Wednesday, July 29, 2015

மூக்கில் ரத்தம் வடிவது ஏன்? - டாக்டர் கு. கணேசன்

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.
மூக்கு ஒரு தொட்டாற்சிணுங்கி!
சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.
மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.
இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா ' (Little’s area) என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்று பொதுவாகச் சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.
என்ன காரணம்?
குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.
சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.
மூக்கில் சதை வளர்ச்சி!
குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை' (Nasal Polyp) வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் ‘அண்ணச்சதை' (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்.
வினையாகும் விளையாட்டு!
குழந்தைகள் விளையாட்டாகக் குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பல்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக் கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து ரத்தம் கசியும்.
வெப்பச் சூழல்!
படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும்.
கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட்டாலும் இதே பிரச்சினைதான். மூக்கின் உட்பகுதிகள் இந்த வெப்பத்தால் உலர்ந்து, அங்குள்ள சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.
நோய்களும் காரணமாகலாம்!
ஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு வளைவு, காசநோய், கல்லீரல் நோய், தொழுநோய், இதயநோய், காளான்நோய், புற்றுநோய் கட்டி, ‘ஹீமோபிலியா' போன்ற ரத்த உறைதல் கோளாறுகள், சைனஸ் பிரச்சினை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி, கே சத்துக்குறைவு, ரத்தசோகை, பரம்பரை ரத்தக் கோளாறுகள், கபாலக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மது அருந்துவது போன்ற காரணங்களாலும் மூக்கு வழியாக ரத்தம் வடியலாம்.
அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் காலத்தோடு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
காரணம், இவர்களுக்குச் சாதாரணக் காரணங்களைவிட உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களால் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. இவற்றுக்கான முறையான சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையிலேயே பெற்றுவிட்டால்தான், ஆரோக்கியத்துக்கு ஆபத்து வருவதும் தடுக்கப்படும்.
என்ன பரிசோதனை?
வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.
என்ன முதலுதவி செய்வது?
பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.
இப்போது மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.
மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.
இந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.
ஐஸ் கட்டி கைவசமிருந்தால், அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.
பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம்.
இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
என்ன செய்யக் கூடாது?
மூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.
விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.
மூக்கிலிருந்து ரத்தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.
மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.
தடுப்பது எப்படி?
குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
தேவையில்லாமல் மூக்கைக் குடையும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற பொருட்களை நுழைத்து விளையாடக் கூடாது.
மிகவும் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.
அதிக வெப்பச் சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
ஒவ்வாமை நோய் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.
குளிர் காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மட்டும் மூக்கு சொட்டு மருந்து விடலாம்.
சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சத்துக் குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து

0 comments: