ஆக்ஷன் மசாலா படங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் அதிகரித்துவரும் தமிழ்சினிமாவில் விஜய்சேதுபதியின் பாதை வேறாக இருக்கிறது. ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற மென்னுணர்வுத் திரைப்படத்தைத் தயாரித்து அதில் 55 வயது முதியவராக ‘கைலாசம்’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படம், இரண்டு சர்வதேசப் படவிழாக்களுக்குத் தேர்வாகியிருக்கிறது என்ற செய்தியை முதன்முதலாக பகிர்ந்தபடி நம்மிடம் உரையாடினார் விஜய் சேதுபதி…
இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத கதாபாத்திரம் எது?
எமலிங்கம். ரசிகர்கள், இயக்குநர்கள் என இரண்டு தரப்பிலும் ‘புறம்போக்கு’ படத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ‘புறம்போக்கு’ ஒரு தோல்விப்படம் என்று ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு சிலர் தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையை அறிந்துகொள்ளத் திரையரங்குகளுக்குப் பயணம் செய்துவிட்டு வந்தவன் நான். படப்பிடிப்புக்காகச் செல்லும் எல்லா ஊர்களிலும் ‘எமலிங்கம்… எமலிங்கம்’ என்று ரசிகர்கள் என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறார்கள். எமலிங்கத்துக்கு அவ்வளவு ரீச் கிடைத்திருக்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஜனநாதன் சார் என்னைக் கூப்பிடுவார் என்று நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அவர் எனக்கு இத்தனை பெரிய கதாபாத்திரம் கொடுத்தது எனக்குப் பெரிய கவுரவம் என்று சொல்ல வேண்டும். அவரது அரசியல் அறிவாகட்டும், நடிகனுக்கு அவர் தரும் சுதந்திரமாகட்டும், யார் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்பதிலாகட்டும், அவரைப் போன்ற இயக்குநர்கள் நம்மிடம் அபூர்வம். எமலிங்கம் நான் மிகவும் விரும்பி நடித்த கதாபாத்திரம்.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறீர்கள்?
படப்பிடிப்பில் நடிக்கும்போது சில வசனங்கள் நம்மையும் அறியாமல் வந்து விழும். இயக்குநரின் அனுமதியோடு, அவருக்கு உவப்பாகவும் காட்சிக்குப் பொருத்தமாகவும் இருந்தால் அதைப் பயன்படுத்துவோம். இது எல்லா நடிகர்களும் செய்வதுதான். ஆனால், இந்தப் படத்தின் காட்சிகளைப் பற்றி இயக்குநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு என் மீது நம்பிக்கை வந்துவிட்டது.
“நீங்கள் வசனம் எழுதுங்கள் சரியாக வரும்” என்றார், இயக்குநர் பிஜூ சார். வசனம் எழுதுவதற்கான தகுதி இதுவல்ல என்று நான் மறுத்தேன். ஆனால் அவர் என்னை விடுவதாகயில்லை. நாம உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியாகப் பேசுவோம் என்றார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியாகப் பேசினோம். சில காட்சிகளை நடித்துப் பார்த்தோம். அப்படி இந்தப் படத்தில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களையும் நான் நடித்துப் பார்த்தேன். காட்சிகளைப் பேசும்போதும் நடிக்கும்போதும் ரெக்கார்ட் செய்தோம். பிறகு அதைப் போட்டுப் பார்த்து வசனம் எழுதினேன். இந்த முறை எல்லாப் படத்துக்கும் அல்லது எல்லாருக்கும் சரியாக வருமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தப் படத்தின் இயக்குநர் பிஜு. விஸ்வநாத்தை நீங்கள்தான் அழைத்து வந்தீர்களா?
இல்லை. அவருக்கு அறிமுகமே தேவையில்லை. ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பவன். ‘பீட்சா’ படத்துக்கு முன்பு நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அவர் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று விரும்பினார். அப்போது வேறோரு கதையை அவர் இயக்க இருந்தார். தயாரிப்பாளர் கூட முடிவான நிலையில் அந்தப் படம் நடக்காமல் போய்விட்டது. பிறகுதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ கதையை அவரிடம் கேட்டு அதை நான் தயாரிக்கிறேன் என்று அழைத்துவந்தேன்.
இயக்குநருக்கு எடிட்டிங் தெரியவில்லை என்றும், படத்தை நீங்கள்தான் எடிட் செய்தீர்கள் என்று செய்தி வெளியானதே?
அப்பட்டமான பொய். பிஜூ சாரின் திறமை, படைப்புக்கு அவர் காட்டும் நேர்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தப் படத்தை தயாரித்தது, நடித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதிலும் நான் மூக்கை நுழைக்கவில்லை. அவர்தான் இந்தப் படத்தை எடிட்செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதுதான் உண்மை.
55 வயது முதியவர் தோற்றத்தை விரும்பி ஏற்க என்ன காரணம்?
‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயது தோற்றத்தில் நடித்தது தானாக அமைந்த ஒன்று. ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோரைவிட எனது கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நலன் குமாரசாமி விரும்பினார். இந்தப் படத்தில் நான்தான் நடிக்கப்போகிறேன் என்பது முதலில் முடிவாகவில்லை. வசனமெல்லாம் எழுதி முடித்துவிட்டேன்.
முதியவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த நடிகர் வேறொரு படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அவர்தான் நடிக்க வேண்டும் என்று நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். ஆனால், குறித்த காலத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை. படத்தையும் உடனே தொடங்கவேண்டும். அதனால் இயக்குநரிடம் நானே நடிக்கட்டுமா, மேக் அப் டெஸ்ட் எடுத்து பார்க்கலாமா என்றேன். அவர் சம்மதித்தார். ஏன் நாமே முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்றுதான் இந்தக் கதாபாத்திரத்தை முயன்றேன். அது சரியாக வந்திருக்கிறது என நம்புகிறேன்.
இந்தப் படம் முதுமையைப் பற்றிப் பேசுகிற படமா?
நிச்சயமாக இல்லை. இதுதான் இந்தப் படத்தின் கதை என்று வரையறுத்துச் சொல்லவே முடியாது. 55 வயது முதியவரின் ‘பேபிஸ் டே அவுட்’. அப்பாவை இழந்து ஒரு மாதமே ஆன ரமேஷ் திலக். அவசரகால அழைப்புக்கு ஆம்புலன்சில் வரும் மருத்துவ உதவியாளர். அவரது அப்பாவைப் போலவே அடம்பிடிக்கும் 55 வயது கைலாசத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வருகிறார். அந்தப் பெரியவரிடம் அவன் மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவரை எப்படிச் சமாளிப்பது என்பதே அவனுக்கு சவாலாகிறது. அவர்களுக்குள் உணர்வு ரீதியான இணைப்பும் கிடையாது. ஆனால் அந்தப் பயணத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் நம் ஒவ்வொருவரையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.
பயணம் நெடுகிலும் கொட்டிக் கிடக்கும் அபத்த நகைச்சுவை ரசிகர்களுக்கு அனுபவமாக இருக்கும். பயணத்தின் முடிவு என்ன என்பதும் இந்தப் படத்துக்கு முக்கியமானது. ரசிகர்களுக்கு அது நிச்சயமாகப் பிடிக்கும். இந்தப் படத்தை என் அம்மாவுக்கு போட்டுக்காட்டினேன். படத்தைப் பார்த்துவிட்டு “உங்க அப்பனைப் பார்க்கிற மாதிரியே இருக்குடா!” என்று சொன்னார். அண்ணன், தங்கை ஆகியோரும் அதையேதான் சொன்னார்கள். கைலாசம் ரசிகர்களுக்கு நெருக்கமான மனிதனாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
நன்றி- த இந்து
0 comments:
Post a Comment