Friday, July 17, 2015

ஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்


நடிகர் : சஞ்சீவ் முரளி
நடிகை :ஸ்ரீரக்ஷா
இயக்குனர் :சந்தோஷ் கோபால்
இசை :சுமன்பிச்சு
ஓளிப்பதிவு :அய்யப்பன் என்
தமிழக-கேரள எல்லையில் உள்ள அரகநாடு பகுதியில் வசிக்கும் தாதாவான நெல்லை ஸ்டீபனை மற்றொரு தாதா காசிநாதன் கொலை செய்து விடுகிறான். இதனால் நெல்லை ஸ்டீபனின் அண்ணன் உடும்பு ஜோசப் (ராஜேந்திரன்) காசிநாதனை பழி வாங்க திட்டம் தீட்டி வருகிறான்.

இதே ஊரில் வேலை வெட்டியின்றி சுற்றித் திரியும் நாயகன் ஹரி (சஞ்சீவ்), தாதாவான காசிநாதனுடன் நட்பு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார். தாதாவுடன் நட்பு வைத்துக் கொண்டால் தனக்கு மிகப் பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைக்கும் இவர், மயில்சாமி மூலமாக காசிநாதனுடன் நட்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார்.

அப்போது, காசிநாதனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று காசிநாதன் கூட்டாளிகள் பேசுகிறார்கள். இதையறிந்த ஹரி காசிநாதனுக்கு நான் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி விட்டு செல்கிறார். ஆனால், ஊரில் யாரும் காசிநாதனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.

இந்த சமயத்தில் கேரளாவில் இருந்து கோவில் பணிக்காக அந்த ஊருக்கு வரும் தலைவாசல் விஜய்யின் பெண்ணான நாயகி பாக்யாவை (ஸ்ரீரக்ஷா) காசிநாதனுக்கு பெண் பார்க்கிறார் ஹரி. ஆனால் தலைவாசல் விஜய் குடும்பமோ ஹரிதான் மாப்பிள்ளை என்று சம்மதிக்கிறார்கள். இந்த குழப்பத்திற்கு மத்தியில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. அப்போது தாதா காசிநாதன்தான் மாப்பிள்ளை என்று தெரியவர, நிச்சயதார்த்தத்தை நிறுத்துகிறார் தலைவாசல் விஜய்.

இதனால், அவமானத்தில் முகம் சிவக்கும் காசிநாதன், “யார் தடுத்தாலும் உன் பொண்ணை திருமணம் செய்தே தீருவேன்” என்று சவால் விட்டு செல்கிறான்.

காசிநாதன் தனது சவாலில் ஜெயித்தாரா?, தாதாக்கள் பகையின் உச்சக்கட்டம் என்ன? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஹரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சீவ் முரளி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு நாயகனுக்கு உரிய அந்தஸ்து இவருக்கு அமையவில்லை. தாதாவுடன் நட்பு வைத்துக் கொண்டால் ஊருக்குள் நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்று இவர் பேசும் வசனம், நம்ம ஊருக்குள்ளும் இதுபோல் சிலர் இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு இல்லாதது வருத்தம்.

நாயகியாக பாக்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரக்ஷா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். குடும்பத்திற்காக தாதாவை திருமணம் செய்ய சம்மதிப்பதும், நாயகன் மீதுள்ள காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் என்று நடிப்பில் வேறுபாடு காண்பித்திருக்கிறார்.

தாதா கதாபாத்திரத்திற்கு காசிநாதன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சாகர். இவர் வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். திரைக்கதை இவரை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. கதாநாயகனை விட இவரே அதிக காட்சிகளை வசப்படுத்தியிருக்கிறார்.

நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபால். படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பும் பிற்பாதியில் சற்று சோர்வுமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரனுக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மற்ற கதாபாத்திரங்களிடமும் இன்னும் வேலை வாங்கியிருக்கலாம்.

சுமன்பிச்சு இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அய்யப்பனின் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’ கம்பீரம் குறைவு.

நன்றி - மாலைமலர்