இளம் வயதுப் பெண்களை ‘லிஸ்ட்’டிலிருந்து நீக்கிவிடலாம். அப்படியே நீக்கினாலும், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் இரு பக்கமும் சேர்த்து, கிட்டத்தட்ட முப்பது மாமிகளாவது தேறுவார்களே!
மலைப்பாக இருந்தது. கூடவே சுவாரஸ்யமும் கூடியது.
‘‘ஏங்க, உங்க மனசைக் கவர்ந்த அந்த ரதி, மாப்பிள்ளை வீடா, பெண் வீடா?’’
‘‘ஆமா, எல்லாத்தையும் கேளு. அவ பச்சைப் புடவை கட்டியிருக்காளா, மஞ்சள் புடவையா? பருமனா, ஒல்லியா? பந்தயத்துல நீயாக முயன்று ஜெயிக்கிறது தான் உண்மையான வெற்றி!’’
‘‘ஐயே, ரொம்பத்தான் அலட்டறீங்க!’’
கல்யாண சத்திரத்தின் கீழ்ப் பகுதி சாப்பாட்டு ஹால். முதல் மாடியில் திருமண மேடையும், மேடையின் எதிரே பெரிய ஹாலும், ஹாலின் இரு பக்கமும் அறைகளும் இருந்தன. இடப் பக்கம் இருந்த அறைகளில் பெண் வீட்டாரும், வலப் பக்க அறைகளில் மாப்பிள்ளை வீட்டாரும் தங்கியிருந்தார்கள். இதனால், ஹாலின் ஒரு மூலையில் இருந்தபடியே இரு பக்க வீட்டாரையும் என்னால் கண்காணிக்க முடிந்தது.
முதலில், இவருக்குப் பிடித்த பெண் எப்படி இருப்பாள் என மனதுக்குள் ஒரு உருவம் வரைந்து பார்த்தேன். டி.வி. சீரியல்கள் வரும்போதும், பத்திரிகை களில் போட்டோக்கள், ஓவியங்களைப் பார்க்கும்போதும் இவர் அடிக்கும் கமென்ட்டுகளை யோசித்தேன்.
பெண் வீட்டைச் சேர்ந்த சாரதா, மாலதி, ருக்மிணி, சுகன்யா என என் எதிரில் நடமாடிய பெண்களை உற்றுப் பார்த்தேன்.
சாரதாவுக்கு சுருள்முடி. ‘ஸ்ப்ரிங் முடி’ என்று கேலி செய்வார் இவர். மாலதியின் கண்கள் சிறியவை. ‘பிள்ளையார் கண்’ என்பார். ருக்மிணிக்கு கிளி மூக்கு. ம்ஹூம்! சுகன்யாவுக்கு ஆம்பிளைக் குரல்... இப்படியே வரிசையாக எல்லாரையும் பார்த்து முடித்தேன். யாரும் இவர் ரசனையோடு செட் ஆகவில்லை.
அடுத்ததாக, பிள்ளை வீட்டாரின் பெண்மணிகளைக் கண்களால் அளக்கத் தொடங்கினேன்.
இரட்டை மண்டை, கத்தி மூக்கு, தெத்துப் பல், பூனைக் கண், யானைக் காது என வடிகட்டியதில், என்னவரின் மானசீக நாயகியோடு பொருந்திப் போகிற மாமிகளின் எண்ணிக்கை சொற்பமாகியது. மிச்சம் இருக்கும் நாலைந்து பேரில்தான் என்னவரின் ‘ரதி’ இருக்கவேண்டும்!
அதோ, பருமனான உடல்வாகில் ஒரு மாமி. பையனின் பெரியம்மா வாம். அவள் சிரிக்கும்போது, அவள் கண்களும் சேர்ந்து சிரித்தன. சின்ன நெற்றி, எடுப்பான மூக்கு, சிறிய காதுகள், மெல்லிய உதடுகள்... அதிராத குரலில் பேசினாள். எல்லாமே என் கணவரின் ரசனையோடு ஒத்துப் போயிற்று. ஆனால், அவளின் பருமனான உடல்வாகுதான் கொஞ்சம் இடித்தது. என்னவருக்குக் கொடி போன்ற இடை உள்ளவள்தான் கனவுக் கன்னியாக இருக்கமுடியும். சரி, அதனால் என்ன, சின்ன வயதில் சிக்கென்று இருந்திருப்பாளாயிருக்கும்!
என் கணவர் வைத்த பந்தயத்தில் ஈடுபட்டு, அவர் சொன்னது போல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே, அந்தக் காலத்தில் அவர் மனதில் இருந்த சித்திரத்தைக் கண்டுபிடித்து விட்ட குஷியில் என்னவரை நோக்கி நான் கிளம்ப யத்தனித்தபோது, என் தோளைத் தொட்டாள் ஒரு பெண்.
திரும்பினேன். மாப்பிள்ளையின் தங்கை.
‘‘என்ன மாமி, எங்க பெரியம்மாவின் உருவத்தைப் பார்த்து மலைச்சுப் போய் நின்னுட்டீங்க? சின்ன வயசுலேர்ந்தே அவங்க ரெட்டை நாடி உடம்புதானாம். எப்படி இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்னு எங்க தாத்தாவும், பாட்டியும் ரொம்பக் கவலைப்படுவாங்களாம். ஆனா, அதிர்ஷ்டத்தைப் பாருங்கோ, இந்த மாதிரி குண்டுப் பொண்ணுதான் வேணும்னு தேடி வந்து கல்யாணம் பண்ணிட்டாராம், வசதியான நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு பெரிய பிசினஸ்மேன். அதோ, அங்கே உட்கார்ந் திருக்கார் பாருங்கோ, அவர்தான் எங்க பெரியப்பா!’’
சிரித்தபடி அவள் காட்டிய திசையில் பார்த்தேன். ‘பெரியம்மா’வுக்குச் சற்றும் குறைவில்லாத சைஸில் இருந்தார் ‘பெரியப்பா’.
‘அப்படின்னா, இந்த மாமியும் இல் லையா? அப்போ வேற யார் அந்த ரதி?’
சட்டென ஒரு யோசனை! என் கணவருக்கே தெரியாமல், அவர் பார்வையைக் கவனித்தால் தெரிந்துவிடுமே! எத்தனை வயதானால் என்ன, ஜொள் விடுவதில் ஆண்களுக்குதான் ஒரு விவஸ்தையே கிடையாதே!
திரும்பிப் பார்த்தேன். மனிதர் நாற்காலியில் அமர்ந்தபடியேஆனந்த மாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தார். மணி பார்த்தேன். என் கணவர் வைத்த கெடுவுக்கு இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. போச்சு! இந்த முறை தோல்வி எனக்குதானா?
‘‘ஏய், என்னடி மசமசன்னு நிக்கிறே? மாப்பிள்ளை அழைப்புக்கு நேரமாச்சே! போய் மூஞ்சை அலம்பிக்கிட்டு, புடவையை மாத்திக்கிட்டு வா! போ!’’
இவரின் அக்கா வந்து விரட்டவும், எங்கள் பெட்டி இருந்த அறைக்குள் நுழைந்தேன்.
முகத்தை சோப் போட்டு அலம்பிக்கொண்டு, கண்ணாடி முன் நின்ற போதுதான் கவனித்தேன்... சின்ன நெற்றி, பெரிய கண்கள், அளவான மூக்கு, சிறிய காதுகள், எந்த வடுவும் இல்லாத முகம், சதை போடாத உடம்பு... முதன்முதலாக என் உருவத்தைக் கண்ணாடியில் அந்நிய மனுஷி போல் கவனித்தேன்.
சட்டென எனக்குள் மின்னல்! என்னவரின் மனதிலிருந்த அந்தச் சித்திரம் யாரென்று தெரிந்து விட்டது.
குபீரென்று பூத்த சந்தோஷத்துடன், அவர் இருக்குமிடம் நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். தூக்கத்திலிருந்து விடுபட்டு, எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர், என்னைக் கண்டதும் சிரித்தார்.
‘‘பலே! யார்னு சரியா கண்டுபிடிச்சுட்டே போலிருக்கே!’’
அவர் கண்சிமிட்டவும், வெட்கத்துடன் தலை குனிந்தேன்.
‘‘ஆமாம். அது சரி, எப்படித் தெரிஞ்சுது நான் சரியா கண்டுபிடிச்சுட் டேன்னு?’’
‘‘யாருன்னு தெரியாம விழிச்சிருந்தா, உன் முகத்துல குழப்பம் இருந்திருக்கும். அல்லது, வேற யாரையோ நீ தப்பாக் கண்டுபிடிச் சிருந்தா, உன் முகத்துல பொறாமை எட்டிப் பார்த்திருக்கும்! சரியா கண்டுபிடிச்சதனாலேதான், அன்னிக்குப் பெண் பார்க்க வந்தப்ப உன் முகத்துல இருந்த அதே வெட்கத்தை இப்பவும் பார்க்க முடியுது!’’
வெடிச்சிரிப்புடன் அவர் சொல்ல... சுற்றுப்புறத்தையும் மறந்தவளாக, சொர சொர தாடியுடனான அவரது கன்னத்தை வலிக்காமல் கிள்ளினேன்.


நன்றி  - விகடன்

0 comments: